நீரேற்ற வினை
நீரேற்ற வினை (Hydration reaction) என்பது ஒரு வேதிப்பொருளுடன் நீர் சேர்ந்து, புதிய சேர்மம் உருவாகும் வேதி வினையாகும். குறிப்பாக கரிம வேதியியலில், இரட்டைப் பிணைப்பு அல்லது மும்மைப் பிணைப்பைக் கொண்ட சேர்மங்களில் நீர் சேர்க்கப்படும் வினையை இது குறிக்கிறது. பொதுவாக ஓர் ஆல்க்கீன் அல்லது ஆல்கைன் போன்ற நிறைவுறாத மூலக்கூறுடன் நீர் சேர்க்கப்படும்போது, எத்தனால், ஐசோபுரோப்பனால் மற்றும் பியூட்டன்-2-ஆல் ஆகியவற்றைத் தயாரிக்க இயலும். இத்தகைய வினை தொழில்துறையில் பயன்படுத்தப்படுகிறது.[1]
கரிம வேதியியல்
[தொகு]எந்தவொரு நிறைவுறாத கரிமச் சேர்மமும் நீரேற்றத்திற்கு உட்படுகிறது.
எப்பாக்சைடுகளிலிருந்து கிளைக்கால்
[தொகு]எத்திலீன் ஆக்சைடு என்றும் அழைக்கப்படும் ஆக்சிரேன் (ஒரு வளையச் சேர்மம்) நீரேற்றத்திற்கு உட்படுத்தப்படுவதன் மூலம், ஆண்டுதோறும் பல மில்லியன் டன்கள் எத்திலீன் கிளைக்கால் உற்பத்தி செய்யப்படுகிறது:
- C2H4O + H2O → HO–CH2CH2–OH
அமில வினையூக்கிகள் இவ்வினைக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.[2]
ஆல்க்கீன்கள்
[தொகு]ஆல்க்கீன்களின் நீரேற்றத்திற்கான பொதுவான வேதிச் சமன்பாடு பின்வருமாறு:
- RRC=CH2 + H2O → RRC(OH)-CH3
இரட்டைப் பிணைப்பில் உள்ள ஒரு கார்பனுடன் ஒரு ஐதராக்சில் தொகுதியும் (OH−), மற்றொன்றுடன் ஒரு புரோட்டானும் (H+) இணைகின்றன. இவ்வினை அதிக வெப்பத்தை வெளியிடும் தன்மையுடையது. முதல் கட்டத்தில், ஆல்க்கீன் ஒரு மின்னணு மிகுபொருளாகச் செயல்பட்டு, மார்கோனிகோவ் விதியின்படி புரோட்டானைத் தாக்குகிறது. இரண்டாவது கட்டத்தில், ஒரு H2O மூலக்கூறு மற்றொரு, அதிக பதிலீடுகளைக் கொண்ட கார்பனுடன் பிணைப்பை ஏற்படுத்துகிறது. இக்கட்டத்தில், ஆக்சிசன் அணு மூன்று பிணைப்புகளைக் கொண்டு நேர்மின்சுமையைப் பெற்றிருக்கும் (அதாவது, இந்த மூலக்கூறு ஓர் ஆக்சோனியம் ஆகும்). மற்றொரு நீர் மூலக்கூறு வந்து, அந்த உபரி புரோட்டானை ஏற்றுக்கொள்கிறது. இந்த வினையானது பல தேவையற்ற துணை விளைபொருட்களை (உதாரணமாக, எத்தனாலை உருவாக்கும் செயல்முறையில் டை எத்தில் ஈதர்) உருவாக்கும். எனவே, இங்கு விவரிக்கப்பட்டுள்ள அதன் எளிய வடிவம் ஆல்ககால் உற்பத்தியில் பெரிதும் பயனுள்ளதாகக் கருதப்படுவதில்லை.
இரண்டு அணுகுமுறைகள் பின்பற்றப்படுகின்றன. வழக்கமாக, ஆல்க்கைல் சல்பேட்டு எசுத்தர்களைப் பெறுவதற்காக ஆல்க்கீன் கந்தக அமிலத்துடன் வினைபுரியச் செய்யப்படுகிறது. எத்தனால் உற்பத்தியைப் பொறுத்தவரை, இந்த வினையை பின்வருமாறு எழுதலாம்:
- H2SO4 + C2H4 → C2H5-O-SO3H
இதனைத் தொடர்ந்து, கந்தக அமிலத்தை மீண்டும் உருவாக்கவும் எத்தனாலை வெளியிடவும் இந்த சல்பேட்டு எசுத்தர் நீராற்பகுப்புக்கு உட்படுத்தப்படுகிறது:
- C2H5-O-SO3H + H2O → H2SO4 + C2H5OH
இந்த இரு-படிநிலை தயாரிப்பு முறை மறைமுகச் செயல்முறை என்று அழைக்கப்படுகிறது.
நேரடிச் செயல்முறையில், அமிலம் ஆல்க்கீனை புரோட்டானேற்றம் செய்கிறது. மேலும் நீர் இந்த ஆரம்ப கார்போ நேர்மின் அயனியுடன் வினைபுரிந்து ஆல்ககாலைக் கொடுக்கிறது. நேரடி செயல்முறை மிகவும் பிரபலமானது, ஏனெனில் இது எளிமையானது. அமில வினையூக்கிகளில் பாசுபாரிக் அமிலம் மற்றும் பல திட அமிலங்கள் அடங்கும். 1-மெத்தில் வளையயெக்சீனை 1-மெத்தில் வளையயெக்சேனாக நீரேற்றம் செய்வதற்கான ஓர் எடுத்துக்காட்டு வினை வழிமுறை இங்கே:

ஆல்ககால்களை உற்பத்தி செய்வதற்கு, ஐதரோபோரேற்ற -ஆக்சிசனேற்ற வினை, ஆக்சிமெர்குரேற்ற-ஒடுக்க வினை, முகையாமா நீரேற்றம், கீட்டோன்கள் மற்றும் ஆல்டிகைடுகளின் ஒடுக்கம் மற்றும் உயிரியல் முறையாக நொதித்தல் உள்ளிட்ட பல மாற்று வழிகள் உள்ளன.
ஆல்க்கைன்கள்
[தொகு]அசிட்டிலீன் நீரேற்றம் அடைந்து அசிட்டால்டிகைடைடைத் தருகிறது[3]. இந்த செயல்முறை பொதுவாக பாதரச வினையூக்கிகளைச் சார்ந்துள்ளது மற்றும் மேற்கத்திய நாடுகளில் நிறுத்தப்பட்டுவிட்டது, ஆனால் சீனாவில் இன்னும் நடைமுறையில் உள்ளது. Hg2+ மையம் ஒரு C≡C பிணைப்புடன் பிணைகிறது. பின்னர் நீரால் தாக்கப்படுகிறது. இந்த வினை:
- H2O + C2H2 → CH3CHO
ஆல்டிகைடுகளும் கீட்டோன்களும்
[தொகு]ஆல்டிகைடுகள் மற்றும் ஓரளவிற்கு கீட்டோன்கள் கூட, நீரேற்றம் அடைந்து அடிப்படை டையோல்களாக மாறுகின்றன. இந்த வினை குறிப்பாக பார்மால்டிகைடில் ஆதிக்கம் செலுத்துகிறது, இது நீரின் முன்னிலையில், கணிசமாக டை ஐதராக்சிமீத்தேனாகக் காணப்படுகிறது.
கருத்துரு ரீதியாக ஒத்த வினைகளில் ஐதரோ அமினேற்றம் மற்றும் ஐதரோ ஆல்காக்சிகேற்றம் ஆகியவை அடங்கும். இவை ஆல்க்கீன்களுடன் அமீன்கள் மற்றும் ஆல்ககால்ல்களைச் சேர்ப்பதை உள்ளடக்கியுள்ளன.
கனிம வேதியியல்
[தொகு]நீரேற்றம் என்பது பல பிற பயன்பாடுகளில் ஒரு முக்கியமான செயல்முறையாகும். நீரினால் தூண்டப்படும் கால்சியம் ஆக்சைடுகள் மற்றும் சிலிக்கேட்டுகளின் குறுக்குப் பிணைப்பின் மூலம் போர்ட்லேண்ட்டு சிமெண்ட் உற்பத்தி செய்யப்படுவது இதற்கு எடுத்துக்காட்டாகும். நீரேற்றம் என்பதே உலர்த்திகள் செயல்படும் செயல்முறையாகும்.


மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Falbe, Jürgen; Bahrmann, Helmut; Lipps, Wolfgang; Mayer, Dieter (2005), "Alcohols, Aliphatic", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, doi:10.1002/14356007.a01_279.
- ↑ Siegfried Rebsdat; Dieter Mayer (2005), "Ethylene Glycol", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, doi:10.1002/14356007.a10_101
- ↑ Marc Eckert, Gerald Fleischmann, Reinhard Jira, Hermann M. Bolt, Klaus Golka "Acetaldehyde" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, 2006, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a01_031.pub2.