நோ கண்ட்ரி பார் ஓல்ட் மென் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நோ கண்ட்ரி பார் ஓல்ட் மென்
No Country for Old Men
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்ஜோயல் கோயன்
இதன் கோயன்
தயாரிப்புஜோயல் கோயன்
இதன் கோயன்
ஸ்காட்ட் ரோடின்
திரைக்கதைஜோயல் கோயன்
இதன் கோயன்
இசைகார்டர் பர்வேல்
நடிப்புடோம்மி லீ ஜோன்ஸ்
ஹாவியர் பார்டெம்
ஜோஷ் புரோலின்
ஒளிப்பதிவுரோஜர் டீக்கின்ஸ்
படத்தொகுப்புரோடேரிக் ஜேயின்ஸ்
விநியோகம்மிராமாக்ஸ் திரைப்படங்கள்
பாரமௌன்ட் வாண்டேஜ்
வெளியீடுநவம்பர் 9, 2007 (2007-11-09)
ஓட்டம்122 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவுஐஅ$25 மில்லியன் (178.8 கோடி)
மொத்த வருவாய்ஐஅ$171.62 மில்லியன் (1,227.4 கோடி)

நோ கண்ட்ரி பார் ஓல்ட் மென் (ஆங்கில மொழி: No Country for Old Men) 2007 இல் வெளியான அமெரிக்கத் திரில்லர் திரைப்படமாகும். கோயன் சகோதரர்களால் தயாரித்து இயக்கப்பட்டது. டோம்மி லீ ஜோன்ஸ், ஹாவியர் பார்டெம், சாஷ் ப்ரோளின் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் நான்கு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து இரண்டு அகாதமி விருதுகளை வென்றது.

கதைசுருக்கம்[தொகு]

படம் 1970களில் நடப்பது போல தொடங்குறது.


ஆன்டன் சிகுர்
மூன்று தலைமுறையாக ஷெரிஃப் பதவியில் இருக்கும் எட் டாம் பெல் கடந்த கால நினைவுகளை விவரிப்பதாக படம் தொடங்குகிறது. ஆன்டன் சிகுர் ஹிட்மேன் என்றழைக்கப்படும் கூலிப்படையை சேர்ந்தவன். ஒரு ஷெரீஃபை கொல்கிறான், பின்னர் ஷெரீஃபின் வண்டியை எடுத்துகொண்டு செல்லும்போது நெடுஞ்சாலையில் ஒரு பயணியின் வண்டியை வழிமறித்து அவருடைய வண்டியை அபகரிக்கிறான்.


லெவ்லீன் மாஸ் - கார்லா
லெவ்லீன் மாஸ் ஒரு முன்னாள் ராணுவ வீரர் அவர் ஒரு பாலைவனப்பகுதியில் ப்ராங்க் ஹார்ன் எனப்படும் மான் வகையை வேட்டையாடுகிறார். அவருடைய வேட்டையில் குண்டடிபட்ட ஒரு மான் ஒன்றை தேடி செல்லுகையில் அடிபட்டு நொண்டிசெல்லும் ஒரு நாயை காண்கிறார். அதை விடுத்து தொடர்ந்து முன்னேறி செல்கையில் அந்த பாலைவனத்தில் ஒருவருகொருவர் சுட்டுக்கொண்டு இறந்துவிட்ட சில போதைப்பொருள் கடத்தல்காரர்களும் அவர்களது வண்டிகளும் அனாதரவாக கிடப்பதை பார்த்து அருகில் செல்கிறார். அந்த வண்டிகளில் ஒன்றில் ஒரே ஒரு கடத்தல்காரன் மட்டும் உயிருக்கு போராடிகொண்டு அவரிடம் தண்ணீர் கேட்கிறான். தன்னிடம் தண்ணீர் இல்லையென்று கூறும் லெவ்லீன் மாஸ் அங்கிருத்து சற்று தொலைவில் ஒரு மரத்தினடியில் மற்றொருவன் அமர்ந்திருப்பதை பார்க்கிறார். அவன் உயிரோடு இருக்கிறான இல்லையா என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு அவனருகில் செல்லும் மாஸ் அவன் இறந்துவிட்டிருப்பதையும் அவனருகில் இரண்டு மில்லியன் அமெரிக்க டாலர்களடங்கிய ஒரு தோல்பை இருப்பதையும் காண்கிறார். பின்னர் அந்த பணப்பையை எடுத்துகொண்டு வீடு திரும்புகிறார்.

எடுத்து வந்த பணத்தை அந்த பையுடன் வீட்டிலேயே மறைத்து வைக்கிறார். அன்றிரவு உறக்கம் வராமல் தவிக்கும் லெவ்லீன் மாஸ் அன்று காலை தன்னிடம் தண்ணீர் கேட்டு கெஞ்சிய அந்த கடத்தல்காரனுக்கு தண்ணீர் எடுத்து செல்லும் பொருட்டு இரவில் வீட்டிலிருந்து கிளம்புகிறார். கிளம்பும்போது தன் மனைவியிடம்(கார்லா) ஒருவேளை தான் வரவில்லையெனில் அந்த பணத்துடன் வேறு எங்காவது சென்று வாழும்படிக்கு கூறுகிறார். பின்னர் காலை தான் பணத்தை எடுத்த பாலைவனப்பகுதிக்கு செல்கிறார். அங்கு சென்றதும் ஏதோ தவறுதலாக நடப்பதை உணரும் மாஸ் அங்கிருக்கும் சூழ்நிலையினை முழுவதும் புரிந்து கொள்ளும் முன் அந்த கடத்தல் கும்பலினை சேர்ந்த வேறு சிலரால் தாக்கப்படுகிறார். அந்த கும்பலிடம் இருந்து ஒரு வழியாக குண்டடிபட்ட நிலையில் தப்பிக்கிறார் மாஸ். அங்கிருந்து தப்பி அந்த பாலைவனப்பகுதியில் செல்லும் ஒரு சாலையின் ஓரம் அவ்வழி செல்லும் எதாவது ஒரு வாகனத்தில் ஏறி தப்பி செல்லும் நோக்குடன் அங்கு காத்திருக்கிறார்.


ஆன்டன் சிகுரின் தனித்தன்மை
அடுத்த காட்சியில் திரைக்கதை ஆன்டன் சிகுரிடம் திரும்புகிறது. அவர் ஒரு வாகன எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இருக்கிறார். அங்கிருப்பவரிடம் பேசிகொண்டிருக்கையில் அவரிடம் நிறைய கேள்விகளை கேட்கிறார் பின்னர் ஒரு தருணத்தில் ஒரு நாணயத்தை சுட்டிபோட்டு தலை வேண்டுமா அல்லது பூ வேண்டுமா என்று கேட்கிறார். முதலில் ஒன்றும் புரியாமல் விழிக்கும் அந்த நபர் தலை விழுமாறு பந்தயம் கேட்கிறார். அவர் கேட்டவாறே தலையும் விழுகிறது. அவரிடமே அந்த நாணயத்தை கொடுத்து இதை வைத்துகொள்ளுங்கள் நீங்கள் பாக்கியவான் இது உங்களுடைய யோகம் தரும் நாணயம் என்று சொல்லி விடை பெறுகிறார்.


மீண்டும் திரைக்கதை மாஸ் இருக்குமிடத்திற்கு செல்கிறது. மாஸ் தனது வீட்டில் கடத்தல்காரர்களிடம் இருந்து எடுத்து வந்த இயந்திர துப்பாக்கியை எடுத்துகொண்டு தான் குண்டடிபட்ட காயங்களுக்கு தானே வைத்தியம் செய்து கொள்கிறார். அவர் தனது மனைவியிடம் தான் கொண்டு வந்த இரண்டு மில்லியன் டாலர் பணத்தை எடுத்துகொண்டு அவளது அம்மாவிடம் சென்றுவிடும்படிக்கு பணிக்கிறார். முதலில் ஆட்சேபிக்கும் அவர் மனைவி பின்னர் ஒருவழியாக சம்மதித்து கிளம்ப ஆயத்தமாகிறார்.

அடுத்த காட்சியில் அன்டன் சிகுர் இருக்குமிடத்தில் வருகிறது. அந்த போதைபொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் ஆன்டனை தொலைந்து போன பணத்தை கண்டுபிடித்து தரும்படிக்கு கூலிக்கு ஒப்பந்தம் செய்ததால் பணம் தொலைந்த இடத்திற்கு சிலருடன் வந்து புலனாய்வு செய்கிறான். இந்த இடத்தில் எட் டாம் பெல்லுக்கு நெடுஞ்சாலையில் ஒரு மகிழ்வுந்து அனாதரவாக பற்றி எரிந்து கொண்டிருப்பதாக தகவல் வருவதையொட்டி அதை விசாரிக்கும் பொருட்டு மற்றொரு அதிகாரியுடன் அந்த இடத்திற்கு செல்கிறார். எரிந்து கொண்டிருக்கும் மகிழ்வுந்தின் அருகில் காத்திருக்கும் அதிகாரி எட் டாம் பெல்லிடம் நிலமையை விளக்குகிறார். அங்கிருந்து இருவரும் துப்பறிய ஆரம்பிக்கிறார்கள். அப்படியிருக்கும் வேளையில் அவர்கள் பாலவனத்தில் இறந்து கிடக்கும் கடத்தல்காரர்களையும் அவர்களினருகில் நிற்கதியாக விடப்பட்ட வண்டிகளும் இருப்பதை கண்டுபிடிக்கிறார்கள். இதற்கிடையில் ஆன்டன் சிகுர், லெவ்லீன் மாஸ்ஸின் வீட்டை கண்டுபிடித்து அங்கு வந்து விடுகிறான். வீட்டினுள் அவன் அத்துமீறி நுழைந்து பார்க்கையில் அங்கு லெவ்லீன் மாஸ்ஸும் அவனது மனைவியும் அங்கிருந்து முன்னமேயே தப்பிசென்றுவிட்டதை உணர்கிறான். பின் அங்கிருக்கும் பெண்ணிடம் மாஸ் பற்றி விசாரிக்கிறான் அவள் சரியான தகவல் தர மறுப்பதால் அங்கிருந்து சென்று விடுகிறான். இதற்கிடையே மாஸ் அவரது மனைவியை பேருந்து மூலம் தப்பி செல்ல வைக்கிறான், பின்னர் வாகன ஓட்டிகள் தங்கும் விடுதி ஒன்றில் அவன் தங்குகிறான். இதற்கிடையே எட் டாமும் அவரது சக அதிகாரியும் மாஸின் வீட்டிற்கு சென்று அவன் அங்கில்லாததை அறிந்து ஏமாறுகிறார்கள். விடுதியில் தங்கியிருக்கும் மாஸ் அங்கிருக்கும் குளிர்சாதன காற்று வெளியேற்றியினுள் பணப்பையை ஒளித்து வைக்கிறான். வெளியில் சென்றுவிட்டு திரும்பவும் அந்த விடுதிக்கு வரும் மாஸ் ஏதோ சந்தேகம் அடைந்தவனாக உணர்ந்து அங்கிருந்து திரும்பிவிடுகிறான். துப்பாக்கி ஒன்றை வாங்கிகொண்டு மறுபடியும் அதே விடுதிக்கு காலையில் வந்து தான் தங்கியுருக்கும் அறை தவிர மேலுமொரு அறை எடுத்து தங்குகிறான். தான் புதிதாக வாடகைக்கு எடுத்திருக்கும் அறையில் இருந்து தன்னுடைய பழையஅறைக்குள் செல்வதற்கு வழிகிடைக்குமா என ஆராய்கிறான். இதற்கிடையில் அந்த பணப்பையினுள் அந்த பை எங்கிருக்கிறது என்பதை கண்டறிய உதவும் ஒரு துப்பறியும் கருவி பொருத்தப்பட்டுள்ளதை அவன் அறிவதில்லை. அவன் தங்கியிருக்கும் விடுதி வழியாக மகிழ்வுந்தில் கடந்து செல்லும் ஆன்டன் சிகுர் தன் கையிலிருக்கும் உணர்வாங்கியின் மூலம் அந்த பணப்பை தனக்கு எட்டும் தூரத்தில் இருப்பதை அறிந்து மாஸ் தங்கியிருக்கும் அதே விடுதிக்கு வந்து விடுகிறான். அங்கு அதே பணப்பையை தேடி அலையும் மற்றொரு கும்பலில் சிலரை கொல்கிறான். இத்தருணத்தில் மாஸ் அந்த பணத்துடன் தப்பி மற்றொரு தங்கும் விடுதிக்கு வந்து சேர்கிறான். அங்கும் மாஸை தேடி சிகுர் வந்து விடுகிறான் அங்கு இருவருக்கும் துப்பாக்கி சண்டை நடக்கிறது. அதில் இருவருக்குமே குண்டடி படுகிறது. மாஸ் அங்கிருந்து தப்பி மெஃஸிகோ - அமெரிக்கா எல்லையில் இருக்கும் சுங்கசாவடி மூலம் தப்பிசெல்ல எத்தனிக்கிறான். பணத்துடன் சுங்கசாவடி எல்லையை கடப்பதென்பது நடக்காத காரியம் ஆதலால் பணப்பையை சுங்க வேலியினருகில் ஒரு புதரில் எறிந்த்து விட்டு சில இளைஞர்களிடம் அவர்கள் அணிந்திருக்கும் உடையை சிறிது பணத்திற்கு விலைக்கு வாங்கி அந்த சுங்கசாவடி எல்லையை தாண்டி செல்கிறான். இதனிடையே சிகுர் தான் பட்ட குண்டு காயத்திற்கு வைத்தியம் செய்வதற்காக மருந்துக்கடை முன்பிருக்கும் மகிழ்வுந்தில் தீப்பற்ற வைத்து ஒரு வெடிவிபத்தை உண்டுபண்ணுகிறான். அந்த வெடி விபத்தினால் வரும் குழப்பங்களின் இடையே அந்த மருந்துக்கடையிலிருந்து மருந்துகளை களவாடி செல்கிறான். தனக்குதானே குண்டடிக்கு மருத்துவமும் செய்து கொள்கிறான். இக்காட்சிகளிடையே ஷெரிஃப் அதிகாரிகளின் துப்பறியும் காட்சிகளும் வருகிறது. மாஸ் சுங்கசாவடியில் தப்பி மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கபடுகிறான். அங்கு வரும் கார்சன் வூடி எனும் அதிகாரி தான் கடத்தல் கும்பலின் பணத்தை மீட்க நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார். அதிகாரி அவனிடம் விசாரணை செய்வதோடு சிகுர் பற்றி எச்சரித்தும் செல்கிறார். மேலும் தானும் சிகுரும் ஒருவருக்கொருவர் முகமறிந்த நண்பர்கள் என்றும் தெரிவிக்கிறார். மறுமுனையில் டாம் லெவ்லீனின் மனைவியை ஒரு உணவகத்தில் சந்தித்து எச்சரிக்கிறார். கார்சன் சுங்கசாவடி அருகில் மாஸ் தூக்கி எறிந்த பணப்பையை தேடி அலைகிறார் அது அவரது கண்ணிலும் படுகிறது ஆனாலும் அப்போதைக்கு அதை மீட்க அவர் முனைவதில்லை. கார்சன் தான் தங்கியுள்ள அறைக்கு திரும்புகையில் சிகுரால் பின் தொடரப்படுவதை உணர்கிறார். சிகுர், கார்சனை அவரது அறைக்கு அழைத்து செல்கிறான். அங்கு அவர்களினூடே நடக்கும் உரையாடலை அடுத்து அவன் கார்சனை கொல்கிறான். அப்போது கார்சனுக்கு மாஸ் தொலைபேசியில் அழைக்கிறான் ஆனால் கார்சன் இறந்துவிட்டதால். அந்த அழைப்பை சிகுர் ஏற்கிறான் அதில் மாஸுடன் பேசும் சிகுர் பணத்தை தன்னிடம் ஒப்படைக்கும் படிக்கு மிரட்டுகிறான். அப்படியில்லையெனில் மாஸின் குடும்பத்தினரை கொன்றுவிடுவதாவகும் கூறுகிறான். மாஸ் தான் வீசியெறிந்த இடத்திலிருந்து பணத்தை எடுத்துகொண்டு எல் பாஸோ என்னுமிடத்தில் இருக்கும் ஒரு வாகன ஓட்டிகள் தங்குமிடத்திற்கு தன் மனைவியை அவளது தாயை அழைத்துவரும்படிக்கு பணிக்கிறான். அதே நேரம் தனது கணவரை இப்படியான இக்கட்டிலிருந்து காப்பாற்றும்படிக்கு மாஸின் மனைவி கார்லா ஷெரிஃப் டாமை அணுகுகிறாள். டாமும் அவள் தனது கணவரை சந்திக்க செல்லுகையில் அவ்விடத்திற்கு வருவதாக கூறுகிறார். அப்படி அவர் அந்த இடத்திற்கு வருகையில் சில மெஃஸிக்கோ வாசிகள் ஒரு வாகனத்தில் அங்கிருந்து தப்பிசெல்வதை காண்கிறார் அங்கு என்ன நடக்கிறது என்று டாம் உணருமுன் எல்லாம் முடிந்து விடுகிறது. டாம் அந்த விடுதிக்கு போய் பார்க்கையில் அங்கு மாஸும் வேறு சிலரும் சுடப்பட்டு இறந்து கிடக்கிறனர். அன்றிரவு அந்த சம்பவம் நடந்த இடத்திற்கு டாம் சென்று பார்க்கையில் மாஸின் பிணம் இருந்த அறையின் கதவுகள் உடைபட்டிருப்பதை காண்கிறார். உள்ளே சிகுர் ஒளிந்திருப்பதை அறியாமல் அவரும் உள்ளே சென்று பார்க்கையில் சிகுர் அங்கிருந்து தப்பிவிடுகிறான்.

இவ்வேளையில் தனது மாமவை சந்தித்து தான் தோற்றுவிட்டதாக டாம் புலம்புகிறார், தான் வேலையிலிருந்து ஓய்வு பெறப்போவதாகவும் கூறுகிறார். டாமிம் மாமா அவரை தேற்றி திருப்பி அனுப்புகிறார். அடுத்த காட்சியில் கார்லா தனது அம்மாவின் இறுதி சடங்கில் கலந்துவிட்டு வீடு திரும்புவதாக அமைகிறது. அங்கு அவளது வருகைக்காக சிகுர் காத்திருக்கிறான் அவனிடம் பணம் ஏதும் தன்னிடம் இல்லையெனவும், இன்று தான் தனது அம்மாவின் இறுதி சடங்கை முடித்ததாகவும் அதற்குக்கூட தன்னிடம் பணமில்லை எனவும் கார்லா கூறுகிறாள். மேலும் சிகுர் தன்னை கொல்வதற்கு என்று எந்த முகாந்த்திரமும் இல்லையெனவும் கூறுகிறாள். பதிலுக்கு சிகுர் தனக்கு எந்த முகாந்திரமும் இல்லையென்றாலும் தான் "அவளது கணவருக்கு வாக்கு கொடுத்துவிட்டதாக" கூறுகிறான். ஒன்று புரியாமல் விழிக்கும் கார்லாவிடம், தான் அவளது கணவரிடம் பணமா, அல்லது குடும்பமா என பேரம் பேசியபோது மாஸ் பணத்தை தேர்ந்தெடுத்ததால். அவனிடம் கூறிய வார்த்தையின் படிக்கு தான் கார்லாவாகிய உன்னை கொல்ல வேண்டிய கட்டாயம் இருப்பதாக கூறுகிறான். கார்லா தனக்கு உயிர்பிச்சை தரும்படி சிகுரிடம் கெஞ்சுகிறாள். என்ன செய்வதென தெரியாத சிகுர் படத்தின் ஆரம்பத்தில் எரிபொருள் நிரப்பும் நிலையத்திலிருந்த நபரிடம் கேட்டதைப்போல ஒரு நாணயத்தை சுட்டிபோட்டு பூவா அல்லது தலையா என கேட்கிறான் ஆனால் கார்லா கடைசி வரை எதும் சொல்லவில்லை. அவளது வீட்டை விட்டு வெளியேறும் சிகுர் தனது மகிழ்வுந்தில் செல்லும் பொழுது ஒரு விபத்தில் சிக்கி காயமடைகிறான். அந்த சாலையில் விளையாடும் சிறுவர்களிடம் சிறிது பணம் கொடுத்து அவரில் ஒருவரது மேல்சட்டையை மட்டும் வாங்கி த்னக்கு காயம் பட்ட கைக்கு கட்டுபோட்டு கொண்டு அங்கிருந்து சென்றுவிடுகிறான்.

அடுத்த காட்சியில் டாம் தனது மனைவியிடம் தான் இரவில் கண்ட கனவை விவரிப்பதாக வந்து அத்துடன் படமும் நிறைவடைகின்றது.

கார்மாக் மெக்கார்த்தி என்பவரது நோ கன்ட்ரி ஃபார் ஓல்ட் மென் எனும் நாவலை தழுவியே இப்படம் எடுக்கபட்டுள்ளது. இப்படத்தில் வரும் ஆன்டன் சிகுர் என்கிற கதாபாத்திரத்தின் நாணயம் சுண்டுதல், கதவுகளை உடைக்கும் வாகு, மற்றும் தொலைபேசியில் பேசும்பொழுது காலில் ரத்தம் படாம காலை நகர்த்தும் பாங்கு என பார்த்து பார்த்து இயக்கப்பட்டுள்ளது. ஆனால் மெக்கார்த்தி எழுதிய புதினத்தில் அனைத்துகாட்சிகளும் ஷெரிஃப் எட் டாம் பெல் விவரிப்பதாக அவரை மைய்யப்படுத்தியே இருக்கும்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]