நீர் மறிமான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Teleostomi
நீர் மறிமான்
Waterbuck
உகாண்டாவின் இராணி எலிசெத் தேசியப் பூங்காவில்
ஆண் மறிமான்
போட்சுவானாவின் சோப் தேசிய பூங்காவில்
பெண் மறிமான்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
K. ellipsiprymnus
இருசொற் பெயரீடு
Kobus ellipsiprymnus
(Ogilby, 1833)
Subspecies

See text

நீர்மறிமான் கிளையினங்களின் வாழிடம்

நீர் மறிமான் ( Waterbuck ) என்பது சகாரா கீழமை ஆபிரிக்காவில் பரவலாக காணப்படும் ஒரு பெரிய மறிமான் ஆகும். இது மாட்டுக் குடும்பம் என்றும் கோபஸ் பேரினம் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது முதன்முதலில் ஐரிய இயற்கை ஆர்வலர் வில்லியம் ஓகில்பியால் 1833 இல் விவரிக்கப்பட்டது . இதன் 13 கிளையினங்கள் எலிப்சென்ப்ரிம்னஸ் நீர்மறிமான் மற்றும் டெபாசா நீர்மறிமான் என்ற இரண்டு வகைகளின் கீழ் தொகுக்கபட்டுள்ளன. இவற்றின் நீளம் பொதுவாக தலை மற்றும் உடல் என 177 மற்றும் 235 செமீ (70 மற்றும் 93 அங்குலம்) வரை இருக்கும். மேலும் நின்ற நிலையில் தரை முதல் தோள் வரை 120 முதல் 136 செமீ (47 மற்றும் 54 அங்குலம்) உயரம் வரை இருக்கும். இந்த மறிமான்கள் பால் ஈருருமை கொண்டவை. ஆண் மான்கள் பெண் மான்களை விட உயரமாகவும் கனமாகவும் இருக்கும். ஆண் மான்கள் தோராயமாக தோள்பட்டை வரை 127 செமீ (50 அங்குலம்) வரை வளர்கின்றன. பெண் மான்கள் 119 செமீ (47 அங்குலம்) வரை எட்டுகின்றன. ஆண் மான்களின் எடை பொதுவாக 198–262 கிலோ வரையும், பெண் மான்களின் எடை 161–214 கிலோ வரையும் இருக்கும். இவற்றின் உடல் நிறம் பழுப்பு நிறத்தில் இருந்து சாம்பல் நிறத்தில் வரை இருக்கும். இவற்றில் நீளமான, முறுக்கிய கொம்புகள், ஆண் மான்களுக்கு மட்டுமே இருக்கும். கொம்புகள் பின்னோக்கி வளைந்து, பின்னர் முன்னோக்கி வளைநுதவையாக இருக்கும். கொம்புகள் 55-99 செமீ (22-39 அங்குலம்) நீளம் கொண்டவை.

நீர் மறிமான்கள் கூட்டமாக வாழக்கூடியவை. ஒரு மந்தையில்.ஆறு முதல் 30 மான்களை வரை இருக்கும். இந்த மந்தைகளில் பெண்களும் அவற்றின் சந்ததிகள், குட்டிகள் அல்லது பருவ வயது அடையாத மான்கள் இருக்கும். ஆண் மான்கள் 5 வயதிலிருந்தே தங்களுக்கான ஒரு பிராந்திய எல்லையை வகுத்துக் கொண்டு வாழ்கின்றன. பிராந்திய எல்லைக்குள் ஆறு முதல் ஒன்பது வயது வரை அவை ஆதிக்கம் செலுத்துகிறன. நீர் மறிமான்கள் வெப்பமான காலநிலையில் உடலில் ஏற்படும் நீரிழப்பை பொறுத்துக்கொள்ள இயலாதவை. இதனால் இவை நீர் ஆதாரங்களுக்கு அருகிலேயே வசிக்கும். நீர் மறிமான்கள் பெரும்பாலும் புல்வெளிகளிலேயே காணப்படுகின்றன. இவற்றின் இனப்பெருக்கும் நில நடுக்கோடு பகுதிகளில், ஆண்டு முழுவதும் நடைபெறுகிறது. ஆனால் மழைக்காலத்தில் பிறப்பு விகிதம் உச்சத்தில் இருக்கும். இவற்றின் கர்ப்ப காலம் 7-8 மாதங்கள் ஆகும். அதைத் தொடர்ந்து ஒரு கன்று பிறக்கும்.

ஆறுகள், ஏரிகள், பள்ளத்தாக்குகளை ஒட்டிய புதர் மற்றும் சவன்னா பகுதிகளில் நீர் மறிமான்கள் வாழ்கின்றன. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கமானது நீர் மறிமான்களை தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் என வகைபடுத்தியுள்ளது. மேலும் குறிப்பாக, பொதுவாக நீர் மறிமான்கள் குறைந்த அச்சுறுத்தல் கவலை உள்ளதாக பட்டியலிடப்பட்டுள்ளது. டெபாஸா நீர் மறிமான் அச்சுறு நிலையை அண்மித்த இனமாக உள்ளது. வேட்டையாடுதல் மற்றும் மனித இடையூறுகள் காரணமாக அவை சில வாழ்விடங்களில் இருந்து பெருமளவில் வெளியேற்றப்படுவதால், அவற்றின் எண்ணிக்கை குறைந்துவருகிறது.

துணை இனங்கள்[தொகு]

நீர் மறிமான்கள் அவற்றின் உடல் நிறத்தின் அடிப்படையில் 37 கிளையினங்களாக துவக்கத்தில் அங்கீகரிக்கப்பட்டது. இவை எலிப்சென்ப்ரிம்னஸ் நீர்மறிமான் குழு மற்றும் டெபாசா நீர்மறிமான் குழு என இரண்டு குழுக்களாக வகைப்படுத்தப்பட்டன. டெபாசா நீர்மறிமான் குழுவில் உள்ள மறிமான்களின் உடல் நிறத்தில் அதிக எண்ணிக்கையிலான மாறுபாடுகள் இருப்பதால், அதில் 29 கிளையினங்கள் சேர்க்கப்பட்டுள்ளன; எலிப்சென்ப்ரிம்னஸ் நீர்மறிமான் குழுவானது எட்டு கிளையினங்களைக் கொண்டிருந்தது. இருப்பினும், நீர் மறிமானின் கிளையினங்களின் எண்ணிக்கை 1971 ஆம் ஆண்டில், 13 ஆகக் குறைக்கப்பட்டது (எலிப்சென்ப்ரிம்னஸ் நீர்மறிமான் குழுவிற்கு 4 மற்றும் டெபாசா நீர்மறிமான் குழுவிற்கு 9). [2]

விளக்கம்[தொகு]

கோபஸ் இனத்தின் ஆறு வகைகளில் நீர்மறிமான் மிகப்பெரியது. இது ஒரு பால் ஈருருமை கொண்ட மறிமான் ஆகும். ஆண் மான்களின் உயரம் பெண் மான்களை விட 7% கூடுதலாகமாகவும் சுமார் 8% நீளமாகவும் இருக்கும். [2] தலை மற்றும் உடல் நீளம் பொதுவாக 177–235 செமீ (70–93 அங்குலம்) இருக்கும். மேலும் பொதுவாக இதன் உயரம் 120–136 செமீ (47–54 அங்குலம்) ஆகும். [3] தோள்பட்டை வரை ஆண் மான்கள் தோராயமாக 127 செமீ (50 அங்குலம்), பெண் மான்கள் 119 செமீ (47 அங்குலம்) உயரம் வரை எட்டுகின்றன. நீர்மறிமனாகள் மிகவும் கனமான விலங்குகளில் ஒன்றாகும். புதிதாகப் பிறந்த குட்டி பொதுவாக 13.6 கிலோ (30 பவுண்டுகள்) எடையுள்ளதாக இருக்கும், மேலும் பெண் குட்டிகளை விட ஆண் குட்டிளில் எடை வளர்ச்சி வேகமாக இருக்கும். [2] ஆண் மான்களின் எடை பொதுவாக 198–262 கிலோ வரையும், பெண் மான்களின் எடை 161–214 கிலோ வரை இருக்கும். வால் 22–45 செமீ (8.7–17.7 அங்குலம்) நீளமானது. [4]

நீர்மறிமான்கள் வலுவான உடலமைப்பைக் கொண்டுள்ளன. இவற்றின் உடலில் நிறமானது சிவப்பு பழுப்பு நிறத்தில் இருந்து சாம்பல் நிறம்வரை இருக்கும். மேலும் இவற்றின் உடல் நிறம் வயதுக்கு ஏற்ப படிப்படியாக கருமையாகின்றது. ஆண் மான்கள் பெண் மான்களை விட அடர் நிறத்தவை. இவற்றின், கழுத்தில் உள்ள முடி நீண்டதாக வளர்ந்திருக்கும். பாலுறவில் உற்சாகமாக இருக்கும்போது, நீர்மறிமானின் தோல் கஸ்தூரி வாசனையுடன் ஒரு கொழுப்புப் பொருளை சுரக்கிறது, அதற்கு "கிரீஸ் கோப்" என்று பெயர். இதன் நாற்றம் விரும்பத்தகாதது, இது வேட்டையாடுபவர்களை விரட்டுகிறது. [5] இந்த சுரப்பானது விலங்கு தண்ணீரில் மூழ்கும் போது உடலை நீரிலிருந்து பாதுகாக்கிறது. இதன் முக அம்சங்களில் வெள்ளை முகவாய் மற்றும் வெளிர் புருவங்கள் ஆகியவை உள்ளன. இதன் காதுகள் பெரியன. காதின் முனையில் கருப்பு நிறப் புள்ளி உண்டு. இதன் உடலின் பின்புறம் வெள்ளை நிற உரோமங்கள் ஒரு வளையம் போல வளர்ந்துள்ளன. அடி வயிற்றில் வெள்ளை நிறக் கோடு உள்ளது. நீர்மறிமான் நீண்ட கழுத்தையும், குறுகிய, வலுவான, கருப்பு கால்கள் கொண்டவை. [4] [3] பெண் மான்களுக்கு இரண்டு முலைக்காம்புகள் உள்ளன.

இவற்றிற்கு நீண்ட முறுக்கிய கொம்புகள் உண்டு. அவை பின்னோக்கி வளைந்து பின்னர் முன்னோக்கியவையாக உள்ளன. கொம்புகள் ஆண் மான்களுக்கு மட்டுமே காணப்படும். கொம்புகள் 55 முதல் 99 செமீ (22 முதல் 39 அங்குலம்) வரை நீளமாக இருக்கும். கொம்புகளின், ஓரளவிற்கு நீளம் கிடாயின் வயதுடன் தொடர்புடையது. பெண்களின் மண்டை ஓடுகளில் எலும்புக் கட்டியின் வடிவில் ஒரு கொம்பு முனை காணப்படலாம்.

சூழலியல் மற்றும் நடத்தை[தொகு]

சம்பூர் தேசிய பூங்காவில் (கென்யா) ஒரு பெண் கூட்டம்

நீர்மறிமான்கள் இயற்கையில் அமர்ந்தியங்கும் வாழ்முறையைக் கொண்டவை. இருப்பினும் பருவமழை தொடங்கியவுடன் சில சமயம் இடப்பெயர்வில் ஈடுபடலாம். இவை ஒரு கூட்டாக வாழும் விலங்குகளாகும். நீர்மறிமான் மந்தையில் ஆறு முதல் 30 உருப்படிகள் இருக்கும். கோடையில் மந்தையின் அளவு அதிகரிக்கிறது, அதேசமயம் குளிர்கால மாதங்களில் குழுக்கள் துண்டு துண்டாக உடைகிறது. ஒருவேளை ஓரே இடத்தில் உணவு கிடைப்பதில் ஏற்படும் பாற்றாகுறையாக இருக்கலாம். இளம் ஆண் மான்களுக்கு (ஏழு முதல் ஒன்பது மாத வயதில்) கொம்புகள் முளைக்ககத் தொடங்கியவுடன், அவை அந்த பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்தும் கிடாய்களால் மந்தையிலிருந்து துரத்தப்படுகின்றன. இந்த ஆண் மான் பின்னர் இளம் ஆண் மான்களைக் கொண்ட மந்தைகளாக உருவாக்கி, பெண் மான்கள் வசிக்ககும் எல்லைப் பகுதிகளில் சுற்றித் திரியும். [4] பெண் மான்கள் மந்தையானது நிலப்பரப்பில் தங்களுக்கு என ஒரு எல்லையை வகுத்து வாழ்கின்றன. பெண் மான்கள் மந்தையானது 200–600 எக்டேர்கள் (0.77–2.32 sq mi; 490–1,480 ஏக்கர்கள்) வரையிலான பரப்பளவில் தங்கள் எல்லைகளைக் கொண்டுள்ளன. ஒரு சில பெண் மான்கள் கன்னி மந்தைகளையும் உருவாக்கி இருக்கும். [6]

ஆண் மான்களும் தங்களது 5 வயதிலிருந்தே தங்களுக்கான ஒரு பிராந்திய எல்லையைக் கொண்டு வாழத் தொடங்குகிறன. அவை 6 முதல் 9 வயது வரை இவ்வாறு ஆதிக்கம் செலுத்துகிறன. இந்த ஆண் மான்கள் 4–146 எக்டேர்கள் (0.015–0.564 sq mi; 9.9–360.8 ஏக்கர்கள்) பரப்பளவை தங்கள் ஆதிக்க எல்லையக கொண்டுள்ள. அளவு. ஆண் மான்கள் தங்கள் பிரதேசங்களை விட்டு புதிய பிரதேசங்களிலும் குடியேற விரும்புகின்றன. இதனால் காலப்போக்கில் அவை மிகவும் விசாலமான பகுதிகளுக்கு செல்ல தங்கள் பிரதேசங்களை விட்டுச் செல்லக்கூடும். தங்கள் பிரதேசத்தின் எல்லையை குறிக்க சாணம், சிறுநீர் போன்றவை ஆங்காங்கே அவற்றால் விடப்படும். [6] பத்து வயதிற்குப் பிறகு, ஆண் மான்கள் தங்கள் பிராந்திய ஆதிக்க இயல்பை இழந்து, இளைய கிடாய்களிடம் தங்கள் இடத்தை இழக்கின்றன. அதைத் தொடர்ந்து அவை சிறிய மற்றும் பாதுகாப்பற்ற பகுதிகளுக்கு பின்வாங்குகிறன.

உணவுமுறை[தொகு]

நீர்மறிமான்கள் முக்கியமாக ஒரு மேய்ச்சல் இனமாகும்.

நீர்மறிமான்கள் தண்ணீரை பெரிதும் சார்ந்துள்ளவையாகும். இவை வெப்பமான காலநிலையில் உடலில் நீரிழப்பை பொறுத்துக்கொள்ள முடியாதவை. இதனால் இவை நீர் ஆதாரங்களுக்கு நெருக்கமான பகுதிகளிலேயே வசிக்கிறன. இருப்பினும், இதன் பேரினத்தைச் சேர்ந்த மற்ற உறுப்பினர்களைப் போலல்லாமல் ( கோப் மற்றும் புகு போன்றவை ), நீர்மறிமான்கள் நீர்நிலைகளுக்கு அருகாமையில் இருக்கும் அதே வேளையில் காடுகளுக்குள் நீண்ட தொலைவும் செல்கின்றன. [7] இவற்றின் உணவில் கணிசமான அளவான 70 முதல் 95 சதவீதம் வரை புற்கள் இருப்பதால், நீர்மறிமான்கள் பெரும்பாலும் புல்வெளிகளை நாடி அடிக்கடி வரும் மேய்ச்சல் இனமாகும். டைபா மற்றும் ஃபிராக்மைட்ஸ் போன்ற நாணல் மற்றும் கோரைகளும் இவற்றால் விரும்பப்படுகிறது. [8]

இனப்பெருக்கம்[தொகு]

ஒரு பெண் நீர்மறிமான் தன் குட்டியுடன்

முதிர்வு விகிதத்தின் அடிப்படையில் நீர்மறிமான்கள் மற்ற மறிமான்களை விட மெதுவாக பருவம் எய்தும். [9] ஆண் மான்கள் ஆறு வயதில் பாலின முதிர்ச்சியடைகின்றன. அதேசமயம் பெண் மான்கள் இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்குள் பாலியல் முதிர்ச்சி அடைகிறன. [9] பெண் மான்கள் பொதுவாக இரண்டரை வயதிற்குள் கருத்தரிக்கும். அவை பத்து ஆண்டுகள் இனப்பெருக்கம் செய்யும். [8] நிலநடுக்கோடு பகுதிகளில், ஆண்டு முழுவதும் இனப்பெருக்கம் நடைபெறுகிறது, என்றாலும் மழைக்காலத்தில் பிறப்புகள் உச்ச நிலையில் இருக்கும்.

இனப் பெருக்கக் காலத்தில் பெண் மான் இனச் சேர்கைக்காக ஆண் மானின் எல்லை வழியே சென்று வெகு நேரம் புற்களை மேயும். சினைக் காலத்திற்குத் தயாராக இருப்பதை ஆண் மான் உறுதி செய்த பிறகு, பெண் மானின் பிறப்புறுப்பு மற்றும் சிறுநீரை மோப்பம் பிடிக்கிறது. பின்னர் ஆண்மான் பெண் மானை நெருங்கித் தன் கொம்புகளால் பெண் மானின் பின்னே நின்று தள்ளும். முன்புறம் வந்து முகத்தோடு முகம் வைக்கும். கொம்புகளால் பெண் மானின் நெற்றிதைத் தடவும். இச்சமயத்தில் ஆண்மானின் உதடுகள் அடிக்கடி சுருங்கும். நாசித் துவாரம் விரிவடைந்து மோப்பம் பிடிப்பது போலக் காற்றை உள்ளிழுக்கும். கலவிக்கு முன்பு இதுபோன்ற முன் விளையாடுகள் நடக்கின்றன. பின்னர் பெண் மான் தன் வாலை ஒரு பக்கமாக நகர்த்துகிறது. அதே சமயம் ஆண் மான் தன் முன்னங்கால்களை பெண் மானின் முதுகின் இரு பக்கங்களில் போட்டு பற்றிக் கலவியில் ஈடுபடுகிறது. [10] [9]

பெண் மானின் கர்ப்ப காலம் ஏழு முதல் எட்டு மாதங்கள் வரை நீடிக்கிறது. அதைத் தொடர்ந்து ஒரு குட்டியை ஈனுகிறது. இரட்டைக் குட்டிகள் பிறப்பது அரிது. பிரசவக் காலம் நெருங்கும்போது சினை மான் முட்புதர்களில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்கிறது. பிறந்த குட்டி பிறந்து அரை மணி நேரத்திற்குள் எழுந்து நிற்கும். [9] தாய் மான் நஞ்சுக்கொடி உள்ளிட்ட பொருட்களை உண்கிறது. தாய் மான் தன் குட்டியுடன் ஒலியின் வழியாகத் தொடர்பு கொள்கிறது. [10] குட்டியானது பிறந்த இரண்டு முதல் மூன்று வாரங்கள் முதல் இரண்டு மாதங்கள் வரை புதர்களில் மறைந்தே இருக்கின்றது. சுமார் மூன்று முதல் நான்கு வாரங்களுக்குப் பின்னர், குட்டி தனது தாயைப் பின்தொடரத் தொடங்குகிறது, அது தனது வாலை உயர்த்துவதன் மூலம் அதற்கு சமிக்ஞை கொடுக்கிறது. கொம்புகள் இல்லாதிருந்தாலும், தாய்மான்கள் தங்கள் சந்ததிகளை வேட்டையாடிகளிடமிருந்து கடுமையாகப் பாதுகாக்கின்றன. எட்டு மாதங்கள் வரை குட்டிகள் பால் குடிக்கின்றன. அதைத் தொடர்ந்து குட்டிகள் தங்கள் சொந்த வயதுடைய குட்டிகளின் குழுக்களில் இணைகின்றன. [9] இளம் பெண் மான்கள் தங்கள் தாய்மார்களுடன் மந்தைகளில் இருக்கும் அல்லது இளங்கன்றுகளின் மந்தைகளிலும் சேரலாம். [10] நீர்மறிமான்களின் ஆயுட்காலம் காடுகளில் 18 ஆண்டுகள் மேலும் வளர்ப்பிடங்களில் 30 ஆண்டுகள் வாழ்கிறன. [8]

குறிப்புகள்[தொகு]

  1. IUCN SSC Antelope Specialist Group (2016). "Kobus ellipsiprymnus". IUCN Red List of Threatened Species 2016: e.T11035A50189324. doi:10.2305/IUCN.UK.2016-2.RLTS.T11035A50189324.en. https://www.iucnredlist.org/species/11035/50189324. பார்த்த நாள்: 19 November 2021. 
  2. 2.0 2.1 2.2 Spinage, C.A. (1982). A Territorial Antelope : The Uganda Waterbuck. London: Academic Press. பக். 4–6, 10, 18–19, 56–63. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-12-657720-X. https://books.google.com/books?id=MoZMrrBmZ8UC. 
  3. 3.0 3.1 Newell, T. L. "Kobus ellipsiprymnus (Waterbuck)". University of Michigan Museum of Zoology. Animal Diversity Web. பார்க்கப்பட்ட நாள் 21 March 2014.
  4. 4.0 4.1 4.2 Huffman, B. "Waterbuck". Ultimate Ungulate. பார்க்கப்பட்ட நாள் 21 March 2014.
  5. "Waterbuck". African Wildlife Foundation. பார்க்கப்பட்ட நாள் 29 January 2017.
  6. 6.0 6.1 Spinage, C. A. (2010). "Territoriality and social organization of the Uganda defassa waterbuck Kobus defassa ugandae". Journal of Zoology 159 (3): 329–61. doi:10.1111/j.1469-7998.1969.tb08452.x. 
  7. Nowak, R. M. (1999). Walker's Mammals of the World (Volume 1) (6th ). Baltimore: Johns Hopkins University Press. பக். 1166–70. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8018-5789-9. 
  8. 8.0 8.1 8.2 Kingdon, J.. Mammals of Africa (Volume VI): Hippopotamuses, Pigs, Deer, Giraffe and Bovids. Bloomsbury. பக். 461–8. Kingdon, J.; Hoffman, M. Mammals of Africa (Volume VI): Hippopotamuses, Pigs, Deer, Giraffe and Bovids.
  9. 9.0 9.1 9.2 9.3 9.4 Estes, R. D. (2004). The Behavior Guide to African Mammals : Including Hoofed Mammals, Carnivores, Primates (4th ). Berkeley: University of California Press. பக். 107–11. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-520-08085-8. Estes, R. D. (2004).
  10. 10.0 10.1 10.2 Skinner, J. D.; Chimimba, Christian T. (2005). The Mammals of the Southern African Subregion (3rd ). Cambridge: Cambridge University Press. பக். 681–2. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0521844185. Skinner, J. D.; Chimimba, Christian T. (2005).
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீர்_மறிமான்&oldid=3623834" இலிருந்து மீள்விக்கப்பட்டது