நேபாளத்தில் பெண்களின் உரிமை
நேபாளத்தில் பெண்களின் உரிமை (Women's rights in Nepal) நேபாளம் , தெற்காசியாவில் அமைந்துள்ள இமயமலை நாடு., உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாகும் . அது அரசியல் நிலையற்ற தன்மையால் பாதிக்கப்பட்டு அதன் வரலாற்றில் பெரும்பாலும் மக்களாட்சியற்ற ஆட்சியை கொண்டுள்ளது. நாட்டில் அடிப்படை வசதிகளுக்கான அணுகல் பற்றாக்குறை உள்ளது. மக்களிடையே மூட நம்பிக்கைகளும், பாலின பாகுபாடும் அதிக அளவில் உள்ளது. சமமான வேலைக்கு சமமான ஊதியம் உட்பட பெண்களின் பாதுகாப்பை அரசியலமைப்பு வழங்குகிறது என்றாலும், அதன் விதிகளை அமல்படுத்த அரசாங்கம் குறிப்பிடத்தக்க நடவடிக்கை எடுக்கவில்லை.
நேபாளத்தில் பெண்களின் நிலை ஆரோக்கியம், கல்வி, வருமானம், முடிவெடுப்பது, கொள்கை வகுப்பிற்கான அணுகல் ஆகியவற்றில் மிகவும் மோசமாக உள்ளது. இந்தப் பெண்களின் வாழ்க்கையை கட்டுப்படுத்தும் ஆணாதிக்க நடைமுறைகள், சட்ட அமைப்பால் வலுப்படுத்தப்படுகின்றன. குறிப்பாக கிராமப்புறங்களில் பெண்கள் திட்டமிட்ட பாகுபாட்டை எதிர்கொள்கின்றனர். ஆண்களின் கல்வியறிவு விகிதம் கணிசமாக குறைவாக உள்ளது. மேலும் பெண்கள் அதிக நேரம் வேலை செய்கிறார்கள். பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இன்றும் பொதுவானவை. தொழில்களில் போதுமான பெண்கள் இல்லை. அரசியலமைப்பு சட்டசபையில் பெண்களின் பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அனைத்து மாநில வழிமுறைகளிலும் பெண்களின் சம பங்களிப்பு இலட்சியத்திலிருந்து வெகு தொலைவில் உள்ளது.
வரலாறு[தொகு]
நேபாளத்தில் பெண்களுக்கு எதிரான பாகுபாட்டின் முதல் வடிவங்களில் ஒன்று உடன்கட்டை ஏறல் நடைமுறையில் தொடங்கியது. இது ராணா பிரதமர் சந்திர சம்சாரால் ஒழிக்கப்பட்டது. அதன் பிறகும் ஆணாதிக்க நிலைமை தொடர்ந்தது. பெண்கள் வளங்களிலும், வாய்ப்புகளிலும் மட்டுப்படுத்தப்பட்ட அணுகலைப் பெற்றனர். குடும்ப வன்முறை, சிறுவர் திருமணம், பெண்கள் கடத்தல், நிலை, முடிவெடுப்பதில் பெண்களின் பங்கேற்பு ஆகியவை பெண்கள் எதிர்கொள்ளும் சில முக்கிய பிரச்சினைகளாகும். [1]
நேபாளத்தில் கல்வியறிவு விகிதம் 52.74% ஆக இன்னும் குறைவாகவே உள்ளது ( சிபிஎஸ், 2001). சமீபத்திய ஆண்டுகளில் முன்னேற்றம் இருந்தபோதிலும், ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான கல்வியறிவு விகிதங்களில் உள்ள ஏற்றத்தாழ்வு இன்றும் உள்ளது. 2001ஆம் ஆண்டில், பெண்களின் கல்வியறிவு விகிதம் 42.49%ஆக இருந்தது. பெண்களின் கல்வியறிவு குறைந்த விகிதத்தில் அவர்கள் வீட்டில் எதிர்கொள்ளும் பாகுபாடு காரணமாக இருக்கலாம்.
பெண்கள் பாலின அடிப்படையிலான வன்முறையை எதிர்கொள்கிறார்கள். இது பள்ளியில் சேருவதற்கான அல்லது முறையான கல்வியைப் பெறும் திறனை பெரிதும் கட்டுப்படுத்துகிறது. மேலும், மதம் பெண்கள் கல்வி பெறும் வாய்ப்புகளை கட்டுப்படுத்துகிறது. உதாரணமாக, நேபாளத்தில் பெரும்பான்மையான பெண் முஸ்லிம் மக்கள் அடிப்படை கல்வியை இழந்துவிட்டனர். 20% மட்டுமே அனைத்து வகையான கல்வியையும் பெற்றிருக்கிறார்கள். [2]
முறைசாரா துறை சேவை மையம் (ஐஎன்எஸ்இசி) சமீபத்தில் வெளியிட்ட நேபாள மனித உரிமைகள் ஆண்டு புத்தகம் 2012இல், நாடு முழுவதும் உள்ள 75 மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், 648 பெண்கள் 2011இல் வன்முறையால் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. கூடுதலாக, 18 வயதிற்குட்பட்ட சிறுமிகளின் எண்ணிக்கை 379 ஆக உள்ளது. [3]
குடும்ப வன்முறைக்கு ஆளான நேபாள பெண்களின் விகிதம் 60 முதல் 70 சதவிகிதம் என மதிப்பிடப்பட்டுள்ளது. கிராமப்புறச் சமூகங்களில் பாலின அடிப்படையிலான வன்முறை மோசமாக உள்ளது. அங்கு 81 சதவீத பெண்கள் தொடர்ச்சியான குடும்ப வன்முறையை அனுபவிக்கின்றனர். இந்த நிகழ்வுகளில் கணவர்களால் உடல் ரீதியான துன்புறுத்தல், பலதாரமணம், வரதட்சணை தொடர்பான கொலைகள் , குடும்ப உறுப்பினர்களால் உடல் மற்றும் உளவியல் துன்புறுத்தல் ஆகியவையும் அடங்கும்.
இதையும் பார்க்கவும்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Basnet, Babita. "Women's Human Rights in Nepal on conflict situation" இம் மூலத்தில் இருந்து 8 September 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200908235404/https://en.unesco.org/sites/default/files/cooperation_meeting_gender_media_ppt_basnet.pdf.
- ↑ "Department for International Development Nepal, DFIDN Nepal Operational Plan: Gender Equality and Social Inclusion Annex". Dfid.gov.uk இம் மூலத்தில் இருந்து 30 October 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121030164332/http://www.dfid.gov.uk/Documents/publications1/op/nepal-2011-annex.pdf.
- ↑ Informal Sector Service Center (INSEC). "Nepal Human Rights Year Book 2012" இம் மூலத்தில் இருந்து 1 September 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180901100553/http://www.insec.org.np/wp-content/uploads/2017/12/RS2696_20.-Nepal-Human-Rights-Year-Book-2012-English.pdf.