நெட்டைக்கால் பறவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மர நெட்டைக்காலிப்பறவை (Anthus Trivialis)

நெட்டைக்கால் பறவை என்பது வீட்டுக்குருவி அளவுள்ள கரும்பழுப்பு நிறமுடையது. மார்பு பழுப்புப் பட்டைகளால் ஆனது. அலகு வலிமையற்றதும், வால் நீளமாகவும் இருக்கும். உடல் வெள்ளை இறகுகளால் போர்த்தப்பட்டுள்ளது. இணை இணையாகவும் தனித்தும் வெற்று நிலங்களில் சுற்றித் திரிகிறது. பனிக்காலத்தில் இந்தியாவிற்கு வலசை வருகிறது. ஒவ்வொன்றும் உருவ அமைப்பிலும் பழக்க வழக்கங்களிலும் ஒரே மாதிரியாகக் காணப்படும்.

வாழிடம்[தொகு]

இந்தியா முழுவதிலும், பாகிஸ்தான், இலங்கை, மியான்மரிலும் பரவியிருக்கிறது. நிறங்களின் அடிப்படையில் மூன்று இனங்களாகப் பிரிக்கலாம். நான்காம் இனமொன்று பனிக்காலத்தில் இந்தியாவிற்கு வருகிறது. பொட்டல் காடுகளிலிருந்து 2 கி.மீ உயரம் வரை கூடச் செல்லும். உழப்பட்ட நிலங்களிலும், கால்நடை மேய்கின்ற இடங்களிலும், மலை அடிவாரங்களிலும் இப்பறவை காணப்படுகிறது. வண்டுகளையும் சிறுபூச்சிகளையும் பெருமளவில் உண்ணும். பூச்சிகளைப் பிடிக்கும்போது வாலை ஆட்டிக் கொண்டே இருக்கும். இனப்பெருக்க காலத்தில் ஆண்பறவை வானிலிருந்து நிலத்தை நோக்கி வரும். பிப்ரவரி -அக்டோபர், மார்ச் ஜூன் மாதங்களில் இனப்பெருக்கம் செய்யும். 3 அல்லது 4 முட்டைகளை இடுகிறது. இருபால் பறவைகளும் கூடு கட்டுவதிலும், இளம் பறவைகளைப் பேணுவதிலும் கவனம் செலுத்துகின்றன.

மர நெட்டைக்காலிப்பறவை[தொகு]

நீலகிரி நெட்டைக்காலி (Anthus Nilghiriensis)

உடலமைப்பு 16.5 செ.மீ அளவும், இறகு 7-9 செ.மீ பின்கால் நகம் 7.6 செ.மீ அளவும் உடையது. அலகு கறுப்பு கலந்த பழுப்பு நிறமானது. கால்கள் இறைச்சி நிறம் உடையன. வெளிநாட்டிலிருந்து பனிக்காலத்தில் இந்தியாவிற்கு வலசை வருகிறது. வடமேற்கு இந்தியாவிலும் காஷ்மீரிலும் இனப்பெருக்கம் செய்கிறது.

இந்திய மர நெட்டைக்காலி[தொகு]

உடல் 15-16.5 செ.மீ அளவும், இறகு 8.5-8.9 செ.மீ அளவும், வால் 6.9 செ.மீ அளவும், கணுக்கால் 2.1 செ.மீ அளவும் கொண்டது. தலையிலும் கழுத்திலும் பழுப்பு கலந்த கறுப்பு வரிகள் உண்டு. வயிற்றுப்புறம் வெண்மையானது. இப்பறவை மலைகளில் வசித்து வருகிறது. காடுகளுக்கு அருகில் மரங்களுக்குக் கீழே கூட்டங் கூட்டமாகப் புல்வெளியில் மேயும். மரங்களுக்குள் ஓடி ஒளிந்து கொள்ளும். இமயமலைப் பகுதிகளில் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கிறது.

நீலகிரி நெட்டைக்காலி (Anthus Nilghiriensis)[தொகு]

உடல் 17.8 செ.மீ அளவும், இறகு 7.8 செ.மீ அளவும், வாழ் 5-15 செ.மீ அளவும், கணுக்கால் 2.5 செ.மீ அளவும் உடையன. கீழ்த்தாடை கறுப்பாகவும், நிறப்படலம் ஆழ்ந்த பழுப்பு நிறமாகவும் காணப்படும். கால்களும் பாதங்களும் சதை நிறைந்தவை. மலைகளிலும் புல்வெளியிலும் மேயும். இனப்பெருக்கம் மார்ச்-ஜூன் ஆகும். 3-4 முட்டைகள் இடுகிறது.

பாறை நெட்டைக்காலி (Anthus Sordidus Similis)

பாறை நெட்டைக்காலி (Anthus Sordidus Similis)[தொகு]

நீலகிரி, திருவாங்கூர் மலைகளில் பரவியிருக்கிறது. கற்களும், பாறைகளும் நிறைந்த புல்வெளிகளில் நன்கு மேய்கிறது. மார்ச் - மே இனப்பெருக்கக் காலமாகும். முட்டைகள் மஞ்சள் கலந்த பழுப்பு நிறமானவை.

ரிச்சர்ட் நெட்டைக்காலி (Anthus Richardi Vieill)[தொகு]

அலகு பழுப்பு நிறத்திலும் வாய் மஞ்சள் நிறத்திலும் காணப்படும், கால்கள் சதைப் பற்றுள்ளவை. விழிப்படலம் பழுப்பு நிறமானது. பனிக்காலத்தில் இந்தியாவிற்கு வரும். மேற்கு கடற்கரையின் திறந்த வெளி நிலங்களில் மேய்கிறது. சைபீரியாவிலும், மைய ஆசியாவிலும் இனப்பெருக்கம் செய்கிறது. பின்னங்கால் நகம் குட்டையானது. நெல் அறுவடைக்குப் பின்பு அந்த நிலங்களில் மேய்வதற்காகப் பனிக்காலத்தில் இந்தியா வருகிறது.

இந்திய நெட்டைக்காலி (Anthus Richardi Rafulus Vieill)[தொகு]

அலகு பெரியது. பின்கால் நகம் குட்டையானது. மலைகளிலே பெரும்பாலும் வசிக்கும். சில நேரங்களில் சமவெளிகளுக்கும் வரும். நெல் வயல்களில் அடிக்கடி தென்படும். மார்ச்-ஜூனில் இனப்பெருக்கம் செய்யும். தரைக்குக்கீழ் புற்களைக் கொண்டு கூடுகளை அமைத்துக் கொள்கிறது.

கபில நிற நெட்டைக்காலி ([1])[தொகு]

மேல்புறம் பழுப்பு நிறமானது. விழிப்படலம் கரும்பழுப்பு நிறத்தில் உள்ளது. கால்களும் பாதங்களும் மஞ்சள் நிற சதைப்பற்று கொண்டவை. பனிக்காலத்தில் தென்னிந்தியாவிற்கு வலசை வரும். ஐரோப்பாவில் இனப்பெருக்கம் செய்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Anthus Campestries

[1] [2] [3]

  1. அறிவியல் களஞ்சியம் தொகுதி 14
  2. BirdLife International (2012). "Anthus campestris". IUCN Red List of Threatened Species. Version 2013.2. International Union for Conservation of Nature. Retrieved 26 November 2013.
  3. Moss, Stephen. "Brits and their birds". BBC Wildlife Magazine. Retrieved 9 December 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெட்டைக்கால்_பறவை&oldid=3850620" இலிருந்து மீள்விக்கப்பட்டது