நேரிவாயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சங்ககாலத்தில் சோழநாட்டுத் தலைநகராகிய உறையூருக்குத் தெற்கில் நேரி என்னும் ஊர் இருந்தது. எனவே உறையூர்க் கோட்டையின் தெற்குப்புற வாயில் நேரிவாயில் எனப்பட்டது. இக்காலத்தில் தென்னூர் என வழங்குகின்றனர். சோழர் தலைநகரின் தெற்குப்புறத்தில் உள்ள ஊர் என்பது இதன் பொருள்[1]

சேரன் செங்குட்டுவனின் தாயார் சோழன் மணக்கிள்ளி என்று போற்றப்பட்டவள். இவளது தந்தை வயது முதிர்ந்திருந்த காலத்தில் சோழர் குடிக்கு உரிமை பூண்ட 9 பேர் சோழனுக்கு எதிராகப் போரிட்டு ஆட்சியைக் கைப்பற்ற முயன்றனர். செங்குட்டுவன் அன் பாட்டனுக்குத் துணையாக வாயிற்புறம் என்னுமிடத்தில் போரிட்டு வென்றான். [2]

இந்த வாயிற்புறம் என்னும் ஊரை அறிஞர்கள் நேரிவாயில் என எடுத்துக்கொள்கின்றனர். இதற்கு உறுதுணையாக உள்ளது சிலப்பதிகார அடிகள். சிலப்பதிகாரத்தில் வரும் அடிகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது சிலப்பதிகார அடிகளின் தாக்கம் பதிற்றுப்பத்துப் பாடல்களுக்குப் பிற்காலத்தில் எழுதப்பட்ட பதிகத்தில் உள்ளதைக் காணமுடிகிறது. சேரன் செங்குட்டுவன் வியலூரை எறிந்தபின் நேரிவாயில் போரில் ஈடுபட்டு வென்றான். [3]

அடிக்குறிப்பு[தொகு]

  1. சிலப்பதிகாரம் 28-117
  2. வெந்திறல் ஆராச் செருவின் சோழர் குடிக்கு உரியோர் ஒன்பதின்மர் வீழ வாயிற்புறத்து இறுத்து – பதிற்றுப்பத்து பதிகம் 5
  3. கறிவளர் சிலம்பில் வியலூர் எறிந்தபின், ஆர்புனைத் தெரியல் ஒன்பது மன்னரை நேரிவாயில் நிலைச்செரு வென்று நெடுந்தேர்த் தானையொடு இடும்பிற்புறத்து இறுத்துக் கொடும்போர்க் கடந்து நெடுங்கடல் ஓட்டி உடன்று மேல் வந்த ஆரிய மன்னரைக் கடும்புனல் கங்கைப் பேர்யாற்று வென்றோய் – சிலப்பதிகாரம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நேரிவாயில்&oldid=894649" இலிருந்து மீள்விக்கப்பட்டது