உள்ளடக்கத்துக்குச் செல்

பகிர்வுப் பெற்றோர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பகிர்வுப் பெற்றோர்(Shared parenting), பகிர்வு வாழ்விடம், இணைந்த இல்லம், பகிர்வு காப்பு அல்லது இணைந்த மக்கட் பாதுகாப்பு திருமண முறிவு அல்லது பிரிவு ஏற்பட்ட பின்னர் பெற்றோர் இருவரும் தம் மக்களை பாதுகாக்கும் முறைமை ஆகும். மக்களைப் பேணும் நேரம் இருவரிடையேயும் சமமாக அல்லது ஏறத்தாழ சமமாக வழங்கப்படுகின்றது.[1] இத்தகைய முறைமை குழந்தைகளுக்கு இரு பெற்றோர்களிடையேயும் அண்மித்து இருக்கவும் அன்பைப் பெறவும் உரிமை உள்ளவர்கள் என்ற கருத்தியலை அடிப்படையாகக் கொண்டது. எந்தவொரு குழந்தையும் தன்னுடைய பெற்றோரிடமிருந்து பிரிந்திருக்கக் கூடாது என்பதே இதன் இலக்காகும்.

பகிர்வுப் பெற்றோர் என்ற சொல்லாக்கம் மணமுறிவு, பிரிந்து வாழ்தல் மற்றும் இணைந்து வாழாத பெற்றோர்களுக்கானது; மாறாக, பகிர்ந்தப் பேணல் திருமணம் என்பது குழந்தை வளர்ப்பு, வருமான ஈட்டம், வீட்டு வேலைகள், மனமகிழ்வு நேரம் ஆகிய நான்கையும் சமமாக பகிர்ந்து கொண்டு திருமணம் மேற்கொள்வதாகும். பகிர்வுப் பெற்றோருக்கு எதிராக பிரிந்த காப்பு அமையும்; இதில் சில குழந்தைகள் முதன்மையாக அன்னையுடனும் அவர்களின் சில உடன்பிறப்புகள் முதன்மையாக தந்தையுடனும் வாழ்வதாகும்.

பறவைக் கூடு காப்பு என்ற சிறப்பு வகை பகிர்வுப் பெற்றோர் முறையில் குழந்தைகள் எப்போதும் தங்கள் இல்லத்திலேயே வாழ்ந்திருக்க, அன்னையும் தந்தையும் முறை எடுத்து அவர்களுடன் தங்குவதாகும். இத்தகைய முறை நெடுங்கால ஏற்பாடாக கொள்வது கடினமாக இருக்கும்; மூன்று இல்லங்களை பராமரிக்க வேண்டியிருப்பதால் செலவு கூடுதலாகும். எனவே இத்தகைய முறை தற்காலிகமாக, பெற்றவரில் ஏதேனும் ஒருவர் தகுந்த இல்லத்தை ஏற்படுத்திக் கொள்ளும் வரை, மேற்கொள்ளப்படுகின்றது.[2]

நிகழ்வுகள்[தொகு]

பகிர்வுப் பெற்றோர் முறை கூடுதலாகப் பரவி வருகின்றது. குழந்தைக் காப்பை ஒருவரிடையே மட்டுமே ஒப்படைப்பதும் பகிர்வுப் பெற்றோர் முறையும் வெவ்வேறு நாடுகளில் பலவிதமாக உள்ளது. எசுக்காண்டினாவியாவில் இது மிகவும் பரவலாக உள்ளது.[3][4][5]

2005/06இல் முப்பத்து நான்கு மேற்கத்திய நாடுகளில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், பகிர்வுப் பெற்றோராலும் தனிப் பெற்றோராலும் வளர்க்கப்பட்ட 11-15-அகவை சிறுவரிடையேயான விகிதம் சுவீடன் (17%), ஐசுலாந்து (11%), பெல்ஜியம் (11%), டென்மார்க் (10%), இத்தாலி (9%), நோர்வே (9%) என இருந்தது. மாறாக உக்ரைன், போலந்து, குரோவாசியா, துருக்கி, நெதர்லாந்து மற்றும் உருமேனியா நாடுகளில் இந்த விகிதம் 2% அல்லது அதற்கும் குறைவாகவே இருந்தது. ஆங்கிலம் பேசும் நாடுகளில் கனடா, ஐக்கிய இராச்சியத்தில் 7% ஆகவும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் அயர்லாந்தில் 5% ஆகவும் இருந்தது.[6]

எசுக்காண்டினாவியா நாடுகளில் பகிர்வுப் பெற்றோர் முறையின் பரவல் கூடுதலாகி வருகின்றது.[3][4][5] 2016/17 ஆண்டில் சுவீடனில் இது 28 விழுக்காடாக உயர்ந்துள்ளது; இதில் 26% சிறுவர்கள் 0-5 அகவை கொண்டவர்களாகவும், 34% சிறுவர்கள் 6-12 அகவையினராகவும், 23% சிறுவர்கள் 13-18 அகவையினராகவும் இருந்தனர்.[7]

பெற்றோர் பெறும் பயன்கள்[தொகு]

பகிர்வு பெற்றோர் கருத்தியல் முதன்மையாக சிறுவர்களின் நலன் கருதியே இருப்பினும் இதனால் பெற்றோர்களுக்கும் பலன்கள் உள்ளன. இரு பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுடன் நேரம் செலவிட்டு மகிழ முடிகிறது. அதே நேரத்தில் குழந்தை தங்கள் காப்பில் இல்லாத நேரத்தில் தங்கள் பணி அல்லது மனமகிழ்வு நிகழ்வுகளில் முழுமையாக ஈடுபட முடிகிறது. தனிப் பெற்றோராக இருந்தால் ஆயா (குழந்தைக் காப்பாளர்) ஏற்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். தவிரவும், இரு பெற்றோருக்கும் தங்கள் பணிவாழ்க்கையில் முன்னேற சமமான வாய்ப்புகள் கிடைக்கின்றன. குறிப்பாக, பாலின ஊதிய இடைவெளியை குறைக்கும் முயற்சிகளில் இது முக்கிய பங்காற்றும் என சிலர் கருதுகின்றனர்.[8][9][10][11]

சட்டவாக்கம்[தொகு]

சில சட்டமன்றங்கள் பகிர்வுப் பெற்றோர் முறைக்கு சட்டபூர்வ மறுக்கத்தக்க அனுமானத்தை நிறுவியுள்ளன; இதன்படி பகிர்வுப் பேணுதலே பெரும்பாலான வழக்குகளில் செயாநிலை முறையாகவும் நீதிமன்றங்கள் குறிப்பிட்ட சூழலில் குழந்தைக்கு இந்த முறைமை சிறப்பானது அல்ல (குழந்தையிடம் தவறான நடத்தை, கவனிப்பின்மை) என சாட்சிகள் கிடைக்கப் பெற்றால் மட்டுமே மாற்று ஏற்பாடுகளை ஆணையிட அனுமதிக்கின்றது. பகிர்வுப் பெற்றோரை முன்னெடுக்கும் சட்டங்களை கனடாவும்[12][13] ஐக்கிய அமெரிக்காவும் நிறைவேற்றி உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

 1. "Shared Custody Definition". Duhaime's Law Dictionary. Archived from the original on 2020-10-28. பார்க்கப்பட்ட நாள் 2021-09-24.
 2. Duhaime's Law Dictionary, Bird's Nest Custody Definition பரணிடப்பட்டது 2021-04-20 at the வந்தவழி இயந்திரம்
 3. 3.0 3.1 Fransson, Emma; Sarkadi, Anna; Hjern, Anders; Bergström, Malin (2016-07-01). "Why should they live more with one of us when they are children to us both?: Parents' motives for practicing equal joint physical custody for children aged 0–4". Children and Youth Services Review 66: 154–160. doi:10.1016/j.childyouth.2016.05.011. 
 4. 4.0 4.1 Lois M Collins (February 5, 2016). "What 'shared parenting' is and how it can affect kids after divorce". Deseret News இம் மூலத்தில் இருந்து ஏப்ரல் 20, 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190420220539/https://www.deseretnews.com/article/865646816/What-shared-parenting-could-mean-to-kids-after-divorce.html. 
 5. 5.0 5.1 Linda Nielsen (2018). "Joint Versus Sole Physical Custody: Children's Outcomes Independent of Parent–Child Relationships, Income, and Conflict in 60 Studies". Journal of Divorce & Remarriage 59 (4): 247–281. doi:10.1080/10502556.2018.1454204. 
 6. Bjarnason T, Arnarsson AA. Joint Physical Custody and Communication with Parents: A Cross-National Study of Children in 36 Western Countries பரணிடப்பட்டது 2017-11-19 at the வந்தவழி இயந்திரம், Journal of Comparative Family Studies, 2011, 42:871-890.
 7. Statistics Sweden, Barns boende (växelvis boende, hos mamma, hos pappa, etc.) 2012—2017, November 11, 2018.
 8. Emma Johnson (May 23, 2018). "Close the pay gap? Get dads involved? Shared visitation, no child support". wealthysinglemommy.com.
 9. Eillie Anzilotti (April 3, 2017). "Are Custody Laws Standing In The Way Of Gender Equity?". Fast Company.
 10. "Equal Parenting and Caregiving". Women’s Equality Party.
 11. Shellie Karabell (October 30, 2016). "Want To Close The Pay Gap? Call On Dad!". Forbes Magazine.
 12. Barbara Kay, Scheer should ensure fathers have the same parenting rights as mothers in child custody disputes, National Post, May 31, 2017.
 13. Maurice Vellacott (Saskatoon—Wanuskewin), C-560, Parliament of Canada

வெளி இணைப்புகள்[தொகு]

 • Equally Shared Parenting.com பகிர்வுப் பெற்றோர் சட்டங்கள் குறித்த தகவல் மற்றும் செய்திகளை ஒருங்கிணைக்கும் வலைப்பதிவு.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பகிர்வுப்_பெற்றோர்&oldid=3614190" இலிருந்து மீள்விக்கப்பட்டது