நீர் நொச்சி
நீர் நொச்சி அல்லது சிறு நொச்சி என்று அழைக்கப்படும் தாவரத்தின் தாவரவியல் பெயர் வைடெக்ஸ் டிரைபோலியோ (Vitex trifolia) ஆகும். இணை தாவரப்பெயர் வைடெக்ஸ் இண்டெக்ரீமா (Vitex Integrima). வெர்பனேசிக் குடும்பத்தைச் சேர்ந்த மணமுள்ள சிறு மரம். இத்தாவரம் அந்தமான் மற்றும் தென்னிந்தியப் பகுதிகளில் காணப்படுகிறது. கடற்கரைப் பகுதிகளில் மிகுதியாக வளரும், சமவெளிகளிலும் நட்டு வளர்க்கலாம்.
இலங்கை, சீனா, ஜப்பான், மலேசியா, ஆஸ்திரேலியா நாடுகளில் காணப்படுகிறது. ஆண்டு முழுவதும் பூக்களுடன் வளம் குறைந்த மண்ணிலும் நன்கு வளரும். வேலியாகவும் வளர்க்கலாம். மழைக் காலத்தில் வளர்ப்பது உகந்தது.
அமைப்பு
[தொகு]6 மீ வரை வளரும். இளம் மரப்பகுதிகளில் வெண்மையான மயிர் காணப்படும். பட்டை வெளிர் நிறமாகவோ சாம்பல் நிறமாகவோ இருக்கும். இலைகள் காகிதம் போன்றிருக்கும். நீள்சதுர வடிவமானவை. 8 - 10 இரட்டைப் பக்க நரம்புகள் உண்டு. இலை நுனி கூரானது. இலையோரம் மழுங்கியப் பற்களைக் கொண்டது. ஐந்து புல்லி இதழ்கள் கொண்டது.
மகரந்த தாள்கள் நான்கு. மகரந்த கம்பிகள் 3 மி.மீ, 35 மி.மீ என இரண்டு உயரங்களில் வளரும். கனி பழுத்தால் நீலங்கலந்த கறுப்பு நிறமாயிருக்கும். புள்ளிவட்டத்தால் தாங்கப்பட்டிருக்கும். முளை சூழ்தசை இல்லை. வித்திலைகள் சதைப்பற்றானவை.
பயன்
[தொகு]வாதவலி, வீக்கம், சுளுக்கு நோய்களில் பயனாகிறது. இலையை உலர்த்தி தூள் செய்து இலைச்சாற்றுடன் கலந்து தர காய்ச்சல் போகும். இலைச்சாறு குடல் கோளாறுகளைப் போக்கும். பிலிப்பைன்ஸில் காச நோயைப் போக்க பயன்படுத்துகின்றனர். [1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ அறிவியல் களஞ்சியம் தொகுதி 13