உள்ளடக்கத்துக்குச் செல்

நிழற் பொம்மலாட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீனத்து நிழற் பொம்மலாட்ட உருவங்கள்

நிழற் பொம்மலாட்டம் அல்லது நிழல் நாடகம் என்பது பழங்காலத்துக் கதைகூறல் முறையும் ஒரு பொழுதுபோக்கும் ஆகும். இவற்றில், தட்டையானவையும், உறுப்புக்கள் தனித்தனியாக அசையக் கூடிய வகையில் மூட்டுக்களால் இணைக்கப்பட்டவையுமான உருவங்களைப் (நிழற் பொம்மைகள்) பயன்படுத்துகின்றனர். இவற்றின் மூலம், மனிதர்களும் பிற முப்பரிமாண உருவங்களும் அசைவது போன்ற தோற்றத்தை உருவாக்குகின்றனர்.

தட்டையான பலகைகளில் அல்லது அட்டைகளில் வெட்டியெடுக்கப்பட்ட உருவங்களான நிழற் பொம்மைகள் ஒளிமுதலுக்கும் (விளக்கு), ஒளிகசியும் திரையொன்றுக்கும் இடையே வைக்கப்படும். சில பொம்மைகள் ஒளிகசியவிடும் நிறப் பொருட்களையும் பிற வேலைப்பாடுகளையும் கொண்டிருப்பது உண்டு. நிழற் பொம்மலாட்டத்தைப் பார்ப்பவர்கள் திரைக்கு மறுபக்கத்தில் இருப்பர். பொம்மைகளையும், ஒளிமுதலையும் அசைப்பதன் மூலம் பல வகையான விளைவுகளைப் பெறமுடியும். திறமையான பொம்மலாட்டக்காரர் ஒருவரால் பொம்மைகளின் நிழல்களைப் பார்ப்பவர்களுக்கு அவை நடத்தல், ஆடுதல், போரிடுதல், தலையசைத்தல், சிரித்தல் போன்ற செயல்களைச் செய்வது போலக் காட்டமுடியும்.

நிழற் பொம்மலாட்டம் பல பண்பாடுகளில் மக்களால் மிகவும் விரும்பப்படுவனவாக உள்ளன. தற்காலத்தில் இருபதுக்கு மேற்பட்ட நாடுகளில் நிழற் பொம்மலாட்டக் குழுக்கள் இருப்பதாகத் தெரிகிறது. இந்தோனீசியா, சீனா, இந்தியா, கிரீசு, நேபாளம், துருக்கி போன்ற நாடுகளிலும் மேலும் பல நாடுகளிலும் நிழற் பொம்மலாட்டம், சிறுவரும், பெரியவர்களும் விரும்பிப் பார்க்கும் ஒன்றாக உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிழற்_பொம்மலாட்டம்&oldid=1371157" இலிருந்து மீள்விக்கப்பட்டது