உள்ளடக்கத்துக்குச் செல்

நீர்க்கோளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உலக நீர்ப்பங்கீடு.

பெளதிகப் புவியியலில் நீர்க்கோளம் (The hydrosphere ) என்பது பூமி மற்றும் பூமிக்கு கீழேயும் மேலேயும் ஒருங்கிணைந்து காணப்படும் நீரின் நிறையை விவரிக்கிறது.

பூமியில் 1386 மில்லியன் கன கிலோ மீட்டர்கள் தண்ணீர்[1] உள்ளதாக , உலக நீர் ஆதாரங்களின்[2] இருப்புக் கணக்கெடுக்கும் பணிக்காக ஐக்கிய நாடுகள் அவை தேர்ந்தெடுத்த இகோர் சிக்லோமானோவ் மதிப்பிட்டுள்ளார்[1] . நிலத்தடி நீர், பனியாறுகள், கடல்கள், ஏரிகள் மற்றும் ஆறுகளில் திரவநிலையிலும் உறைந்த நிலையிலும் காணப்படும் நீரையும் இக்கணக்கீடு உள்ளடக்கியதாகும். இம்மொத்த நீரளவில் 97.5 சதவீதம் உப்பு நீராகும் என்றும் கணக்கீடு தெரிவிக்கிறது. எஞ்சியிருக்கும் 2.5 சதவீதம் தண்ணீரே தூய்மையான நன்னீராகும். இந்நன்னீரின் 68.7 சதவீதம் அளவுள்ள நீர் ஆர்க்டிக் , அண்டார்க்டிக்கா மற்றும் மலைப் பிரதேசங்களில் பனிக்கட்டியாகவும் நிலையான பனிப்போர்வையாகவும் காணப்படுகிறது. அடுத்து, 29.9 சதவீத நன்னீர் நிலத்தடி நன்னீராக உள்ளது. பூமியில் நமக்குக் கிடைக்கப் பெற்றுள்ள மொத்த நன்னீரில் வெறும் 0.26 சதவீத நன்னீர் மட்டுமே ஏரிகள், நீர்த்தேக்கங்கள் மற்றும் ஆறுகள் மூலமாக அத்தியாவசியத் தேவைகளுக்காகவும் நீர் சுற்றுச்சூழலைப் பராமரிக்கவும் நம்மால் பயன் படுத்தப்படுகிறது"[1]. புவி நீர்கோளத்தின் மொத்த நிறை 1.4 × 1018 டன்கள் ஆகும். பூமியின் மொத்த நிறையில் இந்த அளவு சுமார் 0.023% ஆகும். இதில் சுமார் 20 × 1012 டன்கள் பூமியின் வளிமண்டலத்தில் உள்ளது. ( ஒரு டன் அளவு தண்ணீர் என்பது சுமார் 1 கன மீட்டர் தண்ணீர் அளவைக் குறிக்கிறது ) புவியின் மேற்பரப்பு தோராயமாக 75%, அதாவது 361 மில்லியன் சதுர கிலோமீட்டர் அல்லது139.5 மில்லியன் சதுர மைல்கள் பகுதி கடலால் சூழப்பட்டுள்ளது. பூமியில் உள்ள கடல்களின் சராசரி உவர்ப்புத் தன்மை ஒரு கிலோ கிராம் கடல் நீருக்கு 35 கிராம் உப்பாக உள்ளது. (3.5%)[3]

நீர் சுழற்சி

[தொகு]

நீர்வளங்களின் சுழற்சி என்பது திட, திரவ வாயு நிலைகளில் காணப்படும் நீரை அதனுடைய ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு அல்லது ஒரு நீர்த் தேக்கத்திலிருந்து மற்றொரு நீர்த் தேக்கத்திற்கு மாற்றும் செயலாகும். வளிமண்டல ஈரப்பதம் (பனி, மழை மற்றும் மேகங்கள்) சமுத்திரங்கள், ஆறுகள், ஏரிகள், நிலத்தடி நீர், பூமிக்கு அடியிலுள்ள நீரோட்டங்கள், துருவ உறைபனிக் குன்றுகள் மற்றும் நிறைவுற்ற மண் ஆகியவை அணைத்தும் நீர்த்தேக்கமென்ற சொல்லில் அடங்கும் . நீர் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறும் செயலானது சில நிமிடங்கள் தொடங்கி ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வரை நீடிக்கிறது. சூரியனின் ஒளி மற்றும் வெப்பத்தின் விளைவுகள் மற்றும் ஈர்ப்பு விசை முதலியன இந்நிலை மாற்றத்திற்கு காரணிகளாய் இருக்கின்றன. பெரும்பாலும் சமுத்திரங்களில் ஆவியாதல் நிகழ்ந்து விண்ணுக்குச் செல்லும் தண்ணீர் பனி அல்லது மழையாக பூமிக்குத் திரும்புகிறது. பனி அல்லது பனிக்கட்டி நேரடியாக ஆவியானால் அந்நிகழ்வு பதங்கமாதல் எனப்படுகிறது. தாவரங்களின் நுண்ணிய இலைத்துளைகள் வழியாக நீர் ஆவியாகி மேற்செல்லும் செயலை நீராவிப்போக்கு என்கின்றனர். நீராவியாதல், ஆவியாதல் மற்றும் பதங்கமாதல் ஆகிய முச்செயல்களையும் இணைக்கும் சொல்லாக நீராவிப்போக்கு என்ற சொல்லை நீரியலார் பயன்படுத்துகிறார்கள்[2].

நீர்க்கோளம் என்பது ஒரு மூடிய அமைப்பு, அதற்குள்தான் நீர் இருக்கிறது என்று மார்கியு டி வில்லியர்சு எழுதிய நீர் என்று தலைப்பிடப்பட்ட விருது பெற்ற புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் நிலையானதாகவும், சிக்கலானதாகவும், தீர்வு காண முடியாததாகவும் வாழ்க்கையை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் எங்கும் பரவி இருக்கக்கூடியதாக நீர்க்கோளம் கட்டப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்"[2]. பூமியிலுள்ள நீரின் மொத்த அளவு கிட்டத்தட்ட நிச்சயமாக புவியியல் முறைகளால் மாறவில்லை என்றும், நம்மிடம் எது இருந்ததோ அதை நாம் இன்னமும் பெற்றே இருக்கிறோம் என்றும் டி வில்லியர்சு கூறியுள்ளார். நீரை மாசுபடுத்த முடியும் இழிவு படுத்தி தவறான வழியில் உபயோகப்படுத்தவும் முடியும் ஆனால் அதை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. அது இடம் பெயரமட்டுமே செய்யும். தண்ணீர் இங்கிருந்து விண்வெளிக்குச் சென்றுவிட்டது என்பதற்கான ஆதாரங்களும் ஏதுமில்லை"[2].

ஒவ்வொரு ஆண்டும் பூமியில் 577.000 கி.மீ 3 அளவிலான நீர் பயன்படுத்தப் படுகிறது. நீரின் இந்த அளவானது கடல் மேற்பரப்பில் இருந்து ஆவியாகும் (502,800 கி.மீ 3) நீரையும் மற்றும் நிலங்களில் இருந்து ஆவியாகும் (74,200 கி.மீ 3) நீரையும் உள்ளடக்கியது ஆகும். கிட்டத்தட்ட அதே அளவு நீர் தான், வளிமண்டலத்தில் இருந்து வீழ்படிவாக கடலின் மீது 458.000 கி.மீ 3 அளவும் நிலத்தின் மீது 119,000 கி.மீ 3 அளவும் படிகிறது. பூமியின் மேற்பரப்பின் மீது படியும் வீழ்படிவு மற்றும் பூமியின் மேற்பரப்பில் இருந்து ஆவியாதலுக்கும் உள்ள வித்தியாசம் (119,000 - 74,200 = 44,800 ) ஆண்டுக்கு 44,800 கி.மீ 3 ஆகும். இந்த வித்தியாசம் ஆண்டுக்கு 42,700 கி.மீ3 அளவு நீர் ஆறுகளில் பாய்கிறது என்பதையும் மிஞ்சியுள்ள ஆண்டிற்கு 2100 கி.மீ3 அளவுள்ள நிலத்தடி நீர் கடலில் கலக்கிறது என்பதையும் பிரதிபலிக்கிறது. இவைதான் நன்னீர் கிடைப்பதற்கான முதன்மை ஆதாரங்களாகும்"[1].

வாழ்க்கைக்கு தண்ணீர் ஒர் அடிப்படையான தேவையாக உள்ளது. மூன்றில் இரண்டு பங்கு பூமி தண்ணீரால் சூழப்பட்டிருப்பதால் இதை நீல கிரகம் என்றும் தண்ணீராலான கிரகமென்றும் அழைக்கிறார்கள். வளிமண்டலம் தற்போதைய வடிவத்தை எட்டியதில் நீர்கோளம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இம்மாற்றம் ஏற்பட கடல்களின் பங்கும் முக்கியமானது. புதன் கிரகத்தில் உள்ளது போல ஐதரசன் மற்றும் ஹீலியம் அணுக்கள் மிகுந்த மிக மெல்லிய வளிமண்டலமே பூமி உருவான காலத்தில் இருந்ததுள்ளது. இவ்விரு வாயுக்களும் வளிமண்டலத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர்தான் பூமி குளிர்விக்கப்பட்டு வாயுக்களும் நீராவியும் வெளியிடப்பட்டன. இதன் விளைவாக தற்போதைய வளிமண்டல சூழ்நிலை உருவாகியது. எரிமலைகளால் வெளியிடப்பட்ட பல்வேறு வாயுக்கள் மற்றும் நீராவி வளிமண்டலத்தில் நிரம்பியது. தொடர்ச்சியான மழை காரணமாக பூமி குளிர்ந்த போது நீராவியும் சுருங்கி மழையாக பொழிந்தது. வளி மண்டலத்தில் இருந்த கரியமில வாயு மழை நீரில் கரையத் தொடங்கி வளிமண்டலத்தின் வெப்பநிலை கனிசமான அளவிற்கு குறைந்தது. இத்தகைய மாற்றங்களால் நீராவி சுருங்குதலின் வேகம் அதிகரித்து அதிகமழை பொழிந்தது. மிகுதியான மழைநீர் பூமியின் மேற்பரப்பில் இருந்த தாழ்வான பகுதிகளை நிரப்பி கடல்களை உருவாக்கியது. 4000 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக கடல்கள் உருவாகியிருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அன்று முதல் உயிரினங்களின் வாழ்க்கை படிப்படியான வடிவங்களை எடுத்தது. அன்றைய முதல் உயிரினங்கள் ஆக்சிசனை சுவாசித்திருக்கவில்லை என்றாலும் அதன் பின்னர் சயனோ பாக்டிரியாக்கள் தோன்றிய பிறகுதான் கரியமில வாயுவை ஆக்சிசனாகவும் உணவாகவும் மாற்றும் செயல்முறை தோன்றியது. இத்தகைய விளைவுகளால் தோன்றிய பூமியின் வளிமண்டலத்தில் உள்ள உட்பொருள்களால் பூமி மற்ற கிரகங்களில் இருந்து வேறுபட்டு விளங்குகிறது. இவ்வேறுபாடுகளே இங்கு உயிரினங்களின் இருப்புக்குத் தேவையான அடிப்படை சூழலாகவும் அமைந்துள்ளது

நீர்த்தேக்கங்களின் மறு ஊட்டம்

[தொகு]

கடல்நீரை மறு ஊட்டம் செய்து நிறைவு செய்ய 2500 ஆண்டுகள் பிடிக்குமென்றும் , பனியையும் உறைபனியையும் உருவாக்க 10000 ஆண்டுகள் பிடிக்குமென்றும், மலை நீரோட்டங்களையும் நிலத்தடி நீரையும் உருவாக்க 1500 ஆண்டுகள் பிடிக்குமென்றும் ஏரிகள் உருவாக 17 ஆண்டுகளும் ஆறுகள் 16 நாட்களிலும் உருவாகும் என்று இகோர் சிக்லோமானோவ் குறிப்பிடுகிறார்[1].

குறிப்பிடத்தக்க நீர் இருப்பு

[தொகு]

குறிப்பிடத்தக்க தண்ணீர் இருப்பு என்பது தனிநபர் ஒருவரின் உபயோகத்திற்குப் பின்னர் உள்ள எஞ்சியுள்ள நீரின் அளவைக் குறிப்பதாகும்"[1]. நன்னீர் வள ஆதாரங்கள் பரப்பு மற்றும் காலத்தின் அடிப்படையில் சீராக பங்கிடப்படவில்லை. இதனால் ஒரு பகுதியில்வெள்ளமும் அதே பகுதியில் சில மாதங்களுக்குப் பின்னர் தண்ணீர் வறட்சியும் ஏற்படுகிறது. 1998 ஆம் ஆண்டின் மொத்த மக்கள் தொகையில் 76 சதவீதம் மக்களுக்குத் தேவையான குறிப்பிடத்தக்க தண்ணீர் இருப்பு ஆண்டிற்கு 5 ஆயிரம் மீ 3 அளவு கிடைக்கும் நிலை இருந்தது. ஏற்கனவே 1998 ஆம் ஆண்டு கணக்கீட்டின் படி, 35 சதவீத உலக மக்கள் குறைவான தண்ணீர் விநியோகம் அல்லது முற்றிலுமான தண்ணீர் பஞ்சத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேநிலை 21 ஆம் நூற்றாண்டிலும் தொடர்ந்து பூமியிலுள்ள மக்கள் தொகையில் பெரும்பாலான மக்கள் குறைவான தண்ணீர் வினியோகத்தாலும் பஞ்சத்தாலும் சீர்குலைவர் என்று சிக்லோமானோவ் கணித்துள்ளார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 World Water Resources: A New Appraisal and Assessment for the 21st Century (Report). UNESCO. 1998. Archived from the original on 27 செப்டம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 13 June 2013. {{cite report}}: Check date values in: |archive-date= (help)
  2. 2.0 2.1 2.2 2.3 Marq de Villiers (2003). Water: The Fate of Our Most Precious Resource (2 ed.). Toronto, Ontario: McClelland & Stewart. p. 453. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7710-2641-6. இணையக் கணினி நூலக மைய எண் 43365804., revised 2003|Governor General's Award (1999)
  3. Kennish, Michael J. (2001). Practical handbook of marine science. Marine science series (3rd ed.). CRC Press. p. 35. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-2391-6.

இவற்றையும் காண்க

[தொகு]

வெளிப்புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீர்க்கோளம்&oldid=4063627" இலிருந்து மீள்விக்கப்பட்டது