நுகர்வோன்மிகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நுகர்வோர் எச்சப்பாடு / நுகர்வோன்மிகை (Consumer Surplus) என்னும் கருத்து முதன் முதலில் 1844 ல் பிரஞ்சு பொருளியல் நிபுணர் டியூப்பிட் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இக்கருத்துக்கு முழுவடிவம் கொடுத்தவர் பேராசிரியர் ஆல்பிரட் மார்சல் ஆவார்.

விளக்கம்[தொகு]

குறைந்து செல் இறுதி நிலைப் பயன்பாட்டு விதியின் (Law of Diminishing Marginal Return) படி ஒருவன் ஒரு பொருளை மேலும் மேலும் வாங்கும் பொழுது அவர் அப்பொருளிலிருந்து அடையும் திருப்தி அல்லது பயன்பாடு குறைந்து கொண்டே செல்லும். அப்பொருளில் இருந்து கிடைக்கும் மொத்த பயன்பாடு (Total utility) அதிகமாக இருந்தாலும் இறுதிநிலைப் பயன்பாடு ( Marginal Utility) குறைந்து கொண்டே வரும் என்பது தான் குறைந்து செல் நிலைப் பயன்பாட்டு விதி. நாம் வாழ்க்கையில் பல பொருட்களுக்கு அதிக விலை கொடுக்கத் தயாராக இருக்கிறோம். ஆனால் உண்மையில் அவற்றிற்கு விலை குறைவாக இருக்கலாம். நாம் கொடுக்கத் தயாராக இருக்கின்ற விலையைவிட உண்மையான விலை குறைவாக இருந்தால் ஒரு மிகுதியை உணர்கிறோம் இது நுகர்வோர் எச்சப்பாடு என்றழைக்கப்படும்.[1]

ஒரு பொருளை வாங்கும் பொழுது, அந்தப் பொருளிலிருந்து நமக்குக் கிடைக்கும் பயன்பாடு, நமக்கு லாபமாகும். அதற்காகக் கொடுக்கப்படும் விலை நமக்கு இழப்பாகும். நாம் வாங்குவதனால் கிடைக்கும் பயன்பாடு அதவாது நமக்குக் கிடைக்கும் லாபம், நாம் கொடுக்கும் விலை அதாவது நமக்கு ஏற்படும் இழப்பை விட அதிகமாக இருக்கும் பொழுது நாம் அப்பொருளை வாங்குவோம். எப்பொழுது இரண்டும் சமமாகுமோ அப்பொழுது அப்பொருளை வாங்குவதைத் தவிர்ப்போம். இதுபோல் நமது இழப்பு அதாவது நாம் கொடுக்கும் விலையை விட நமது லாபம் அல்லது அப்பொருளின் பயன்பாடு அதிகமாக இருக்கும் பொழுது ஏற்படும் உபரியே நுகர்வோர் எச்சம் என்று குறிப்பிடப்படுகிறது.[2]

இலக்கணம்[தொகு]

பேராசிரியர் ஆல்பிரட் மார்சல் இக்கருத்தை “ஒருவர் ஒருபொருள் இல்லாமல் போவதைக் காட்டிலும் வாங்குவதே மேல் என்று கருதி, கொடுக்கத் தயாராக உள்ள விலைக்கும், உண்மையில் அவர் கொடுக்கும் விலைக்கும் உள்ள வேறுபாடு நுகர்வோர் எச்சப்பாடாகும்” என்று விளக்குகிறார்.

நாம் ஒரு பொருளை வாங்கும் பொழுது பல எண்ணிக்கை உள்ள அதே பொருளை ஒரே விலைக்கு வாங்குகிறோம். கடைசி எண்ணத்திற்குக் கொடுக்கும் விலையையே முதல் எண்ணத்திற்கும் கொடுக்கிறோம். ஆனால் குறைந்து செல் பயன்பாடு விதியின் படி முதலில் வாங்கும் எண்ணங்களின் பயன்பாடு அதிகமாக இருக்கும். ஆதலால் அங்கு ஒரு மிகுதியை அடைகிறோம் [3] நுகர்வோர் எச்சப்பாட்டை தகுவிலைக்கும் (potential price) உண்மையான விலைக்கும் (actual price) உள்ள வித்தியாசம் என்று கூறலாம். அன்றாட வாழ்வில், உப்பு, தீப்பெட்டி, செய்தித்தாள் போன்ற மலிவான பொருள்களிலிருந்து நாம் அதிகமான பயன்பாட்டை (utility) பெறுகிறோம். ஆனால் இவற்றிற்கு குறைவான விலையையே நாம் தருகிறோம். இதனால் நுகர்வோர் எச்சம் கிடைகின்றது.

அன்றாட வாழ்வில் ஒரு நுகர்வோருடைய விருப்பத்தையும் தேர்வையும் அங்காடிகளின் போக்கு எப்படி எதிரொளிக்கின்றன, வீச்சையும் தாக்கத்தையும் எற்படுத்துகின்றன என்பதற்கு நுகர்வோர் எச்சப்பாடு மற்றுமொரு எடுத்துக்காட்டு ஆகும்.[4] ஆக தனி மனிதர்களின் வாழ்க்கைதரத்தை மேம்படுத்த அங்காடிகளின் போக்கை குறித்த புரிதல் அவசியம்.

நுகர்வோர் எச்சப்பாட்டை அளத்தல்[தொகு]

நுகர்வோர் எச்சப்பாட்டை அறிந்து கொள்வதற்கு கீழ்க்கண்ட பட்டியலும் வரைபடமும் உதவுகின்றது.

பட்டியல்[தொகு]

சர்க்கரை கிலோ இறுதிநிலைப்

பயன்பாடு தகுவிலை உருபா

உண்மை விலை

உருபா

நுகர்வோர்

எச்சப்பாடு

1 80 30 50
2 70 30 40
3 60 30 30
4 50 30 20
5 40 30 10
6 30 30 0

பட்டியலில் இறுதி நிலைப்பயன்பாடு என்பது ஒவ்வொரு பொருளிலிருந்தும் கிடைக்கும் பயன்பாடு ஆகும். இது நாம் கொடுக்கத் தயாராக இருக்கும் விலை அதாவது பொருளின் ‘தகுவிலை’. ஆனால் சந்தையில் பொருளுக்கு நாம் கொடுக்கும் விலை வேறு அது உண்மைவிலையாகும். இந்த இரண்டிற்கும் உள்ள வேறுபாடே நுகர்வோர் எச்சப்பாடாகும். மேலே உள்ள பட்டியலில் தகுவிலைக்கும் உண்மைவிலைக்கும் உள்ள வேறுபாடே நுகர்வோர் எச்சப்பாடாகும். இதனை ஒரு வரைபடம் மூலமும் விளக்கலாம்.

வரைபடம்[தொகு]

வரைபடத்தில் X அச்சில் பொருள்களும் Y அச்சில் பயன்பாடு அல்லது விலையும் குறிக்கப்படுகிறது. கோடிட்ட பகுதி ஒவ்வொரு அலகிலிருந்தும் கிடைத்த பயன்பாட்டைக் காட்டுகின்றது. ஆறாவரது பொருளுக்கு நுகர்வோர் எச்சப்பாடு பூஜ்யமாகும். மொத்த கோடிட்ட பகுதி நுகர்வோர் எச்சப்பாடு ஆகும்

பயன்கள்[தொகு]

  1. இரண்டு வேறுபட்ட இடங்களில் அல்லது காலங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை ஒப்பிடுவதற்கு இக்கருத்து பயன்படுகிறது. கிராமங்களில் வாழும் மக்களைவிட, நகரங்களில் வாழும் மக்கள் பலவித பொருட்களை நுகர்வதால் நுகர்வோர் எச்சப்பாடு அதிகம் கிடைக்கும். நுகர்வோர் எச்சப்பாடு அதிகம் இருந்தால் மக்கள் வாழ்க்கைத்தரம் மேம்பட்ட தாக உள்ளதாகக் கொள்ளலாம்
  2. நுகர்வோர் எச்சப்பாடு நேர்முக வரி, மறைமுக வரியை விட சிறந்தது என்னும் கருத்தை வலுவூட்டுகிறது. நேர்முகவரியினால் எற்படும் இழப்பை ஒருவர் வேறு செலவினங்களின் மீது ஏற்றி ஈடு கட்டலாம். அதனால் அவர் இறுதினிலை அலகுகளை ( Marginal Units) மட்டுமே இழப்பார். ஆனல் மறை முக வரியில் அவ்வாறு செய்ய இயலாது. அவர் அந்தப் பொருளையே தியாகம் செய்ய வேண்டிவரும்
  3. பன்னாட்டு வாணிபத்தினால் ஏற்படும் நன்மையை அறிய இக்கருத்து உதவியாக உள்ளது. இறக்குமதியாளர்களுக்கு நுகர்வோர் உபரி கிடைத்தால், பன்னாட்டு வாணிகம், அந்நாட்டிற்கு நன்மையைத் தந்துள்ளது என்று அறியலாம்.
  4. உபயோக மதிப்பிற்கும் மாற்று மதிப்பிற்கும் ( Value in Use- Value in Exchange) இடையே உள்ள வேறுபாட்டை எடுத்துக்காட்ட இக்கருத்து பயன்படுகிறது
  5. விலை நிர்ணயம் செய்யும் போது முற்றுரிமையாளர்களுக்கு இக்கருத்து உதவுகின்றது. நுகர்வோருக்கு ஒரு சிறிதளவாவது உபரிப் பயன்பாடு கிடைக்கும் வகையில் விலையை நிர்ணயிக்க வேண்டும்.
  6. அரசு பொருத்தமான வரிக்கொள்கையைத் தேர்ந்தெடுக்க இக்கருத்து உதவுகின்றது. நுகர்வோர் எச்சப்பாடு அதிகம் உள்ள பொருள்களின் மீது வரி விதிப்பதால் தேவையான நிதியைத் திரட்ட முடியும். மானியம் (subsidy) வழங்கும் போதும் முடிவுசெய்ய இக்கருத்து உதவுகின்றது.

உசாத்துணை[தொகு]

  1. Roger A Arnold, Economics, 1989, West Publishing Company, ISBN 0-314-06589-X
  2. ML Seth, Principles of Economics( Macro and Micro Ecconomics), Lakshmi Narayan Agarwal Educational Publishers.Agra,1979,
  3. Paul A Samuelson, William D Nordhaus, Indian adoption by Sudip Chauhuri, Anindya Sen, Economics, 2015, McGraw Hill Education ( India) Private Ltd. ISBN 978-0-07-070071-0, ISBN 0-07-070071-0
  4. Karl E Case, Ray C Fair, Principles of Economics, 2002, Pearson Education ( Singapore) Pte Ltd., ISBN: 81-7808-587-9
"https://ta.wikipedia.org/w/index.php?title=நுகர்வோன்மிகை&oldid=2697541" இலிருந்து மீள்விக்கப்பட்டது