நெல்லை கவிநேசன்
நெல்லை கவிநேசன் | |
|---|---|
| பிறப்பு | சௌ. நாராயண ராஜன் அக்டோபர் 17, 1961 செட்டிகுளம், திருநெல்வேலி மாவட்டம் |
| இருப்பிடம் | திருச்செந்தூர், தூத்துக்குடி மாவட்டம் |
| தேசியம் | இந்தியன் |
| கல்வி | எம். பி. ஏ, பிஎச்.டி, |
| பணி | செயலாளர், |
| பணியகம் | ஆதித்தனார் கல்வி நிறுவனங்கள், திருச்செந்தூர் |
| அறியப்படுவது | எழுத்தாளர், கல்வியாளர், தன்னம்பிக்கைப் பேச்சாளர், கவிஞர், |
| சமயம் | இந்து |
| பெற்றோர் | நா.சௌந்தரபாண்டியன் (தந்தை), சௌ .காந்திமதி (தாய்) |
| வாழ்க்கைத் துணை | நா. சிவசெல்வி |
| பிள்ளைகள் | நா .விவேக் சௌந்தர், நா. பவித்ரா சௌதாமினி. |
| உறவினர்கள் | சகோதரர்கள் -2, சகோதரி -1 |
| விருதுகள் | தமிழக அரசின் சிறந்த நூலுக்கான பரிசு, பயனெழுத்து படைப்பாளி விருது |
| வலைத்தளம் | |
| www. nellaikavinesan.com | |
நெல்லை கவிநேசன் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் இளைஞர் முன்னேற்றக் கட்டுரைகளை எழுதி வரும் தமிழக எழுத்தாளர், கல்வியாளர், தன்னம்பிக்கைப் பேச்சாளர். திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் சட்டமன்றத் தொகுதியிலுள்ள செட்டிகுளம் எனும் ஊரில், மேனாள் இராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் நா. சௌந்தரபாண்டியன் - சௌ .காந்திமதி இணையர்களுக்கு 1961 ஆம் ஆண்டு, அக்டோபர் 17 ஆம் நாளன்று மகனாகப் பிறந்த சௌ. நாராயணராஜன் எனும் இயற்பெயர் கொண்ட இவர் மேலாண்மைத் துறையில் முனைவர் பட்டம் பெற்று, தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் வணிக மேலாண்மைத் துறையில் பேராசிரியராகவும், துறைத் தலைவராகவும் பணியாற்றி பணி நிறைவு செய்திருக்கிறார். இவருடைய வழிகாட்டுதலில் மேலாண்மையியல் துறையில் 8 பேர் முனைவர் பட்டம் பெற்றிருக்கின்றனர். தற்போது திருச்செந்தூர் ஆதித்தனார் கல்வி நிறுவனங்களின் செயலாளராகப் பணியாற்றி வருகிறார்.
இவர், தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வு நூல்கள், தன்னம்பிக்கை நூல்கள், இந்திய ஆட்சிப் பணி தேர்வுகளுக்கான நூல்கள், ஆன்மிகம் மற்றும் வழிகாட்டும் நூல்கள் என்று மொத்தம் 69 நூல்கள் எழுதியிருக்கிறார். இந்நூல்களில், 2018 ஆம் ஆண்டு வெளியான, வெற்றி தரும் மேலாண்மை என்கிற இவரது நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறையால் வழங்கப்படும் சிறந்த நூலுக்கான பரிசினைப் பெற்றிருக்கிறது.
தினத்தந்தி நாளிதழுடன் இணைந்து, 20 ஆண்டுகளாக, இந்தியக் குடிமைப் பணித் தேர்வுகளுக்கான கருத்தரங்குகளில் பங்கேற்று உரை வழங்கியிருக்கிறார். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான ஆலோசனைகள் வழங்கும் கருத்தரங்குகளில் பங்கேற்று விளக்கமளிக்கும் இவர், [1] வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்று கல்வி ஆலோசனைகள் மற்றும் கருத்துரைகளை வழங்கியுள்ளார். [2]
தமிழக அரசின் சிறந்த நூலுக்கான பரிசு, பயனெழுத்து படைப்பாளி, கவிதை உறவு இதழ் வழங்கிய சிறந்த நூலுக்கான பரிசுகள், மதுரை மாவட்ட ஆட்சியர் வழங்கிய பரிசு, சங்கராச்சாரியார் சுவாமிகள் வழங்கிய கல்வி, இளைஞர் நலனுக்கான பரிசு, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் வழங்கிய சிறந்த இளையோர் செஞ்சிலுவைச் சங்க பரிசு போன்றவைகளைப் பெற்றிருக்கிறார்.