நீல அறை (பிக்காசோ)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீல அறை
ஓவியர்பாப்லோ பிக்காசோ
ஆண்டு1901
வகைகன்வசில் நெய் வண்ணம்
பரிமானங்கள்50.8 சமீ × 60.96 சமீ (21 அங் × 24 அங்)

நீல அறை என்பது, 1901ல் பாப்லோ பிக்காசோவினால் வரையப்பட்ட ஓவியம் ஆகும். இது அவரது நீலக் காலத்தைச் சேர்ந்தது.

ஓவியத்தின் தன்மைகள்[தொகு]

இவ்வோவியத்தில், பிக்காசோவின் நீலக்காலப் பாணி முழுமையான வளர்ச்சியைப் பெற்றிருப்பதைக் காணலாம். நீல அறை ஓவியத்தில் பயன்படுத்தியுள்ள குளிர்ச்சியான சாயைகளும், இயற்கை ஒளியின் வலுவான பயன்பாடும் இவ்வோவியத்தில் குளித்துக்கொண்டிருக்கும் இளம் பெண்ணைப் பார்வையாளர்கள் பார்க்கத் தூண்டுகின்றன. இந்த ஓவியம் திட்டுத்திட்டாகவும், ஓரளவு தெளிவற்றதாகவும் காணப்பட்டாலும், எடுபொருளும், காட்சியும் அடையாளம் காணக்கூடியவையாக உள்ளன. பெண்ணின் உருவமும் பின்னணியும் பிக்காசோவின் நீலக்கால ஓவியங்களில் காணப்படும் வழமையான அம்சங்கள் ஆகும்.[1]

மறைந்திருக்கும் ஓவியம்[தொகு]

எக்சுக் கதிர்த் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இவ்வோவியத்தை ஆய்வு செய்த வரலாற்றாளர்களும், அறிவியலாளர்களும் சேர்ந்த குழுவொன்று இவ்வோவியத்தின் கீழ் இன்னொரு ஓவியம் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். இவ்வாறு மறைந்துள்ள ஓவியத்தில் ஒரு வயதான மனிதன் தனது தலையைக் கையில் தாங்கியபடி இருக்கும் உருவம் உள்ளது.[2]

பிக்காசோ ஒரு ஓவியத்தின்மீது இன்னொரு ஓவியம் வரைந்ததற்கான காரணம் குறித்து ஆய்வாளர்கள் ஆராய்ந்துள்ளனர். நீலக் காலத்தில் பிக்காசோவின் வாழ்க்கையை ஆராய்ந்த இவர்கள், அக்காலத்தில், ஓவியம் வரைவதற்கான கன்வசு போன்றவற்றை வாங்குவதற்குப் பணம் இல்லாத நிலையில் பிக்காசோ இருந்தார் என்கின்றனர். தெருவில் செல்லும் சாதாரண மனிதர்களை இவர் வரைந்ததனால் அவற்றை வாங்குவதற்கு எவரும் முன்வரவில்லை. இதனால், ஏற்கெனவே வரைந்த ஓவியங்களின்மீதே புதிய ஓவியங்களை அவர் வரைந்ததாகக் கருதப்படுகிறது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. “Pablo Picasso: The Blind Man’s Meal”.
  2. Simon, “Buried by Picasso, The Man Beneath ‘The Blue Room’ Tells a Story,” 1.
  3. Simon, “Buried by Picasso, The Man Beneath The Blue Room Tells a Story,” 1.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீல_அறை_(பிக்காசோ)&oldid=1925978" இலிருந்து மீள்விக்கப்பட்டது