நைசீரியாவின் வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நைசீரியாவின் வரலாறு, கிமு 1100 ஆண்டுக் காலத்தில் இப்பகுதியில் வாழ்ந்த வரலாற்றுக்கு முந்திய கால மக்களுடன் தொடங்குகிறது எனலாம். நிரி இராச்சியம், பெனின் பேரரசு, ஓயோ பேரரசு போன்ற பெருமளவிலான பழைய ஆப்பிரிக்க நாகரிகங்கள் இன்று நைசீரியா என வழங்கும் பகுதியில் இருந்துள்ளன. போர்னோ பேரரசுக் காலத்துக்கும் அவுசா அரசுகளின் காலத்துக்கும் இடைப்பட்ட 11 ஆம் நூற்றாண்டில் இசுலாம் நைசீரியாவுக்குள் வந்தது. 15 ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கலைச் சேர்ந்த அகத்தீனிய, கப்புச்சினியக் குருமார்கள் ஊடாகக் கிறித்தவம் நைசீரியாவில் அறிமுகமானது. சோங்காய் பேரரசும் இப்பகுதியின் ஒரு பிரிவைக் கைப்பற்றிக்கொண்டிருந்தது. 1851 இல் பிரித்தானியர் லாகோசைக் கைப்பற்றி 1861 இல் அதைத் தங்களுடன் இணைத்துக்கொண்டனர். 1901 இல் நைசீரியா பிரித்தானியாவின் காப்பரசாக ஆனது. குடியேற்றவாத ஆட்சி 1960 வரை நீடித்தது. அந்த ஆண்டில் விடுதலைக்கான இயக்கம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து நைசீரியாவுக்கு விடுதலை கிடைத்தது.

1963 இல் நைசீரியா ஒரு குடியரசு ஆனது. மூன்று ஆண்டுகளின் பீன்னர் நிகழ்ந்த ஒரு இராணுவச் சதிப் புரட்சுயைத் தொடர்ந்து நாடு இராணுவ ஆட்சிக்குள் வந்தது. 1967 இல் பயாபிரா மாகாணத்தின் பிரிவினை இயக்கம், பயாபிராக் குடியரசைத் தனிநாடாக அறிவித்ததைத் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் நீடித்த உள்நாட்டுப் போர் ஏற்பட்டது. 1979 இல் உருவாக்கப்பட்ட புதிய அரசியல் சட்டத்தின்படி நைசீரியா மீண்டும் ஒரு குடியரசானது. எனினும் இக்குடியசசு குறுகிய காலமே நீடித்தது, நான்கு ஆண்டுகளில் மீண்டும் இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொண்டது. ஆகத்து 1993 இல் புதிய குடியரசை அமைப்பதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டபோதும் தளபது சானி அபாச்சா மூன்று மாதங்களில் அதனைக் கைவிட்டார். 1998 இல் அபாச்சா காலமானார். இதன் பின்னர் நான்காவது குடியரசு நிறுவப்பட்டது. இது மூன்று பத்தாண்டுகளில் அடிக்கடி ஏற்பட்ட இராணுவ ஆட்சிக்கு முடிவுகட்டியது.

தொடக்க வரலாறு[தொகு]

சார்லசு தர்சுட்டன் சா (Charles Thurstan Shaw) என்பவரால் முன்னெடுக்கப்பட்ட தொல்லியல் ஆய்வுகளின்படி, 100,000 ஆணடுகளுக்கு முன்பே, தென்கிழக்கு நைசீரியப் பகுதிகளில், குறிப்பாக இக்போ உக்வூ, நுசுக்கா, அபிக்போ, உக்வுயெலே போன்ற இடங்களில், மக்கள் வாழ்ந்ததைக் காட்டுகின்றன. உக்வுயெலே, அபிக்போ, நுசுக்கா ஆகிய இடங்களில் செய்யப்பட்ட அகழ்வாய்வுகளில், கிமு 6,000 ஆண்டுக் காலப்பகுதியிலேயே மக்கள் அப்பகுதிகளில் நீண்டகாலம் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. எனினும், கிபி 9 ஆம் நூற்றாண்டில், இக்போ மக்கள் இக்போலாந்தில் குடியேறிவிட்டது தெளிவாகத் தெரிகின்றது. இக்போ உக்வூவில் மேற்கொள்ளப்பட்ட "சா" வின் அகழ்வாய்வுகள் கிபி 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததும் இப்பகுதியில் ஏற்கெனவே அறியப்பட்ட நாகரிகங்களைவிடப் பல நூற்றாண்டுகள் முற்பட்டதுமான உள்ளூர் நாகரிகம் ஒன்றை வெளிக்கொணர்ந்தன. இந்நாகரிகம், ஐரோப்பிய, அரேபியச் செல்வாக்கு இல்லாத, சிக்கல்தன்மை வாய்ந்த வெங்கலத் தொழில்நுட்பத்தைக் கொண்டிருந்தது. 13,000 ஆண்டுகள் பழமையான புதைபடிவ மனித எலும்புக்கூடு மேற்கு நைசீரியாவில் உள்ள இவோ எலெரு என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. மேற்கு ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகளுள் மிகப் பழமையானது இதுவே. இது அப்பகுதியின் குடியேற்றங்களின் பழமையை எடுத்துக்காட்டுகின்றது.[1]

நுண்கல், வெண்களித் தொழில்கள் கிமு 4 ஆம் ஆயிரவாண்டுகளுக்கு முன்பே சாவன்னா மேய்ப்பர்களால் வளர்த்து எடுக்கப்பட்டுத் தொடர்ந்து வந்த வேளாண்மை சமூகங்களால் கைக்கொள்ளப்பட்டன. தெற்கில், இதே காலப்பகுதியில், வேட்டையும், உணவு சேகரித்தலும் கைவிடப்பட்டு வாழ்வாதார வேளாண்மை அறிமுகமானது. இப்பகுதிகளில் வடபகுதிகளைப்போல் தானியங்களை உற்பத்தி செய்யாமல், கிழங்குகள், எண்ணெய்ப் புல்லின மரங்கள் போன்றவற்றையே பயிர் செய்தனர்.

கற்கோடரித் தலைகள் பெருமளவில் வடக்கில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன. வேளாண்மை மேம்பாட்டுக்காகக் காடுகளை அழிப்பதற்குப் பயன்பட்ட இவற்றை, பழைய கற்கால முன்னோடிகளின் வழித்தோன்றல்களான யொரூபா மக்கள், இவை கடவுளால் புவியை நோக்கி எறியப்பட்ட இடியேறு எனக்கருதி வழிபட்டனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Nigeria EARLY HISTORY Sourced from The Library of Congress Country Studies". பார்க்கப்பட்ட நாள் 2010-05-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நைசீரியாவின்_வரலாறு&oldid=2537201" இலிருந்து மீள்விக்கப்பட்டது