நெட்டிமையார்
நெட்டிமையார் சங்க காலப் பெண் புலவர்களில் ஒருவர். நீண்ட இமைகளை உடையவர் என்ற காரணத்தால் நெட்டிமையார் எனும் பெயர் அமைந்திருக்கலாம். பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதியை இவர் பாடிய பாடல்கள் புறநானூற்றில் 9[1], 12[2], 15[3] ஆம் எண்வரிசையில் தொகுத்து வைக்கப்பட்டுள்ளன.
- எம்கோ வாழிய குடுமி-தம்கோச்
- செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த
- முந்நீர் விழவின் நெடியோன் (புறம்-9)
இவர் சொல்லும் செய்திகள்
[தொகு]புறம் 9
[தொகு]போரில் அறத்தாறு
[தொகு]போர் தொடங்குவதற்கு முன்பு பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி மக்களுக்கு அறிவிக்கிறான். போரில் சாகக் கூடாது என்று அவன் சிலரை எண்ணுகிறான். அவர்கள்: பசுவினம், பசுப்போன்ற பார்ப்பன மக்கள், பெண்டிர், பிணியாளர், குழந்தை இல்லாத ஆடவர் - ஆகியோர்.
- கோப்பெருஞ்சோழன் தன்னுடன் வடக்கிருந்து உயிர் துறக்க வந்த பொத்தியாரைத் தடுத்துக் குழந்தை பிறந்தபின் வருக எனத் தடுத்ததை இவ்விடத்தில் நினைவுகூரலாம்.
முந்நீர் விழவின் நெடியோன்
[தொகு]நெடியோன் என்னும் பாண்டிய அரசன் 'முந்நீர் விழா' கொண்டாடினான். அதனால் அவன் முந்நீர் விழவின் நெடியோன் என்று போற்றப்பட்டான். அது பஃறுளி என்னும் ஆறு கடலோடு கலக்குமிடத்தில் நடைபெற்றது.
- முந்நீர் = ஆற்றுநீர், ஊற்றுநீர், கடல்நீர்
பஃறுளியாறு இந்தியப் பெருங்கடலில் கலக்குமிடத்தில் குடிநீருக்காக ஊற்றுநீரைப் பறித்துக்கொண்டு அவன் கொண்டாடியது முந்நீர் விழா.
முந்நீர் என்னும் கடலில் இக்காலத்துப் பாய்மரப் படகுப்போட்டி போன்று அக்காலத்து மரக்கலக் கப்பல்போட்டி நடத்தி விழாக் கொண்டாடினான் என்று இதனைச் சில அறிஞர் பெருமக்கள் கூறுகின்றனர்.