நேவல் டாட்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பத்ம பூசண்
நேவல் டாட்டா
பத்ம பூசண்
பிறப்புஆகத்து 30, 1904(1904-08-30)
சூரத்து, மும்பை மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் (தற்போதைய குசராத்து, இந்தியா)
இறப்பு5 மே 1989(1989-05-05) (அகவை 84)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
தேசியம்இந்தியன்
பணிடாட்டா குழுமம்
உறவினர்கள்மேலும் பார்க்க டாட்டா குடும்பம்

நேவல் ஆர்முச்ஜி டாட்டா (Naval Hormusji Tata ) (30 ஆகத்து 1904   - 5 மே 1989) இரத்தன்ஜி டாட்டாவின் வளர்ப்பு மகனும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவரும் ஆவார். இவர் ரத்தன் டாடா, ஜிம்மி டாடா மற்றும் நோயல் டாடா ஆகியோரின் தந்தையுமாவார்.

ஜம்சேத்பூரில் உள்ள நேவல் டாட்டா வளைதடிப் பந்தாட்ட அகாதெமி என்பது, டாட்டா அறக்கட்டளை, டாடா ஸ்டீல் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும். இது இந்தியாவில் வளைதடி பந்தாட்ட வளர்ச்சிக்கு இவரது பங்களிப்பின் நினைவாக பெயரிடப்பட்டது. [1]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

இவர் சூரத்தில் 1904 ஆகத்து 30 அன்று ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை, அகமதாபாத்தில் ஒரு நெசவாலையில் பணி புரிந்து வந்தார். இவரது தந்தை 1908இல் இறந்த பின்னர், [2] குடும்பம் நவ்சாரிக்கு இடம் பெயர்ந்தது. அங்கே இவர்கள் எளிமையாக வாழ்ந்தனர். இவரது தாயின் வருமானம் பூத்தையல் பணியிலிருந்து பெறப்பட்டது. சிறுவயதில் தனது குடும்பத்துக்கு ஆதரவாக இவர் குடும்ப நண்பர்கள் மூலம் ஜே. என். பெட்டிட் பார்சி அனாதை இல்லத்தில் சேர்ந்து கொண்டார்.

இவரது செல்வத்தையும் வாழ்க்கையையும் மாற்றிய ஒரு அதிர்ஷ்டமான திருப்பமாக, இரத்தன்ஜி டாட்டாவின் மனைவி நவாஜ்பாய் இவரை அனாதை இல்லத்திலிருந்து தத்தெடுத்தார். [2] தத்தெடுக்கப்பட்டபோது இவருக்கு வயது 13. பின்னர் இவர் மும்பை பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார். மேலும், கணக்கியலைப் படிக்க சிறுதுகாலம் இலண்டனுக்குச் சென்றார்.

இவர் தனது கடந்த காலத்தை ஒருபோதும் மறக்கவில்லை. ஒருமுறை குறிப்பிட்டார்: [2]

வறுமையின் வேதனையை அனுபவிக்க எனக்கு ஒரு வாய்ப்பை வழங்கியதற்காக நான் கடவுளுக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன், இது என் வாழ்க்கையின் பிற்பகுதிகளில் எதையும் விட (வேறு) என் தன்மையை வடிவமைத்தது.

குடும்பம்[தொகு]

இவருக்கு முதல் மனைவி சூனூ என்பவர் மூலம் ரத்தன் டாட்டா, ஜிம்மி டாட்டா என்ற இரு மகன்கள் இருந்தனர். இவர்கள் 1940 களின் நடுப்பகுதியில் பிரிந்தனர். [3]

பின்னர் இவர் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த சிமோன் என்ற பெண்ணை காதலித்து 1955 இல் திருமணம் செய்து கொண்டார். [4] இவர்களுக்கு நோயல் டாடா என்ற மகன் பிறந்தார்.

தொழில்[தொகு]

டாடா குழுமம்[தொகு]

1930 ஆம் ஆண்டில், டாட்டா​ சன்ஸ் நிறுவனத்தில் ஒரு எழுத்தராகப் பணியில் சேர்ந்தார். விரைவில் நிறுவனத்தின் உதவி செயலாளராக உயர்ந்தார். [2] 1933 ஆம் ஆண்டில், விமானப் போக்குவரத்துத் துறையின் செயலாளரானார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, நெசவுத் துறையில் நிர்வாகியாக சேர்ந்தார். விரைவில் இவர் தனது தகுதியை நிரூபித்தார். மேலும் 1939 இல் டாடா ஆலைகளின் இணை நிர்வாக இயக்குநரானார். 1947இல் டாடாக்கள் நடத்தும் நெசவாலைகளின் கட்டுப்பாட்டு நிறுவனத்தில் அதன் நிர்வாக இயக்குநரானார். பிப்ரவரி 1, 1941 இல், இவர் டாடா சன்ஸின் இயக்குநரானார். இவர் 1948இல் டாடா எண்ணை ஆலை நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பொறுப்பேற்றார். [5] இவர் அகமதாபாத்தை தளமாகக் கொண்ட டாடா குழும நிறுவனமான அகமதாபாத் அட்வான்ஸ் ஆலைகளின் தலைவராகவும் இருந்தார். [6]

சில ஆண்டுகளில் இவர் நெசவாலைகளுக்கும், டாட்டா மின்சார நிறுவனங்களுக்கும் தலைவரானார். பொறுப்பு இயக்குனராக இருந்த இவர் பின்னர் டாடா சன்ஸின் துணைத் தலைவரானார். மேலும் மூன்று டாட்டா மின்சார நிறுவனங்கள், நான்கு நெசவாலைகள் , சர் ரத்தன் டாடா அரக்கட்டளை ஆகியவற்றின் நிர்வாகத்திற்கு இவர் நேரடியாக பொறுப்பேற்றார். [2] [5] டாடா சன்ஸ் குழுவில் ஜே. ஆர். டி டாடாவுடன் மிக நீண்ட காலம் பணியாற்றிய சகாவாகவும், நெருங்கிய கூட்டாளியாகவும் இருந்தார். [7]

பிற நிறுவனங்கள்[தொகு]

துளசிதாசு கிலச்சந்த், இராமேசுவர் தாசு பிர்லா, அரவிந்த் மபத்லால் போன்ற பலருடன் இணைந்து பரோடா வங்கியை நிறுவி அதன் இயக்குநராகவும் பணியாற்றினார். [8]

மற்ற நடவடிக்கைகள்[தொகு]

இவர் தொழிலாளர் உறவுகளில் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரமாக மாறினார். 1949 இல் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் நிர்வாகக் குழுவில் உறுப்பினரானார். [5] மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக சர்வதேச தொழிலாளர் அமைப்புடன் இவர் ஈடுபட்டது இந்தியாவுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் ஆட்சிமன்றக் குழுவிற்கு பதின்மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்ட சாதனையை இவர் கொண்டுள்ளார். [7] இவர் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் குடும்பத் திட்டமிடல் திட்டத்தின் நிறுவனருமாவார்.

1966 ஆம் ஆண்டில், இவர் மத்திய அரசால் அமைக்கப்பட்ட திட்டக் குழுவின் தொழிலாளர் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். [2]

இவர் விளையாட்டுக்கும் பங்களித்தார். மேலும் பல செயல்பாடுகளுடன் தொடர்பிலிருந்தார். சமூகம், கல்வி பொதுநலப் பணி போன்றவற்றில் மூத்த நிர்வாகியாக இருந்தார். இவர் பதினைந்து ஆண்டுகள் இந்திய வளைதடிப்பந்தாட்ட கூட்டமைப்பின் தலைவராக இருந்தார். மேலும் 1948, 1952, 1956 ஆம் ஆண்டுகளில் இந்திய வளைதடிப்பந்தாட்ட அணி ஒலிம்பிக் தங்கத்தை வென்றபோது அணிக்கு தலைமை வகித்தார். [7]

இவர் இந்திய அறிவியல் நிறுவனம், மும்பை மாநில சமூக நல அமைப்பு, சுதேசி லீக் , தேசிய பாதுகாப்பு அமைப்பு போன்ற பல நிறுவனங்களில் பணிபுரிந்தார். [2] [5]

1951 ஆம் ஆண்டில் இவரும், முனைவர் த. ஜ. ஜுசவாலா என்பவரும் இணைந்து இந்திய புற்றுநோய் சங்கத்தை நிறுவினர். இது இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விழிப்புணர்வு, கண்டறிதல், குணப்படுத்துதல், உயிர்வாழ்வது போன்றவற்றிகாக உதவும் இந்தியாவின் முதல் தன்னார்வ, இலாப நோக்கற்ற, தேசிய அமைப்பாகும். [9] இவர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய புற்றுநோய் சங்கத்தின் தலைவராக பணியாற்றினார். [2]

இவர் துணைப் படைகள் நலச் சங்கத்தின் தலைவராகவும், பல அறக்கட்டளைகளின் அறங்காவலராகவும் இருந்தார். [10]

இவர் பல ஆண்டுகளாக இந்திய முதலாளிகள் கூட்டமைப்பின் தலைவராக இருந்தார். [10] நான்கு தசாப்தங்களாக இந்த அமைப்போடு தொடர்பிலிருந்த இவர் அதன் தலைவராக ஓய்வு பெற்றார்.

அரசியல்[தொகு]

இவர் தனது உறவினரும், நீண்டகால சகாவான ஜே. ஆர். டி டாடாவுடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்தார். ஜே. ஆர். டி அரசியலில் இருந்து விலகி இருக்க விரும்பினாலும், இவர் 1971 ல் தெற்கு மும்பை மக்களவைத் தொகுதியிலிருந்து ஒரு சுயேட்சை வேட்பாளராக நின்றார். ஆனால் தேர்தலில் தோல்வியடைந்தார். [7]

விருதுகள்[தொகு]

1969 ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று இந்தியக் குடியரசுத் தலவைரால் இவருக்கு பத்ம பூசண் விருது வழங்கப்பட்டது. [11] அதே ஆண்டு தொழில்துறை அமைதிக்கான இவரது பங்கிற்காக அங்கீகாரமும், சர் ஜஹாங்கிர் காண்டி பதக்கமும் வழங்கப்பட்டது . இவருக்கு தேசிய பணியாளர் மேலாண்மை நிறுவனத்தின் ஆயுள் உறுப்பினர் கௌரவமும் வழங்கப்பட்டது. [2]

இறப்பு[தொகு]

புற்றுநோய் காரணமாக மும்பையில் 5 மே 1989 அன்று இவர் இறந்தார். [2]

நினைவு[தொகு]

 • இந்திய சமூக நலன் மற்றும் வணிக முகாமைத்துவ நிறுவனம் விளையாட்டு முகாமைத்துவத் துறைக்கு இவரது நினைவாக பெயரிட்டுள்ளது. [12]
 • தேசிய பணியாளர் மேலாண்மை நிறுவனம் 1992 முதல் ஒவ்வொரு ஆண்டும் நேவல் டாடா நினைவு சொற்பொழிவு ஒன்றை இவரது நினைவாக ஏற்பாடு செய்கிறது.
 • 2004 ஆம் ஆண்டில், டாடா குழுமம் ஜம்சேத்ஜி டாடா, ஜே. ஆர். டி. டாடா, நேவல் டாடா ஆகியோரின் நினைவாக பல்வேறு நகரங்களில் 'தி செஞ்சுரி ஆஃப் டிரஸ்ட்' என்ற கண்காட்சியை ஏற்பாடு செய்கிறாது. [13]
 • 2014 ஆம் ஆண்டில் 'இந்திய முதலாளிகள் கூட்டமைப்பு ' தொழில்துறை உறவுகளில் பயிற்சி பெறுவதற்கான நேவல் டாடா நிறுவனம் என்பதை தொடங்கியது. [14]
 • 1999 ஆம் ஆண்டில் நேவல் டாட்டா ரிமம்பெர்டு என்ற ஒரு புத்தகம் இவரது நினைவாக வெளிய்டப்பட்டது. இது இவரது கடிதங்கள், எழுத்துக்கள், உரைகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. [10]

மேற்கோள்கள்[தொகு]

 1. http://ntha.in/about-us/[தொடர்பிழந்த இணைப்பு]
 2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 2.8 2.9 "NAVAL HORMUSJI TATA (1904-1989)". TATA CENTRAL ARCHIVES. http://www.tatacentralarchives.com/history/biographies/16%20nhtata.htm. 
 3. "Ratan Tata rode the tiger economy and now he drives Jaguar". https://www.telegraph.co.uk/comment/personal-view/3556736/Ratan-Tata-rode-the-tiger-economy-and-now-he-drives-Jaguar.html. பார்த்த நாள்: 31 March 2012. 
 4. "Simone Tata". The Asha Centre. http://www.ashacentre.org/index.php?option=com_k2&view=item&id=581:simone-tata&Itemid=3. 
 5. 5.0 5.1 5.2 5.3 . 
 6. The Eastern Economist; a Weekly Review of Indian and International Economic Affairs, Volume 37, Issues 1-1961
 7. 7.0 7.1 7.2 7.3 Sugar in Milk: Lives of Eminent Parsis. https://books.google.com/books?id=h0-5wSwLL5YC&pg=PT145. பார்த்த நாள்: 22 March 2015. 
 8. Corporate Governance: Concept, Evolution and India Story By Praveen B. Malla. 2013. பக். 38. http://www.business-standard.com/article/companies/exhibition-on-tatas-104083101095_1.html. பார்த்த நாள்: 22 March 2015. 
 9. "Indian Cancer Society — Profile". Indian Cancer Society. http://www.indiancancersociety.org/about-ics/ics-profile.aspx. 
 10. 10.0 10.1 10.2 [1] Naval Tata remembered, 1999.
 11. "Padma Awards". Ministry of Home Affairs, Government of India. 2015. http://mha.nic.in/sites/upload_files/mha/files/LST-PDAWD-2013.pdf. 
 12. "Sports management gains legitimacy". https://www.livemint.com/Politics/4H5HcjBYOyUKWa360fqxfI/Sports-management-gains-legitimacy.html. பார்த்த நாள்: 26 October 2018. 
 13. "Exhibition on Tatas". http://www.business-standard.com/article/companies/exhibition-on-tatas-104083101095_1.html. பார்த்த நாள்: 22 March 2015. 
 14. Employers' Federation of India (EFI) launches the 'Naval Tata Institute for Training in Industrial Relations' at the EFI National Human Resource Management Summit 2014
"https://ta.wikipedia.org/w/index.php?title=நேவல்_டாட்டா&oldid=3561233" இருந்து மீள்விக்கப்பட்டது