நில எடுப்பு
நில எடுப்பு அல்லது நிலம் கையகப்படுத்தல் (Land Acquisition) , இந்தியாவின் மத்திய, மாநில அரசு துறைகள் மற்றும் அரசுத் துறை நிறுவனங்களின் பொதுக் காரணங்களுக்காக, நிலம் கையகப்படுத்துதல், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றச் சட்டத்தின் படி, தனியாருக்கு சொந்தமான பட்டா நிலத்தை உரிய இழப்பீடு வழங்கி கையகப்படுத்துதல் என்பதே நில எடுப்பு ஆகும். [1]
நிலத்தை கையகப்படுத்துவதற்கு இந்திய அரசு நில எடுப்பு சட்டம் 1894 (மத்திய சட்டம் 1/1894)ன் கீழ் செய்யப்படுகிறது. பின்னர், 24.9.1984ல் இச்சட்டத்தின் பல முக்கிய பிரிவுகளுக்கு முக்கிய திருத்தங்கள் அளித்து இச்சட்டம் நில எடுப்பு திருத்த சட்டம் 68/1984 ஆக திருத்தம் செய்யப்பட்ட சட்டமாக மாற்றப்பட்டது.
பொது காரியம் என்பதற்கு சட்டப்பிரிவு 3(எப்) ன் கீழ், எட்டு இனங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. தனியார் துறை நிறுவனத்திற்காக நிலம் கையகப்படுத்து பொது காரியமாக கருத முடியாது. நிலம் என்பது அதில் உள்ள கட்டிடங்கள், மரங்கள் மற்றும் நிலுவையில் உள்ள பயிர்கள் அடங்கும்.
அரசின் சார்பில் தனியார் நிலங்களை கையகப்படுத்துவதற்கு என்றே வருவாய் துறையில் நில எடுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தனியார் நிலத்தை கையகப்படுத்துவற்கான விதிமுறைகள்
[தொகு]பொதுக் காரணங்களுக்காக தேவைப்படும் தனியார் நிலத்தை கையகப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் மாவட்ட ஆட்சியருக்கு படிவம் ஐ ல் விண்ணப்பிக்க வேண்டும்.
நில எடுப்பிற்கான தேர்வு முறைகள்
[தொகு]- நஞ்சை நிலங்கள் தேர்வு செய்வதை தவிர்க்க வேண்டும். நஞ்சை நிலமாக இருப்பின் அரசின் அனுமதி பெற வேண்டும்.
- பாசனவசதி பெற்றுள்ள புஞ்சை நிலங்களையும், நஞ்சை நிலங்கள் போன்றே பாவிக்க வேண்டும்.
- கோவில் பட்டா நிலங்களை எடுப்பதையும் தவிர்க்க வேண்டும்.
- சிறு விவசாயிகளின் நிலங்கள் (2ஏக்கருக்கும் குறைவு), ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர்களின் நிலங்கள் ஆகியவற்றை விலக்கிட வேண்டும்.
நில எடுப்பு அலுவலர் நிதி அதிகார வரம்பிற்கேற்ப (Monetory Limit) வட்டாட்சியரோ, கோட்டாட்சியரோ இருப்பார்கள். 75 ஏக்கருக்கு மேல், ஒரு திட்டத்திற்காக கையகப்படுத்த வேண்டிய இனங்களில் தனி அலுவலர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.
நில எடுப்பிற்கான அறிவிக்கை
[தொகு]அறிவிக்கை என்பது பொது மக்களுக்கு உத்தேச நில எடுப்பு குறித்து தெரிவிக்கப்படுவது ஆகும்.. 40 ஏக்கருக்கு மேற்படாமலும், நில மதிப்பு 25 லட்சத்திற்கு மிகைப்படாமலும் இருந்தால் மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் பெற்று, மாவட்ட அரசிதழ் மற்றும் உள்ளூர் தினசரி செய்தி பத்திரிக்கைகளிலும் விளம்பரப் படுத்தப்பட வேண்டும்.
75 ஏக்கருக்கு மேற்படாமலும், நில மதிப்பு 50 லட்சத்திற்கு மிகைப்படாமலும் இருந்தால் நில நிர்வாக ஆணையரின் ஒப்புதல் பெற்று தமிழ்நாடு அரசிதழிலும் உள்ளுர் தினசரி செய்தி பத்திரிக்கைகளிலும் விளம்பரப்படுத்தப்பட வேண்டும்.
விளம்பர அறிவிப்பு என்பது மூன்று முறைகளில் செய்யப்பட வேண்டும். 1 அரசிதழ், 2 நில எடுப்பு பகுதியில் பிரசுரமாகும் இரண்டு நாளேடுகள், 3 மற்றும் நில எடுப்பு பகுதியில் இவ்விளம்பரத்தின் சுருக்கத்தினை விளம்பரப்படுத்த வேண்டும். ஒப்புதல் பெறப்பட்ட 4 (1) அறிவிக்கை நகல் ஒன்றினை நில உரிமையாளரிடம் கொடுத்து 30 நாட்களுக்குள் ஆட்சேபனை ஏதும் இருந்தால் பெற வேண்டும்.
நில எடுப்பு பணியில் முதன்மைப் பணி என்பது நில மதிப்பு நிர்ணயம் செய்வதேயாகும். இதற்கான விலைப்புள்ளி விவரங்கள் தயாரிப்பது என்பது வருவாய் ஆய்வாளர்களின் முக்கிய கடமையாகும்.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "நியாயமான இழப்பீட்டு உரிமை மற்றும் வெளிப்படையான நிலம் கையகப்படுத்துதல், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றச் சட்டம், 2013" (PDF). இந்திய நாடாளுமன்றம். Archived from the original (PDF) on 2017-07-13. Retrieved 2017-09-17.
வெளி இணைப்புகள்
[தொகு]- நில எடுப்பு (LAND ACQUISITION) பரணிடப்பட்டது 2017-10-24 at the வந்தவழி இயந்திரம் (தமிழில்)