நெய்வேலி காட்டாமணக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நெய்வேலி காட்டாமணக்கு
Ipomoea carnea.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்

நெய்வேலி காட்டாமணக்கு அல்லது காட்டாமணி (Ipomoea carnea) (ஐப்போமியா கார்னியா) தமிழகத்தில் காணப்படும் ஒரு களைச்செடியாகும். தென் அமெரிக்காவை தாயகமாக கொண்ட இச்செடியை சுமார் 50 வருடங்களுக்கு முன் அலங்காரத்திற்கும், வேலி தடுப்பானாகவும் மற்றும் பசுந்தாள் உரமாகவும் பயன்படுத்துவதற்கு இந்தியாவிற்குள் அறிமுகப் படுத்தப்பட்டது. இது ஒரு நிரந்தரச் செடி வகையைச் சார்ந்தது. இவை ஆகாயத்தாமரையைப் போலவே பெரும் இழப்பையும் பயிர்களைப் பாதிக்கக்கூடிய களையாகும். இவைகளை கட்டுப்படுத்த பல வழிமுறைகளும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வடிவமைப்பு[தொகு]

சுமார் 2.3 மீட்டர் உயரம் வரை வளரும் இச்செடியின் தண்டுகள் பாய்போல் நிலத்தின்மேல் பின்னிப் பிணைந்து படரும் தன்மை கொண்டது. தண்டின் கணுக்கள் நிலத்தில் படும்போது அதிலிருந்து வேர்கள் தோன்றி பிறகு கணுவிலிருந்து புதிய தண்டுகள் செங்குத்தாக மேல்நோக்கி வளர ஆரம்பிக்கின்றன. இதன் இலைகள் அகலமாகவும் இதயம் போன்று வடிவம் கொண்டதாக பச்சைநிறங்களில் காட்சியளிக்கும். இவைகளின் பூக்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. இவைகளின் இலைகளை ஒடிப்பதின் மூலம் பால் போன்ற திரவம் வெளிப்படும்.

தீமைகள்[தொகு]

தமிழகத்தில் கானப்படும் களைகளில் இதுவும் ஒரு முக்கியப்பங்கை வகிக்கிறது. இந்த செடி நீர்ப்பாசன மற்றும் வடிகால் வாய்க்கால்களில் நீரின் சீரான போக்கைத் தடுக்கிறது. ஏராளமான நீர் ஆவியாகி வீணாகிறது. இச்செடியின் வளர்ச்சியினால் குளம் மற்றும் குட்டை போன்ற நீர்நிலைகளில் பிராணவாயு சேர்க்கை தடுக்கப்பட்டு மீன்வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது. இவைகள் ஒரு இடத்தையே புதர் போல மாற்றக்கூடிய வலிமையுள்ளது. இவைகள் தண்டு உடைந்து விழுந்தாலும் வேர்விடத்தொடங்கும்.

இவைகளை ஆடு உண்பதில்லை ஆனால் புதிதாக இது நிறைந்திருக்கும் இடங்களுக்கு அழைத்துவரப்படும் ஆடுகள் இதை உண்கின்றன.. அவ்வாறு அதன் தழைகளை உண்ணும் ஆடுகள் மாண்டும் விழுகின்றன. இத்தழையில் கழிச்சலை உண்டாக்கும் நச்சுப்பொருளும் ரத்த அணுக்களை அழிக்கும் நச்சுப்பொருளும், நரம்புகளைத் தாக்கும் நச்சுப்பொருளும் உண்டு. இதனால் இத்தழையை அதிக அளவில் ஏற்கும் வெள்ளாடுகள் இறப்பைத் தழுவுகின்றன. குறிப்பாக வெள்ளாடுகளைப் பொருத்தமட்டில் கவனம் கூடுதலாக இருக்க வேண்டுமென மருத்துவர்கள் கூறுகின்றனர்.

களையழிப்பு முறை[தொகு]

களைக்கொல்லி மூலம் இச்செடியை கட்டுப்படுத்துவது மிகவும் சிறந்தது மற்றும் சிக்கனமானது. நெய்வேலி காட்டாமணக்கு செடியை கோடைகாலத்தில் 0.2 சத 2, 4-டி சோடியம் உப்பு (ஒரு லிட்டர் நீரில் 2 கிராம் மருந்து) என்ற அளவில் தெளித்து நல்ல முறையில் கட்டுப்படுத்தலாம். இம்மருந்துடன் ஒரு லிட்டர் நீருக்கு யூரியா (10 கிராம்) மற்றும் சோப்பு திரவத்தை (ஒரு மில்லி) கலந்து தெளிப்பதால் மருந்து இலைப்பரப்பில் அதிக காலம் தங்கி இருந்து விரைவாகவும் அதிக அளவிலும் உட்கிரகிக்க உதவுகிறது. வேறு மருந்துகளாக இதனால் செடி வேருடன் அழிக்கப்படுகிறது. இம்மருந்து கரைசலை செடியின் இலைப்பாகம் மற்றும் தண்டுப்பாகம் நன்கு நனையும்படி மேலும் கீழும் கைத்தெளிப்பான் கொண்டு இலை நுனியிலிருந்து ஒரு சொட்டு மருந்து கீழே விழும்வரை நிதானமாகத் தெளிக்க வேண்டும். செடிகளை அடியோடு அழிக்க வேண்டியது அத்தியாவசியமாகும்.

மாற்றுமுறை[தொகு]

இதை எரிமூட்டியாகவும், அங்கக உரங்களாகவும், தழைச்சத்தாகவும் வயல்களில் பயன்படுத்தலாம் என வேளாண்மைப் பல்கலைக்கழகம் விளக்கியுள்ளது. இதிலிருந்து உயிர்களால் மட்கக்கூடிய நெகிழத்தை உற்பத்தி செய்யமுடியும் எனவும் ஒருத் தளத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]