நூல் மூலப்பொருள்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நூல் மூலப்பொருள்கள்[தொகு]

பருத்தி

பலவகை இழைகள் மூலப்பொருள்களாக நெசவுத் தொழிலில் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றுள் சில மனித நாகரீகத்தின் தொடக்க காலத்திலிருந்து பயன்பட்டு வருகின்றன. ஏனையவை அண்மைக்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டவை. இவ்விழைகளின் வளர்ச்சியும், பயன்களும் அவற்றின் நூற்புத்திறன், தேவையான அளவில் கிடைத்தல், தயாரிப்புச் செலவும் சிக்கனமும், நுகர்வோருக்கு அவ்விழைகளின் இயல்பினால் தோன்றும் நிறைவு ஆகிய காரணிகளால் வரையறுக்கப்படுகின்றன.

புதுப்புது இழைகள் தோன்றும்போது நெசவுத் தொழிலில் இழைகளுக்குப் பெயரிடுதல், கண்டறிதல், வகையீடு செய்தல் ஆகிய பணிகள் சிக்கலாயின. தாங்கள் தயாரிக்கும் இழைகளுக்குத் தனிப்பெயர் அல்லது வணிகக் குறியீடு இட வேண்டும் என்னும் தனி நபர் விருப்பினால் இச்சிக்கல் உருவானது. இக்குழப்பத்திலிருந்து விடுபடும் பொருட்டு எத்துணியாயினும் அதில் இடம்பெற்றுள்ள (5%க்கு மேலாக) இழைகளின் ஏற்கப்பட்ட பெயர்களைத் தயாரிப்பாளர் கண்டிப்பாகக் குறிப்பிட வேண்டும் என்று அமெரிக்க அரசு ஆணை பிறப்பித்தது. இதனால் இழைகளை வகையீடு செய்வது எளிதாயிற்று.

பருத்தி[தொகு]

பருத்திக் காயில் உருவாகும் இழை பஞ்சாகும். ஒவ்வோர் இழையும் உள்ளீடற்ற முறுக்கப்பட்ட, தட்டையான ஒற்றைச் செல்லாகும். இவ்விழையில் 90% செல்லுலோசும், 6% ஈரமும், 4% இயல்பான மாசுப் பொருள்களும் உள்ளன. இழைகளின் வெளிப்பரப்பில் மெழுகு போன்ற பூச்சு பஞ்சுக்கு ஒட்டும் தன்மையை அளிக்கிறது. இவ்வியல்பே, இயல்பான முறுக்கும் நூலாக நூற்பதற்கு ஏற்ற இழையாகப் பருத்தியை விளங்கச் செய்கின்றன.

கம்பளி[தொகு]

ஆட்டின் தோலிலிருந்து வளரும் கரடுமுரடான இந்த இழை கரோட்டின் என்னும் புரதத்தினால் ஆனது. அலைவுமிக்க, செதில்களுடைய இழையான கம்பளியில் இரு வகை உள்ளது. இது ஆட்டின் இனத்திற்குத் தகுந்தாற் போல் அலைவு கூடுதலாகவும், சிறு நுண்ணிய செதில்கள் கொண்டதாகவும், அலைவு குறைந்தும், பெரு செதில்கள் கொண்டதாகவும் அமையலாம். பெரிய எண்ணிக்கையிலான நுண் செதில்களினால் கம்பளியின் கதகதப்பு கூடுகிறது. இக்கம்பளியின் தோற்றம் மங்கலானது. இவற்றில் கொழுப்புப் பொருள் மிகுந்துள்ளமையால் சாயம் குறைவாக உள்ளது. வெப்பத்தால் பாதிக்கப்படும் தன்மையும், பின்னல் தன்மையும் (Felting) கம்பளியின் இரு சிறப்பியல்புகளாகும்.

பட்டு[தொகு]

பட்டு உருவாக்கம்

பட்டுப் பூச்சி எனும் ஒருவகைக் கம்பளிப் புழுவின் கூட்டிலிருந்து பிரித்தெடுக்கப்படும் சன்னமான நூலிழை. புரதவகை இழையான பட்டு பெரும்பாலும் முசுக்கட்டைச் செடி பண்ணைகளில் பட்டுப்பூச்சிகள் கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலைகளில் வளர்க்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது. காட்டுச் சிற்றினமாகத் தோன்றும் டஸ்ஸா (Tussah) எனும் பட்டு கடினமானதாகும். பளபளப்பு, மென்மை, எடை குறைவு, வளமை, நீட்சி போன்றவற்றால் வனப்புமிகு இழையாக விளங்குகிறது. செயற்கை முறையிலும் தயாரிக்கப்படுகிறது.

கல்நார்[தொகு]

பாறைகளில் கால்சியம் சிலிகேட்டையும், மக்னீசியம் சிலிகேட்டையும் உள்ளடிக்கியதால் கிடைக்கும் நார்ப்பொருள். அமிலம், தீச்சுடர் ஆகியவற்றினால் பாதிப்படையாது. துருப்பிடிக்காது. இத்தூளை உள்ளிழுக்கும் போது புற்றுநோய் தோன்றக்கூடும். ஆதலால் பெரிதும் பயன்படுவதில்லை.

ரேயான்[தொகு]

பருத்தி விதை பிசிரிழைகளிலிருந்தோ சிலவகை மரங்களிருந்தோ செல்லுலோசைப் பிரித்து, தக்க கரைப்பானில் கரைத்து, மீண்டும் இழைவடிவாக்கி பெறப்படுகிறது. தயாரிப்பு முறைகளுக்குத் தகுந்தாற்போல் விசுகோஸ் ரேயான், குப்ரமோனியம் ரேயான், அசெட்டேட் ரேயான் என வகையிடப்படுகின்றன. அசெட்டேட் ரேயான் வெப்பத்தாலும் அழுத்தத்தாலும் வடிவமைக்கத்தக்கது.

நைலான்[தொகு]

டைகார்பாசிலிக் அமிலங்களையும் டைஅமீன்களையும் குறுக்குவினைக்குட்படுத்திப் பெறப்படும் இழை. ஒரு நைலானில் 85%க்கும் கூடுதலான அளவில் அமைடு தொகுதிகள் அரோமாட்டிக் வளையங்களுக்கிடையே அமைந்திருந்தால் அதனை அரமிடு என்பர். நைலான் ஒரு வலிமைமிக்க நீட்சித்தன்மை கொண்ட இழையாகும்.

பாலி எஸ்டர்[தொகு]

இழைப்பொருளில் குறைந்தது 85% எடை டெரிப்தாலிக் அல்லது அதன் தொடர்புடைய அரோமாட்டிக் அமிலத்தின் எஸ்ட்டர் இடம்பெறுகிறது. பல்வேறு தயாரிப்பாளர்கள் வெவ்வேறு வணிகப் பெயர்களுடன் பாலி எஸ்டரை தயாரிக்கின்றனர். வெப்ப நிகழ்வும், வலிவும் பொருந்திய இவ்விழை நீரை எளிதில் உறிஞ்சுவதில்லை.

ஸ்பாண்டக்ஸ்[தொகு]

குறைந்தது 85% பாலியூரித்தேன் தொகுதிகளை கொண்டது. இழை நீட்சிமிக்கது. நீச்சல் உடை, பணியன் போன்ற ஆண் உள்ளாடைத் தயாரிப்பில் பயன்படுகிறது.

வின்யான்[தொகு]

குறைந்தது 85% எடை வினைல் குளோரைடு தொகுதிகளைக் கொண்ட தொகுப்பு. நீலிழையான இதன் உருகுநிலை குறைவாக இருப்பதால் இது பயன் குன்றியதாகும்.

சரண்[தொகு]

85%க்கு மேல் வினைலிடீன் தொகுதிகளைக் கொண்ட நீண்ட சங்கிலித் தொகுப்பு. பல்லுறுப்பு சரண் என்னும் வணிகப் பெயரில் பயன்படுகிறது. இது உடைத் தயாரிப்புக்கு ஏற்றதல்ல.

[1] [2] [3] [4] [5]

  1. அறிவியல் களஞ்சியம் தொகுதி 14
  2. B.P. Corbman, Textiles - Fiber to Fabric, Sixth Edition, Mcgraw-hill Kogakusha, Ltd, Singapore, 1985
  3. Kohan, Melvin (1995). Nylon Plastics Handbook. Munich: Carl Hanser Verlag. ISBN 1569901899.
  4. "Silk". The Free Dictionary By Farlex. Retrieved 2012-05-23.
  5. "Silk". Etymonline. Retrieved 2012-08-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நூல்_மூலப்பொருள்கள்&oldid=3115295" இருந்து மீள்விக்கப்பட்டது