உள்ளடக்கத்துக்குச் செல்

பகன் சார்கே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பகன் சார்கே திருவிழாவின் போது பக்தர்கள் தங்கள் தோள்களில் தெய்வத்தின் சிலையை சுமக்கிறார்கள்.
பகன் சார்கே திருவிழாவில் நிகழ்த்தப்படும் நயாட்டுமாரு அஜ்மா பயாகான் நடனம்

பாசா சார்கே என்றும் அழைக்கப்படும் பகன் சார்கே (Pahan Charhe) என்பது நேபாள மண்டலங்களில் ஆண்டுதோறும் நிகழ்த்தப்படும் மிகப்பெரிய மத விழாக்களில் ஒன்றாகும். இது காத்மாண்டுவில் குறிப்பிடத்தக்க உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. மேலும் அணிவகுப்புகள், முகமூடி நடனங்கள், குதிரை பந்தயம் மற்றும் வெவ்வேறு இடங்களில் மூன்று நாட்கள் நடைபெறும் மத வழிபாடு உள்ளிட்ட செயல்பாடுகளின் தொகுப்பைக் கொண்டுள்ளது.[1]

பகன் என்றால் நேபால் பாசாவில் "விருந்தினர்" என்றும் "நண்பர்" என்றும் பொருள். முழுநிலவு நாளுக்கு முதள் நாள் திருவிழா தொடங்குகிறது. நண்பர்கள் மற்றும் உறவினர்களை தங்களின் வீட்டிற்கு அழைப்பதும், அவர்களுக்கு விருந்து வைத்து கௌரவிப்பதும் திருவிழாவின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும். பகன் சார்கே சந்திர நாட்காட்டியின்படி நடத்தப்படுகிறது. எனவே தேதிகள் மாறுபடும். 2015 ஆம் ஆண்டில், திருவிழா 19-21 மார்ச் முதல் குறிக்கப்பட்டது.

முதல் நாள்

[தொகு]

முதல் நாள் மாலையில் சிவன் வடிவங்களில் ஒன்றான லுகு மகாதயா என்ற தெய்வத்தை வழிபடுவதன் மூலம் கொண்டாட்டங்கள் தொடங்குகின்றன. லுகு மகாதயா என்றால் "மூழ்கிய மகாதயா" என்று பொருள். மேலும் அவரது உருவம் தரையில் ஒரு துளைக்குள், பெரும்பாலும் ஒரு குப்பைகள் அடங்கிய மூலையில் பொறிக்கப்பட்டுள்ளது. வீட்டு உரிமையாளர்கள் இறைச்சி மற்றும் மது உள்ளிட்டவை தெய்வத்துக்கு படைப்பதன் மூலம் தங்கள் பக்தியை வெளிபடுத்துகிறர்கள். பிரகாசமான மஞ்சள் மலர்கள் மற்றும் முள்ளங்கி மலர்கள் திருவிழாவின் சிறப்பு பிரசாதங்கள். அவை முறையே தங்கம் மற்றும் வெள்ளியைக் குறிக்கின்றன.

காத்மாண்டுவில் உள்ள நயாட்டாவில், புனித முகமூடி நடனங்கள் தெரு மூலையில் உள்ள கல் மேடையில் நிகழ்த்தப்படுகின்றன. இது நயாடமாரு அஜீமா பியாகான் அல்லது சுவேத்கலி நடனம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நடன நாடகம் பல்வேறு தெய்வங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முகமூடிகளை அணிந்த நடிகர்களால் நிகழ்த்தப்படுகிறது. இந்த நடனம் மாலையில் தொடங்கி இரவு முழுவதும் நீடிக்கும். நயாட்டா என்பது சுற்றுப்புறப் பகுதிகளில் நாராதேவி என்றும் அழைக்கப்படுகிறது.[2]

இரண்டாம் நாள்

[தொகு]

இரண்டாவது நாளின் முக்கிய நிகழ்வு, குதிரை திருவிழாவான கோதே யாத்திரையுடன் ஒத்துப்போகிறது. குதிரைத் திருவிழா அல்லது கோதே ஜாத்ரா என்பது துண்டிகேலில் நடைபெறும் கண்கவர் நிகழ்வுகளில் ஒன்றாகும்.[3] இது மார்ச் மாதத்தில் நடைபெறும். முக்கிய நிகழ்வாக குதிரைப் பந்தயங்கள் இடம்பெறுகின்றன. இது பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய ஒரு பாரம்பரியமாகும். கோதே ஜாத்ராவுடன் இணைந்த பகன் சார்கே திருவிழாவின் போது, ​​பல்வேறு அஜிமா தாய் தெய்வங்களின் உருவங்களைக் கொண்ட சிறிய ஆலயங்கள் அவற்றின் உதவியாளர்களின் தோள்களில் சுமந்து செல்லப்பட்டு, ஒரு பழங்கால விழாவிற்காக துண்டிகேலில் ஒன்றுகூடப்படுகின்றன. இரவில் தாமதமாக இசைக்குழுக்களுக்கு மத்தியில் நடைபெறும் இந்த நிகழ்வின் போது, ​​தெய்வங்களின் பரிவாரங்களுக்கிடையில் எரியும் தீப்பந்தங்கள் பரிமாறிக்கொள்ளப்படுகின்றன. இந்த விழா அடுத்த நாள் மதியம் காத்மாண்டுவின் ஆசனில் மீண்டும் மீண்டும் நிகழ்த்தப்பபடுகிறது. அண்டை நகரமான இலலித்பூரில் உள்ள பால் குமாரியில், ஒரு குதிரை பந்தயம் நடத்தப்படுகிறது.[4]

மூன்றாம் நாள்

[தொகு]
ஆசனில் நிகழ்த்தப்படும் தயா லவாகேகு.

லுமாதி அஜீமா, கங்கா அஜீமா மற்றும் தேபாஹா அஜீமா ஆகிய மூன்று அஜீமா தாய் தெய்வங்கள் தயா லவாகேகு விழாவிற்காக ஆசனின் சந்தை சதுக்கத்தில் கூடியிருப்பது இறுதி நாள் நிகழ்வாகும். நிகழ்வுக்கு முன்பு, காத்மாண்டுவின் தெருக்களில் இசைக்குழுக்களால் இந்த தெய்வங்களின் சிலைகள் அணிவகுத்துச் செல்லப்படுகின்றன. பல்லக்கை ஏந்துபவர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் பின்பற்றுபவர்கள் அந்தந்த சுற்றுப்புறங்களை குறிக்கும் சிவப்பு, நீலம் மற்றும் மஞ்சள் தொப்பிகளை அணிகிறார்கள். பக்தர்கள் கடவுளுக்கு காணிக்கைகளை வழங்க அனுமதிக்கும் வகையில் ஊர்வலங்கள் அடிக்கடி நிறுத்தப்படுகின்றன. பல்லக்குகள் பல்வேறு வழிகள் வழியாக ஆசனை அடையும் போது, தயா லவாகேகு விழா முடிவடைகிறது.

சோகமான இசையுடன் கூடிய பருவகால பாடல் ஒன்று பகன் சார்கே கொண்டாட்டங்களின் கருப்பொருள் இசையாக உள்ளது. தாய் தெய்வங்களின் ஊர்வலங்களில் இசைக்குழுக்களால் இந்தப் பாடல்கள் பாடப்படுகின்றன. [5] வெளிநாடுகளில் வசிக்கும் நேபாளிகள் கூட்டங்களை நடத்துவதன் மூலம் திருவிழாவைக் கொண்டாடுகிறார்கள்.[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Sāyami, Dhūsvām (1972). The Lotus & the Flame: An Account on Nepalese Culture. Kathmandu: Department of Information, Ministry of Communication, HMG, Nepal. p. 35.
  2. Singh, Ekaram (2006). "Swetkali Dance of Naradevi". In Prajapati, Subhash Ram (ed.). The Masked Dances of Nepal Mandal. Madhyapur Art Council. p. 21. ISBN 99946-707-0-0.
  3. Proksch, Andreas; et al. (1995). Images of a century: the changing townscapes of the Kathmandu Valley. Deutsche Gesellschaft für Technische Zusammenarbeit. p. 40. Retrieved 5 February 2014.
  4. "Ghode Jatra being marked today". Republica (Kathmandu). 30 March 2014. http://www.myrepublica.com/portal/index.php?action=news_details&news_id=71857. பார்த்த நாள்: 2 April 2014. 
  5. Sāyami, Dhūsvām (1972). The Lotus & the Flame: An Account on Nepalese Culture. Kathmandu: Department of Information, Ministry of Communication, HMG, Nepal. p. 33.
  6. "Paha Chahre festival celebrated in the UK". Republica (Kathmandu). 3 April 2014. http://www.myrepublica.com/portal/index.php?action=news_details&news_id=72094. பார்த்த நாள்: 3 April 2014. 

வெளி இணைப்புகள்

[தொகு]

Pahachare - Festivals of Newars

"https://ta.wikipedia.org/w/index.php?title=பகன்_சார்கே&oldid=4221634" இலிருந்து மீள்விக்கப்பட்டது