ந. நன்மாறன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ந. நன்மாறன்
தமிழகச் சட்டமன்ற உறுப்பினர்
தனிநபர் தகவல்
பிறப்பு 1947 மே 13
இறப்பு (அகவை 74)
மதுரை
அரசியல் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
வாழ்க்கை துணைவர்(கள்) சண்முகவள்ளி[1]
பிள்ளைகள் 2 மகன்கள்

ந. நன்மாறன் (N. Nanmaran, மே, 13, 1947 - அக்டோபர் 28, 2021) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர் ஆவார். மேடைக் கலைவாணர் என்றழைக்கப்பட்டவர், தனது நகைச்சுவைப் பேச்சால் மார்க்சியக் கருத்துகளைப் பரப்பியவர். இவர் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 2001 ஆம் ஆண்டில் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] இவர் 2006 ஆம் ஆண்டிலும் இதே தொகுதியிலிருந்து சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]

வாழ்கை குறிப்பு[தொகு]

நன்மாறன் தமிழ்நாட்டின், மதுரையில் 1947 மே 13 அன்று பிறந்தார். இவரது பெற்றோர் வே நடராசன், குஞ்சரத்தம்மாள் இணையராவர். மதுரை அழகரடியில் உள்ள ஆறுமுகம் பிள்ளை பள்ளியில் பள்ளிப்படிப்பையும், வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் உயர் கல்வியையும் பயின்றார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தொலைநிலை கல்வியில் தமிழில் முதுகலை படித்தார். இவரது தந்தை பஞ்சாலைத் தொழிலாளியாகவும், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராகவும் இருந்தார். இவரும் தன் தந்தையின் வழியைப் பின்பற்றி பொதுவுடமை இயக்கத்தில் இணைந்தார். தனியார் பேருந்தில் நடத்துநராக பணியாற்றிய நன்மாறன் ஒரு கட்டத்தில் அந்த வேலையைவிட்டு விலகி கட்சியின் முழுநேர ஊழியராக பணியாற்றத் தொடங்கினார். 1971 முதல் கட்சி கூட்டங்களில் பேசத் தொடங்கினார். மேடைகளில் எளிமையாகவும், நகைச்சுவையாகவும் பேச வல்லவராக இருந்தார். இதனால் இவரை மேடைக் கலைவாணர் என்று அழைக்கப்பட்டார். பல பட்டிமன்றங்களை நடத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தோற்றுவிக்கப்படபோது அதன் முதல் மாநிலத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை, தமிழ்நாடு நிறுபான்மை மக்கள் நலக்குழு ஆகிய அமைப்புகளின் தலைவராகவும் இருந்துள்ளார். மேலும் இவர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவராக நீண்டகாலம் பணியாற்றியுள்ளார். மார்சிய பொதுவுடமைக் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர், கட்சியின் மதுரை மாநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர், மாவட்டக் குழு உறுப்பினர் போன்ற பதவிகளை வகித்துள்ளார். 2001, 2006 என இரண்டு முறை மதுரை கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

எழுத்துப் பணிகள்[தொகு]

சின்ன பாப்பாவுக்கு செல்லப் பாட்டு என்ற சிறுவர்களுக்கான பாடல் நூலையும், காரல் மார்க்ஸ், பிரடெரிக் ஏங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகியோரின் வாழ்கை வரலாற்றையும் எழுதியுள்ளார்.[4]

மறைவு[தொகு]

மாரடைப்பு காரணமாக மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவந்த இவர், சிகிச்சை பலனின்றி, அக்டோபர் 28, 2021 அன்று காலமானார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ந._நன்மாறன்&oldid=3306866" இருந்து மீள்விக்கப்பட்டது