நிழற்றுக் குணகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிழற்றுக் குணகம் (Shading coefficient) அல்லது நிழற்றுக் கெழு என்பது கட்டிடம் ஒன்றில் பொருத்தப்படும் கண்ணாடிப் படல் (சாளரங்கள் போன்றவை) ஒன்றின் செயல்பாடொன்றின் அளவீடு ஆகும். இது கண்ணாடியில் நேரடியாகப் படும் சூரிய ஒளியினால் அதனூடாகச் செல்லும் வெப்ப ஆற்றலுக்கும், தெளிந்த 3 மிமீ தடிப்புள்ள மிதப்புக் கண்ணாடி ஒன்றினூடு செல்லும் வெப்ப ஆற்றலுக்கும் இடையேயான விகிதம் ஆகும். இது சூரிய ஒளி நேரடியாகக் கண்ணாடியில் படும்போது, உட்செல்லக்கூடிய வெப்ப ஆற்றலிலிருந்து எந்த அளவுக்கு கட்டிடத்தின் உட்புறங்களை அது காப்புச் செய்கிறது என்பதற்கான ஒரு சுட்டி ஆகும். நிழற்றுக் குணகத்தின் மதிப்பு 1.00 க்கும் 0.00 க்கும் இடையில் அமையும். நிழற்றுக் குணகத்தில் அளவு குறைந்து செல்லும்போது அது கடத்தும் வெப்பத்தின் அளவு குறைவதுடன் அதன் நிழற்றுத் திறன் கூடும்.


கண்ணாடியொன்றின் நிழற்றுக் குணகம் அதன் நிறம், தெறிப்புத்திறன் வீதம் என்பவற்றில் தங்கியுள்ளது. தெறிப்புக் கண்ணாடியில் இது, பயன்படுத்தப்படும் தெறிப்புப் பூச்சின் வகையிலும் தங்கியுள்ளது. வெப்பமுறைப் பூச்சுக் கண்ணாடிகளைவிட அதே போன்ற விசிறல் பூச்சுக் கண்ணாடிகள் குறைவான நிழற்றுக் குணகம் கொண்டவை. நிழற்றுக் குணகம் சாளரம் போன்றவற்றின் கண்ணாடிப் பகுதியூடாகச் செல்லும் ஆற்றலை மட்டுமே கவனத்தில் கொள்கிறது. அவற்றின் சட்டங்கள் ஊடாகக் கடத்தப்படும் ஆற்றல் கணிப்புக்கு எடுத்துக்கொள்ளப்படுவது இல்லை. கட்டிடங்களுக்கான கண்ணாடிகளைத் தெரிவு செய்வதில் நிழற்றுக் குணகத்தின் பங்கு முக்கியமானது. சிறப்பாக உயர்ந்த வெப்பநிலைகளைக் கொண்ட பகுதிகளில் இது கூடிய முக்கியத்துவம் பெறுகிறது. இது நேரடியாக விழும் சூரிய ஆற்றலுடன் தொடர்புடையது ஆதலால், நேரடியான சூரிய ஒளி இல்லாத இடங்களில் கட்டிடங்களுக்கான வெளிப்புறக் கண்ணாடிகளின் தெரிவில் நிழற்றுக் குணகத்தின் தாக்கம் மிகவும் குறைவானது ஆகும்.


தற்காலத்தில் நிழற்றுக் குணகத்துக்குப் பதிலாக, சூரிய வெப்ப ஈட்டக் குணகம் (solar heat gain coefficient) என்னும் அளவீட்டைப் பயன்படுத்துகின்றனர் எனினும், நிழற்றுக் குணகத்தின் பயன்பாடு முற்றாக இல்லாமல் போய்விடவில்லை. நிழற்றுக் குணகத்தை 0.87 ஆல் பெருக்குவதன் மூலம் அதற்கு ஈடான சூரிய வெப்ப ஈட்டக் குணகத்தின் அண்ணளவான மதிப்பைப் பெறலாம்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிழற்றுக்_குணகம்&oldid=1358216" இலிருந்து மீள்விக்கப்பட்டது