நெரூர் சதாசிவ பிரமேந்திரர் கோயில்
சதாசிவ பிரமேந்திரர் கோயில் கரூர் அருகே உள்ள நேரூரில் அமைந்துள்ளது. [1]நெரூர் கரூரில் இருந்து பஞ்சமாதேவி செல்லும் சாலையில் காவிரி ஆற்றின் கரையில் உள்ளது . இங்கு மிகவும் பழமையான சிவபெருமான் கோயில் காவிரி ஆற்றின் கரை அருகில் அக்கினீசுவரர் என்ற பெயரில் அமைந்துள்ளது. நெரூர் அக்கினீசுவரர் கோயிலுக்கு அருணகிரி நாதரே வந்து பதிகம் பாடியுள்ளதாக கூறப்படுகிறது[சான்று தேவை]. அக்கினீசுவரர் கோயிலுக்கு பின்புறம் சதாசிவ பிரமேந்திரரின் சமாதி அமைந்துள்ளது.
சதாசிவ பிரமேந்திரர் வரலாறு
[தொகு]சதாசிவபிரமேந்திரர் மதுரை மாநகரில் 17-18 ஆம் நூற்றாண்டில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தவர்.இவரின் தந்தை சோமநாத அவதானியார், தாயார் பார்வதி அம்மையார். சதாசிவ பிரமேந்திரரின் இயற்பெயர் சிவராமகிருட்டிணன் என்பதாகும். இளம் வயதிலேயே இவருக்குத் திருமணம் நடைபெற்றது. இவர் பரமசிவேந்திராள், வேங்கடேச அய்யர் ஆகியோரிடம் முறையாக சாத்திரங்களை கற்று தேர்ந்தார். பரமசிவேந்திராளிடம் கல்வி கற்று வரும் போது இவரின் திறமைகளை கேள்விப்பட்டு மைசூர் மகாராசா இவரை சமத்தான வித்வானாக்கி கொண்டார். மைசூர் சமத்தானத்தில் மற்ற வித்வான்களை எல்லாம் வாத திறமையில் தோற்கடித்தார். இதை கேள்வியுற்ற அவரின் குரு பரமசிவேந்திராள் இவரை அழைத்து ஊர் வாயெல்லாம் அடக்க கற்றுக் கொண்ட நீ உன் வாயை அடக்க கற்றுக் கொள்ளவில்லையே என்று கூறியுள்ளார். உடனே மைசூர் மகாராசா சமத்தான வித்வான் பதவியை துறந்து இனி பேசுவதில்லை என்று முடிவு செய்து மவுனத்தை கடைபிடித்து வந்தார். மேலும், மனிதர்கள் நடமாட்டம் அற்ற காடு, மலைப் பகுதிகளில் சென்று வசிக்க ஆரம்பித்தார். தீவிர யோக சாதனைகளில் ஈடுபட்டார். தவத்தின் விளைவாய் தான், தனது என்ற எண்ணங்கள் நீங்கி சுதிதப் பிரக்ஞன் ஆனார். அதுமுதல் சதா பிரம்ம நிலையில் லயித்திருப்பது சதாசிவ பிரம்மேந்திரரின் வழக்கமானது. ஊன் இல்லை. உறக்கம் இல்லை. உணவு இல்லை. உடை இல்லை ஆசை, அபிலாசைகளைத் துறந்த அவதூதராக நடமாடத் துவங்கினார்.
ஒருமுறை கொடுமுடியில் காவிரி ஆற்றின் குறுக்கே இருந்த பாறையில் அமர்ந்து தவம் செய்து கொண்டிருந்தார் சதாசிவ ப்ரமேந்திரர். தூரத்தே இருந்து அவர் தவம் செய்வதை மக்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் ஆற்றில் திடீரென வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி மகானை அடித்துச் சென்றுவிட்டது. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் வெள்ளத்தினால் அவர் அடித்துச் செல்லப்பட்டு விட்டார் என்றே மக்கள் கருதினர். பல நாட்கள் கழித்து வெள்ளம் வடிந்தது. அப்போது வீடு கட்ட மணல் எடுப்பதற்காக வந்த சிலர் ஆற்றின் ஒருபுறத்தில் தோண்டினர். அப்போது திடீரென மண்வெட்டியில் இருந்து ரத்தமாக வந்ததைக் கண்டு அஞ்சிய அவர்கள் மேலும் தோண்டிப் பார்த்த போது,. உள்ளே அமர்ந்த நிலையில் கண்களை மூடி சதாசிவர் தவம் செய்து கொண்டிருப்பது தெரிந்தது. அவர் தலை மீது மண்வெட்டி பட்டு, அந்தக் காயத்திலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. மக்கள் கூக்குரல் கேட்டுக் கண் விழித்த சதாசிவர், எதுவும் நடக்காதது போல் அவ்விடம் விட்டு வேகமாகச் சென்று விட்டார்.
புதுக்கோட்டையை அடுத்த திருவரங்குளம் காட்டுப் பகுதியில் சுவாமிகள் ஒருமுறை சுற்றிக் கொண்டிருந்தார். மகானைப் பற்றிக் கேள்விப்பட்ட புதுக்கோட்டை மன்னர், எப்படியாவது மகானிடம் பேசி, தன்னோடு அரண்மனைக்கு அழைத்துச் செல்ல விரும்பினார். அதனால் மகான் செல்லுமிடமெல்லாம் தொடர்ந்து சென்று கொண்டிருந்தார். இப்படியே பல நாட்கள் கடந்தன. மன்னனும் ஊன், உறக்கமின்றி மகானையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தார். மகான் சதாசிவர் மனம் இரங்கவே இல்லை.
பின் ஒருநாள், ”என்னுடன் வராவிட்டாலும் பரவாயில்லை எனக்கு நீங்கள் மந்திர தீட்சை அளித்தால் போதும்” என சதாசிவரைத் தொழுதார் மன்னர். உளம் இரங்கிய சதாசிவரும், மணலில் தட்சிணாமூர்த்தி மந்திரத்தை எழுதிக் காண்பித்தார். அம்மந்திரத்தையே தனக்கான உபதேசமாகக் கொண்ட மன்னர், அவர் கைப்பட்ட அம்மணலை தமது ஆடையில் எடுத்துச் சேகரித்துக் கொண்டு அரண்மனைக்குச் சென்றார். அவர் வரைந்து காட்டிய அட்சரங்களைக் கொண்டு ஒரு யந்திரம் தாபித்து, அம்மணலை ஒரு தங்கச் சிமிழுக்குள் வைத்து பூசை செய்து வரலானார். (இன்றளவும் புதுக்கோட்டை அரண்மனையில் அந்தச் சிமிழ் பாதுகாக்கப்பட்டு, பூசை செய்யப்பட்டு வருகிறது.)
நூல்கள்
[தொகு]இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேல் வாழ்ந்தவராகக் கருதப்படும் இம்மகான் மானச சஞ்சரரே, சர்வம் பிரம்ம மயம், பிபரே இராமரசம், பிரூகி முகுந்தேதி போன்ற பல புகழ்பெற்ற கீர்த்தனைகளையும், பிரம்ம சூத்திர விருத்தி, பிரம்ம தத்துவ பிரகாசிகா, யோக சுத்தாகரா, ஆத்ம வித்திய விலாசம் போன்ற பல நூல்களையும் எழுதியிருக்கிறார்.
சீவ சமாதி
[தொகு]பல்வேறு அற்புதங்கள் புரிந்து, பலரது ஆன்ம ஞானம் சிறக்கக் காரணமாக இருந்த மகான் சதாசிவ பிரம்மேந்திரர், 1753-ம் ஆண்டில் சித்திரை மாதத்து தசமி திதி அன்று, கரூரை அடுத்த நெரூரில், சீவ சமாதி ஆனார்.
தல சிறப்பு
[தொகு]நெரூர் ஆலயத்தில் சதாசிவ பிரமேந்திராள் சமாதி அடைந்த இடத்தில் வில்வமரமும், சுயம்பு (தான்தோன்றி) இலிங்கமும் அமைந்திருக்கிறது. இங்கு வேண்டிக் கொள்பவர்களுக்கு அமைதியும், செல்வமும் பரிபூரணமாக கிடைக்கும் என்று நம்பிக்கை உண்டு. இத்தலத்தில் பெளர்ணமி பூசை, ஒவ்வொரு வியாழக்கிழமையும் குரு பூசை , சித்திரை மாத குரு வார பூசை போன்றவைகள் மிக சிறப்பாக கொண்டாப்படுகிறது.
நெருர் சதாசிவ பிரமேந்திரர் கோயில், கைலாச ஆசிரமத்தின் சார்பில் http://www.srikailashaashramam.org பரணிடப்பட்டது 2015-11-17 at the வந்தவழி இயந்திரம் பரணிடப்பட்டது 2015-11-17 at the வந்தவழி இயந்திரம் என்ற இணையதளம் செயல் பட்டு வருகிறது
படக்காட்சியகம்
[தொகு]-
சதாசிவ பிரம்மேந்திரர் சமாதியில் உள்ள மரத்தினை உயிர்பித்த தருணத்தினை குறிக்கும் கல்வெட்டு
-
சித்தர் சதாசிவ பிரம்மேந்திரரின் உருவப்படம்
-
நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் சீவசமாதி
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ [http://www.dinamani.com/edition_trichy/karur/2013/05/17/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/article1593936.ece நெரூரில் சதாசிவ பிரமேந்திரர் ஆராதனை விழா தொடக்கம் தினமணி -17 May 2013
வெளி இணைப்புகள்
[தொகு]- சதாசிவ பிரமேந்திரர் சமாதிக் கோயிலின் இணையதளம் பரணிடப்பட்டது 2015-11-17 at the வந்தவழி இயந்திரம் பரணிடப்பட்டது 2015-11-17 at the வந்தவழி இயந்திரம்
- 18 சித்தர்களும் சீவ சமாதிகளும் பரணிடப்பட்டது 2021-07-09 at the வந்தவழி இயந்திரம்