நூலகக் கட்டிடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாஸ்கோவில் உள்ள உருசிய அரசு நூலகம்

நூலகக் கட்டிடம் என்பது நூலகம் ஒன்றின் செயற்பாடுகள் இடம்பெறுவதற்கான வசதிகளை உள்ளடக்கும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்படும் கட்டிடத்தைக் குறிக்கும். நூலகங்களை அமைக்கும் வழக்கம் மிகப் பழைய காலத்திலேயே இருந்திருந்தாலும், கல்வி வசதிகள் எல்லோருக்கும் கிடைக்கும்படி வளர்ச்சியடைந்தமை, அச்சுத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, அதிகரித்த அறிவுத் தேவைகள் என்பன நூலகங்களின் தேவையை அதிகரித்துள்ளன. நூலகச் செயற்பாடுகளின் சிக்கல்தன்மை அதிகரித்துக்கொண்டு வந்தபோது அச் செயற்பாடுகளுக்குத் தேவையான வசதிகளும் அவற்றுக்கு ஏற்றாற்போல அமைய வேண்டியதாயிற்று. இதனால் இவ்வசதிகளை வழங்கும் கட்டிடங்களும் நூலகத்தின் தேவைகளுக்காகச் சிறப்பாக்கம் பெற வேண்டிய தேவை ஏற்பட்டது. இதனால் நூலகங்களுக்கெனச் சிறப்புத் தன்மை கொண்ட கட்டிடங்களை வடிவமைத்துக் கட்டினர்.


ஒரு நூலகத்தின் முக்கியமான செயற்பாடு பலவகையான நூல்களைச் சேமித்து வைப்பதும் அவற்றைப் பேணுவதும் ஆகும். அத்தோடு, நூலகத்தின் பயனர்கள் நூல்களை எடுத்து வாசிப்பதற்கான வசதிகள்; நூல்களைப் பயனர்கள் இரவல் வாங்குவதற்கான வசதிகள்; நூலகப் பணியாளர்களுக்கான வசதிகள்; பயனர்களுக்கும் பணியாளருக்குமான உணவு வசதிகள், கழிப்பறை வசதிகள்; நீர், மின்சாரம், மற்றும் பிற தேவைகளை வழங்குவதற்கான வசதிகள், கட்டிடப் பராமரிப்புக்கான வசதிகள் என்பனவும் நூலகக் கட்டிடம் ஒன்றிற்கு அவசியமானவை.

வகைகள்[தொகு]

ஒரு நவீன நூலகத்தின் உட்தோற்றம்

எல்லா நூலகங்களுமே ஒரே மாதிரியான பயனர்களுக்காக அமைக்கப்படுவதில்லை என்பதோடு அவற்றின் சேவை நோக்கங்களும் வேறுபட்டு அமைய முடியும். இதனால் நூலகங்களின் தன்மைக்கு ஏற்ப அவற்றுக்கான கட்டிடங்களும் பொருத்தமான வடிவமைப்புகளைக் கொண்டிருக்கும். பல்வேறு வகையான நூலகங்களுள் பின்வருவனவும் அடங்கும்:



சிலவகை நூலகங்கள் ஒரு குறிப்பிட்ட வகையான பயனர்களுக்கு மட்டுமே சேவை புரிகின்றன. எடுத்துக்காட்டாக சிறுவர் நூலகங்கள் சிறுவர்களுக்காகவும், கல்விசார் நூலகங்கள் உயர் கல்வித்துறை சார்ந்தோருக்கும் சேவை புரிகின்றன. இதனால் இவற்றுக்கான கட்டிடங்களிலும் சிறப்புச் செயற்பாட்டுப் பகுதிகள் தேவைப்படுகின்றன. சிறுவர் நூலகங்களை கதை சொல்வதற்கான இடவசதிகள், சிறுவர்கள் தூங்குவதற்கான வசதிகள் முதலியவற்றுடன் வடிவமைப்பதை இதற்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளமுடியும்.


அதேவேளை பொது நூலகங்கள் பரந்த பயனர் குழுக்களுக்குச் சேவை புரிகின்றன. கல்வித்தரம், வயது போன்ற வேறுபாடுகள் இன்றி எல்லாவகையான பயனர்களும் பொது நூலகங்களைப் பயன்படுத்துவதனால், பொது நூலகக் கட்டிடங்களில் எல்லோருக்கும் தேவையான வசதிகள் ஒருங்கே அமைந்திருக்கும். பெரிய நகரங்களில் உள்ள பொது நூலகங்கள் அந்நகரங்களின் ஒரு மதிப்புக்குரிய சின்னமாக அமைவதனால் அக்கட்டிடங்களை மிகுந்த அழகியல் அம்சங்களைக் கொண்டவையாகவும் அந்நகரங்களின் பண்பாட்டு மரபுகளை வெளிப்படுத்துவனவாகவும் அமைக்கின்றனர். சில சமயங்களில் கம்பீரமாகத் தோற்றமளிக்கும் படியும் வடிவமைக்கிறார்கள்.

நூலகத்தின் பகுதிகள்[தொகு]

பொதுவாக ஒரு நூலகத்தில் பல வகையான செயற்பாட்டுப் பகுதிகளும் அவற்றுக்குச் சிறப்பாக ஒதுக்கப்பட்ட இடவசதிகளும் இருக்கும். இவற்றைப் பின்வரும் பெரும் பிரிவுகளுள் அடக்கலாம்:


  • நூல் சேமிப்புப் பகுதி
  • பயனர் இருக்கைப் பகுதி
  • பணியாளர் வேலைப் பகுதி
  • கூட்டங்களுக்கான பகுதி
  • சிறப்புப் பயன்பாடுகளுக்கான பகுதி
  • பிற பகுதிகள்


நூல் சேமிப்புப் பகுதி[தொகு]

நூல் அடுக்குகள்

நூல் சேமிப்புப் பகுதி நூலகத்தின் அளவையும் தன்மையையும் பொறுத்துப் பல பிரிவுகளாக அமையும். இவற்றுள், அச்சு நூல்கள் சேமிப்புப் பகுதி, அச்சல்லாத பிற சேமிப்புகளுக்கான பகுதி, பருவ இதழ்களுக்கான பகுதி என்பன முக்கியமானவை. சேமிப்புப் பகுதியில் நூல்கள் எடுப்பதற்கு வசதியாக அடுக்குகளில் வைக்கப்பட்டிருக்கும். அடுக்குகள் சுவரோடு சேர்த்து வைக்கப்பட்டிருக்கலாம் அல்லது நடுவிலே தனியாக நிற்கும்படி வைக்கப்பட்டிருக்கலாம். நடுவில் இருக்கும் அடுக்குகளில் இரண்டு பக்கங்களிலும் புத்தகங்கள் அடுக்கப்பட்டிருக்கும் இதனால் இவ்வடுக்குகளின் இரு புறமிருந்தும் புத்தகங்களை எடுக்கக்கூடிய வகையில் நடைவழி இருக்கும். இவ்வாறு சேமிப்பில் இருக்கும் நூல்களின் அளவைப் பொறுத்து அடுக்குகள் வரிசை வரிசையாக இருக்கும். ஒவ்வொரு அடுக்கும் பல தட்டுக்களை உடையதாக இருக்கும்.


பயனர்கள் நேரடியாக அடுக்குகளிலிருந்து நூல்களை எடுக்கும் வசதிகள் உள்ள நூலகங்களில் அடுக்குகளுக்கு இடையிலான வழி அகலம் கூடியதாகவும், தட்டுக்களின் எண்ணிக்கை ஒரு பயனருக்கு தரையில் நின்றபடி எட்டி எடுக்கக்கூடிய அளவுக்கும் இருக்கும். பணியாளர்களே நூல்களை எடுத்துக் கொடுக்கும் நூலகங்களில் வழியின் அகலம் குறைவாக இருக்கலாம் என்பதுடன், அடுக்குகளின் உயரமும் கூடுதலாக இருக்கலாம். பணியாளர் ஏணிகளைப் பயன்படுத்தி நூல்களை எடுப்பர். பல நூலகங்களில் இரண்டு வகையான நடை முறைகளும் இருப்பது உண்டு. இத்தகைய பயன்பாட்டு வேறு பாடுகளைக் கருத்தில் கொண்டே சேமிப்புப் பகுதிக்கான இடவசதி ஒதுக்கப்படும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நூலகக்_கட்டிடம்&oldid=2138822" இலிருந்து மீள்விக்கப்பட்டது