நீலகிரி மலைச்சாலைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நீலகிரி மலைச் சாலைகள் (Nilgiri Ghat Roads) என்பவை தென்னிந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள நீலகிரி மாவட்டத்தில் காணப்படும் மலைச் சாலைகளைக் குறிக்கின்றது. கிட்டத்தட்ட நீலகிரி மாவட்டம் முழுவதும் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் ஒரு பகுதியான நீலகிரி மலையில் அமைந்துள்ளது. கருநாடகம் மற்றும் கேரள மாநிலங்களுக்கு தமிழக எல்லையாகவும் நீலகிரி மாவட்டம் திகழ்கிறது. இதன் விளைவாக மூன்று மாநிலங்களில் இருந்தும் சாலை வழியாக நீலகிரி மலையை வந்து அடைய முடியும். இந்த மலைச் சாலைகளில் பெரும்பாலானவை அடர்ந்த வனப்பகுதியாகவும் மற்றும் பல கூர்மையான கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட பாதைகளாகவும் உள்ளன.

முக்கிய மலைச் சாலைகள்[தொகு]

நீலகிரிக்கு செல்லும் ஐந்து முக்கியமான மலைச் சாலைகள் கீழே தரப்பட்டுள்ளன :[1].

கோத்தகிரி மலைச்சாலை (மாநில நெடுஞ்சாலை எண் 15)[தொகு]

பாதை: ஈரோடு-கோபிச்செட்டிப்பாளையம்-சத்தியமங்கலம், ஈரோடு மாவட்டம்-மேட்டுப்பாளையம்-அரவேணு-கோத்தகிரி-உதகமண்டலம்

கோத்தகிரி மலைச்சாலை நீலகிரிக்கு மிகவும் பழமையான ஒரு பாதையாகும். 1819 ஆம் ஆண்டு யான் சல்லிவன் நீலகிரிக்கான தனது கண்டுபிடிப்பு பயணத்தின்போது தேர்ந்தெடுத்த வழியைப் இப்பாதை பின்பற்றுகிறது. மேட்டுப்பாளையம் மற்றும் கோத்தகிரி நகரங்களுக்கு இடையிலான தூரம் 33 கி.மீ.ஆகும். இப்பாதையில் 4 ஊசி முனை வளைவுகள் மட்டுமே உள்ளன. .இந்த பாதை மாநில நெடுஞ்சாலை 15 இன் ஒரு பகுதியாகும். 2012 ஆம் ஆண்டு நிலவரப்படி குன்னூர் மலைச் சாலையை விட இச்சாலை தரமானதாக இருந்தும் கூட மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்குச் செல்ல இப்பாதை சிறிது குறைவாகவே பயணிக்கப்பட்டுள்ளது. குன்னூர் வழியாகச் செல்லும் வழியை விட இவ்வழி சற்று நீண்ட தொலைவையும் கொண்டுள்ளது. கிடைத்திருக்கும் புள்ளிவிவர ரீதியாக நோக்கினால் இச்சாலையில் நிகழும் நிலச்சரிவுகளும் மிகக்குறைவாகும். இந்த வழியிலிருந்து குன்னூருக்குத் திருப்புவது சாத்தியமாகும். அரவேனுவிலிருந்து பாண்டிசோலாவுக்கு ஓர் இணைப்புப் பாதை உள்ளது.

பயணிகள் கோயம்புத்தூர் மற்றும் சென்னையிலிருந்து ஈரோடு மற்றும் கோபிசெட்டிபாளையம் வழியாக மேட்டுப்பாளையத்தை அடைகிறார்கள்.

குன்னூர் மலைச்சாலை (தேசிய நெடுஞ்சாலை எண் 67)[தொகு]

பாதை: கோயம்புத்தூர்-மேட்டுப்பாளையம்-கல்லாறு-பர்லியாறு-குன்னூர்-உதகமண்டலம்-பைக்காரா ஆறு கல்லாறு மலைச்சாலை என்றும் இப்பாதை அழைக்கப்படுகிறது. கல்லாறு மற்றும் குன்னூர் ஆறுகளை தொடர்ந்து இச்சாலை செல்வதால் இவ்விரு பெயர்களும் அடையாளமாகின்றன. மலைச்சாலைகளில் அதிகம் பயணம் செய்யப்பட்ட பாதையாக இப்பாதை கருதப்படுகிறது. 14 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட இச்சாலையை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சமீபத்தில் தனது கட்டுப்பாட்டின் கீழ் எடுத்துக்கொண்டது. எனவே இப்பாதை தற்போது தேசிய நெடுஞ்சாலை எண் 181 இன் ஒரு பகுதியாக அடையாளப்படுத்தப்படுகிறது. முன்னதாக நீலகிரி மாவட்ட்த்திற்குள் வாகனங்கள் நுழைய பர்லியாறு கிராமத்தில் நுழைவுவரி வசூலிக்கப்பட்டது.

இப்பகுதியில் பலத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக இந்த சாலை 2010 இல் மூடப்பட்டது[2]. அதைத் தொடர்ந்து, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சாலையை சீரமைத்தது. மீண்டும் ஏற்பட்ட மழை காரணமாக சாலை மீண்டும் அரிக்கப்பட்டது[3]. 2012 ஆம் ஆண்டு நெடுஞ்சாலைத் துறை இந்திய நெடுஞ்சலை ஆணையத்திற்கு எதிராக, சாலையை தொடர்ந்து பராமரிக்காமல் மனித உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் செயல்களை கையாள்கிறதென குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் 133 வது பிரிவின் கீழ் குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடங்க முடிவு செய்தது, சாலையை தொடர்ந்து பராமரிக்காததால் மனித உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் செயல்களை கையாளுவதாக குற்றம் சாட்டப்பட்டது [4].

கூடலூர் மலைச்சாலை (தேசிய நெடுஞ்சாலை எண் 212 மற்றும் 67)[தொகு]

பாதை: குண்டுலுபெட்-பந்திப்பூர்-முதுமலை தேசியப் பூங்கா-கூடலூர் (நீலகிரி)-ஊட்டி. பொதுவாக இப்பாதை மைசூர் மலைச்சாலை அல்லது மைசூர் சாலை என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. இது கர்நாடகாவிலிருந்தும் கேரளாவிலிருந்தும் நீலகிரியை சென்றடைய உதவும் முக்கியமான சாலையாகும். கர்நாடகாவிலிருந்து குண்டுலுபெட் நகரத்திற்கு பயணிக்கும் பயணிகள் மைசூர் குண்டுலுபெட் தேசிய நெடுஞ்சாலை எண் 212 வழியாகவும், கேரளாவிலிருந்து பயணிக்கும் பயணிகள் கூடலுர் நகரத்தை கோழிக்கோடு-சுல்தான் பத்தேரி நெடுஞ்சாலை எண் 212 இன் வழியாகவும் நீலகிரியை அட்டைகின்றனர்.

"மைசூரிலிருந்து முதுமலை தேசிய பூங்கா வழியாக வரும் நீண்ட பாதை விவாதிக்கக் கூடிய அளவுக்கு நீண்ட காட்சிகளைக் கொண்டுள்ளது. அதிகாலையிலோ அல்லது மாலை நேரத்திலோ இப்பாதையில் பயணம் செய்தால் வனவிலங்குகள் குறிப்பாக ஊனுண்ணிகள் கூட சாலையில் உணவு உட்கொள்வதை கண்டிப்பாக நீங்கள் கண்டறிவீர்கள். கூடலூருக்கு அருகில் செல்லச் செல்ல தேயிலைத் தோட்டங்களும் கம்பிரமாக நிற்கும் யூகலிப்டசு மரங்களையும் காண்பீர்கள். பின்னர் நீங்கள் பைகாரா அணை மற்றும் பைகாரா நீர்வீழ்ச்சியைக் கடந்து செல்வீர்கள்” என்ற ஒரு பயணியின் கூற்று இப்பாதையை பற்றிய ஒரு புரிதலைக் கொடுக்கிறது.

குன்னூர் மலைச்சாலையைப் போலவே 2003-2006 காலத்தில் இந்த பாதை மோசமான நிலையில் இருந்தது. ஊட்டியில் இருந்து கூடலூரை நோக்கிய இந்த பாதை குன்னூர் மலைச்சாலையை உருவாக்கும் அதே தேசிய நெடுஞ்சாலை எண் 67 இன் தொடர்ச்சியாகும். தேசிய நெடுஞ்சாலை எண் 67 கூடலூரில் முடிவடைகிறது. அங்கு இது தேசிய நெடுஞ்சாலை எண் 212 உடன் இணைந்து குண்டுலுப்பெட்டை நோக்கி செல்கிறது.

சிகூர் மலைச்சாலை[தொகு]

வழித்தடம்: முதுமலை-கல்லட்டி-ஊட்டி

கல்லட்டி மலைச்சாலை என்றும் செங்குத்து மலைச்சாலை என்றும் இப்பாதை அழைக்கப்படுகிறது. முதுமலையில் உள்ள தெப்பக்காடு என்ற இடத்தில் கூடலூர் மலைச்சாலையிலிருந்து குறுகிய வழி கிளை ஒன்று உள்ளது. செங்குத்தானதென்றாலும் கூட இந்த மலைப்பாதையில் சென்றால் தோராயமாக 30 கிலோமீட்டர் தொலைவு குறைகிறது. 36 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட இப்பாதையில் குறுகிய சக்கர வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றன. இரவு நேரங்களில் பாதை மூடப்படுகிறது.

மஞ்சூர் மலைச்சாலை[தொகு]

பாதை: காரமடை- அத்திக்கடவு- முள்ளி-கெட்டை-மஞ்சூர்- குந்தா அணை- எடக்காடு- லாரன்சு மலை-எமரால்டு குறுக்குத் தெரு— முத்துரை பல்லடா-பெர்ன் மலை- ஊட்டி

கோயம்புத்தூர் நகர போக்குவரத்து உள்ளூர் வாகனஙகள் ஊட்டி நோக்கிச் செல்லப் பயன்படும் ஒரு சிறிய மலைச்சாலையே மஞ்சூர் மலைச்சாலையாகும். குன்னூர், கோத்தகிரி மலைச்சாலைகள் இரண்டும் மூடப்பட்டிருக்கும் அரிய சந்தர்ப்பங்களில் மாற்றுச் சாலையாக இது பயன்படுத்தப்படுகிறது. மஞ்சுருக்கு கீழே மட்டும் 48 கொண்டை ஊசி வளைவுகள் இப்பாதையில் உண்டு. மலைச்சாலையின் அடிவாரத்தில் 1885 அடி உயரத்திலிருக்கும் கெட்டையில் இரண்டு நீர்மின் நிலையங்கள் உள்ளன [1]. மலைச்சாலையின் மேல்பகுதியான மஞ்சூரிலிருந்து மாவட்ட வழிகள் வழியாக சென்றால் சம அளவு தொலைவில் ஊட்டியும் குன்னூரும் அமைந்துள்ளன [5].

நிபந்தனைகள்[தொகு]

சமீபத்திய காலம் வரை நீலகிரி மலைக்குச் செல்லும் அனைத்து சாலைகளும் உயர் பராமரிப்பு செலவினங்களை எதிர்கொள்வதற்கு ஏதுவாக நுழைவு வரி வசூலிக்கும் சாலைகளாக இருந்தன. சில ஆண்டுகளுக்கு முன்பிருந்து சாலைகள் மிகவும் சிறப்பான நிலையில் உள்ளன. இருப்பினும் நிலச்சரிவு காரணமாக இப்பாதை பல நாட்கள் அல்லது வாரங்கள் என மூடப்படுவது இல்லை. அப்படி மூடப்பட்டால் போக்குவரத்து பொதுவாக மற்ற மலைச்சாலை ஒன்றில் திருப்பி விடப்படுகிறது. அரிதான சந்தர்ப்பங்களில் நீலகிரி மலையிலுள்ள அனைத்து வழிகளும் முற்றிலும் துண்டிக்கப்படுவதும் உண்டு. அடிப்படை விநியோக உள்கட்டமைப்புகள் இந்த வழிகளை சார்ந்து இருப்பதால் எந்த சாலையாவது செயல்பாடின்றி மூடப்படும்போது ஏற்படும் அசாதரணமான நிலை பொருள்களின் விலைகளில் பிரதிபலிக்கிறது. பிரதான சுற்றுலா பருவத்தில் மேலே குறிப்பிடப்பட்ட முதல் இரண்டு மலைச்சாலைகளும் ஒருவழிப்பாதைகளாக அறிவிக்கப்படுகின்றன. கோயம்புத்தூரிலிருந்து ஊட்டி மலைக்கு மேலே செல்லும் வாகனங்கள் குன்னூர் வழியாக செல்ல அனுமதிக்கப்படுகின்றன. இதே போல கீழே இறங்கும் வாகனங்கள் கோத்தகிரி வழியாக சோயம்புத்தூர் சென்றடைகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Investingintamilnadu, Tamil Nadu Industrial Guidance & Export Promotion Bureau, Industries Department (Government of Tamil Nadu). "Details of Government Roads in Tamil Nadu" (PDF). Archived from the original (PDF) on 25 மே 2010. பார்க்கப்பட்ட நாள் 15 July 2010.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
  2. "Traffic resumes on Mettupalayam-Coonoor Road". Coimbatore: தி இந்து. 2010-01-15. http://www.thehindu.com/news/cities/Coimbatore/article80877.ece. பார்த்த நாள்: 31 March 2012. 
  3. Thiagarajan, Shantha (2010-10-20). "Rs 6 crore down the drain, Ooty highways is a gaping hole now". Chennai: தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 2013-01-04 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130104021159/http://articles.timesofindia.indiatimes.com/2010-10-20/chennai/28250762_1_nhai-repair-culverts. பார்த்த நாள்: 31 March 2012. 
  4. D., Radhakrishnan (2012-03-27). "Criminal proceedings likely against NHAI". Udhagamandalam: தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article3249391.ece. பார்த்த நாள்: 31 March 2012. 
  5. http://theindia.info/Blog/Ooty-by-Manjoor-Most-Beautiful-Road-to-Ooty-from-Coimbatore/ பரணிடப்பட்டது 2020-02-05 at the வந்தவழி இயந்திரம் Ooty by Manjoor
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீலகிரி_மலைச்சாலைகள்&oldid=3575480" இலிருந்து மீள்விக்கப்பட்டது