நீர்வை பொன்னையன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீர்வை பொன்னையன்
பிறப்புஇராமலிங்கம் பொன்னையா
(1930-03-24)24 மார்ச்சு 1930
நீர்வேலி
இறப்புமார்ச்சு 26, 2020(2020-03-26) (அகவை 90)
கொழும்பு
தேசியம்இலங்கைத் தமிழர்
அறியப்படுவதுஈழத்து எழுத்தாளர்

நீர்வை பொன்னையன் (மார்ச் 24, 1930 - மார்ச் 26, 2020) ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதை, நாட்டார் கதை, இலக்கியக் கட்டுரைகள் எனப் பல எழுதியவர். ஐம்பது ஆண்டுகளாக இடதுசாரி அரசியலில் உறுதியாக நின்றவர்.[1] தனது கடைசிக் காலம் வரை எழுதிக் கொண்டிருந்தவர்.

தான் பிறந்து வளர்ந்த மண்ணின் மீது பற்றுக் கொண்டதனால் தனது பிறப்பிடமான நீர்வேலியை தனது பெயரோடு இணைத்துக் கொண்டார். ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் தான் நிற்கிறேன் என்பது தெளிவாக இருக்க வேண்டும் என்பதற்காக "பொன்னையா" என்ற தனது பெயரையே "பொன்னையன்" என மாற்றிக் கொண்டார். அதனால் "நீர்வை பொன்னையன்" என்றழைக்கப்பட்டார்.[2]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

நீர்வை பொன்னையனின் இயற்பெயர் இராமலிங்கம் பொன்னையா. இவர் யாழ்ப்பாணம் நீர்வேலியில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் தொடக்கக் கல்வி கற்று பின்னர் 1951 இல் மேல் படிப்புக்காக கல்கத்தா சென்று அங்கு இளங்கலைப் பட்டம் பெற்றார். கல்கத்தாவில் முற்போக்கு இடதுசாரிச் சிந்தனைகளும் தொழிலாளர் போராட்டங்களும் இவரை ஈர்த்தன. பட்டம் பெற்றுத் திரும்பியும் அவர் வேறு தொழில் எதிலும் ஈடுபடாமல் விவசாயத் தொழிலிலேயே ஈடுபட்டார். யாழ்ப்பாணத்தில் இடதுசாரிக் கட்சியின் முழுநேர ஊழியராகத் தீவிரமாகப் பணியாற்றத் தொடங்கினார். சிறிது காலம் கொழும்பில் இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றி, மீண்டும் யாழ்ப்பாணம் சென்று சமூகப் பணிகளில் ஈடுபடலானார். 1990களுக்குப் பின்னர் அங்கிருந்து இடம்பெயர்ந்து மீண்டும் கொழும்பில் வாழ்ந்து வந்தார்.[3]

இலக்கியப் பணி[தொகு]

இவரது முதலாவது சிறுகதை 1957 ஆம் ஆண்டில் ஈழநாடு பத்திரிகையில் வெளிவந்தது. கவிஞர் இ. நாகராஜன் நடத்தி வந்த 'தமிழன்' என்ற பத்திரிகையில் பல சிறுகதைகளை எழுதினார். இவரது முதல் சிறுகதைத் தொகுதி மேடும் பள்ளமும் 1961 இல் வெளிவந்தது. இவரது உதயம், மூவர் கதைகள், பாதை, வேட்கை, உலகத்து நாட்டார் கதைகள், முற்போக்கு இலக்கிய முன்னோடிகள், நாம் ஏன் எழுதுகின்றோம்? போன்ற நூல்கள் ஈழத்து முற்போக்கிலக்கியப் பரப்பில் வரவேற்பினை பெற்றிருந்தன.

இவருக்கு 2017 ஆம் ஆண்டில் இலங்கை அரசின் "சாகித்திய ரத்னா" விருது கிடைத்தது.

இவரது நூல்கள்[தொகு]

  • மேடும் பள்ளமும் (1961)
  • உதயம் (1970)
  • மூவர் கதைகள் (1971)
  • பாதை (1997)
  • வேட்கை (2000)
  • உலகத்து நாட்டார் கதைகள் (2001)
  • முற்போக்கு இலக்கிய முன்னோடிகள் (2002)
  • நாம் ஏன் எழுதுகின்றோம்? (2004)
  • முற்போக்கு இலக்கிய முன்னோடிகள் (2004)
  • ஜென்மம் (2005)
  • நிமிர்வு (2009)
  • காலவெள்ளம் (2010)
  • நினைவலைகள்
  • நினைவுகள் அழிவதில்லை (2013)
  • உறவு (2014)
  • பாஞ்சான் (2016)
  • வந்தனா (2017)
  • சாயல் ( 2019)
  • லெங்கத்துகம (சிங்களம்) - 2019
  • Devers & Demon’s (ஆங்கிலம்) - 2019

மேற்கோள்கள்[தொகு]

தளத்தில்
நீர்வை பொன்னையன் எழுதிய
நூல்கள் உள்ளன.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீர்வை_பொன்னையன்&oldid=3487530" இலிருந்து மீள்விக்கப்பட்டது