நிலாவெளிக் கல்வெட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிலாவெளிக் கல்வெட்டு என்பது, இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள நிலாவெளிப் பிள்ளையார் கோயிலில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கல்வெட்டு ஆகும். தொடக்கத்தில் இது எங்கிருந்தது என்று தெரியவில்லை. ஆனால், 20 ஆம் நூற்றாண்டில் பிள்ளையார் கோயில் புதிதாகக் கட்டப்பட்ட காலத்தில் இக்கல்வெட்டைக் கோயில் தீர்த்தக் கிணற்றின் படிக்கல்லாக வைத்துக் கட்டிவிட்டனர். முன்னாள் சாம்பல்தீவுக் கிராமசபைத் தலைவரான செ. தம்பிராசாவின் அழைப்பின்பேரில் நிலாவெளிக்குச் சென்ற கா. இந்திரபாலாவும் செ. குணசிங்கமும் முதன் முதலாக இதைப் படியெடுத்து ஆய்வுசெய்தனர்.[1]

காலம்[தொகு]

இக்கல்வெட்டின் காலத்தை நேரடியாகக் குறித்துக்காட்டக்கூடிய அரசனின் பெயர், ஆட்சியாண்டு முதலிய தகவல்கள் இதன் வாசிக்கக்கூடிய பகுதிகளில் இல்லை. எழுத்துக்கள் சிதைந்து போயுள்ள கல்வெட்டின் மேற்பகுதியில் இத்தகைய விவரங்கள் இருந்திருக்கக்கூடும். ஆனாலும், எழுத்தமைதி, அதில் காணப்படும் தகவல்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு இக்கல்வெட்டு இலங்கையில் சோழராட்சியின் தொடக்ககாலத்துக்கு உரியது என மதிப்பிடப்பட்டுள்ளது.[2]

உள்ளடக்கம்[தொகு]

இக்கல்வெட்டு திருகோணமலையில் உள்ள மத்ஸ்யகேஸ்வரம் என்னும் கோயிலுக்கு அன்றாட வழிபாட்டுத் தேவைகளுக்காக வழங்கப்பட்ட தானம் ஒன்றைக் குறிக்கிறது. மத்ஸ்யகேஸ்வரம் என்பது திருக்கோணேஸ்வரம் என இன்று அழைக்கப்படும் கோயிலுக்கு முன்னர் வழங்கிய ஒரு பெயராகும். வழங்கப்பட்ட தானம், கிரிகாமம், கிரிகண்ட கிரிகாமம் ஆகிய ஊர்களில் உள்ள நன்செய், புன்செய் நிலங்களை உள்ளடக்கியிருந்தது.இவ்விரு ஊர்ப் பெயர்களும் இன்று வழக்கில் இல்லை. எனினும், இதில் தரப்பட்டுள்ள தகவல்கள் மேற்படி ஊர்கள் கடற்கரையை அன்றி அமைந்தவை என்பதைக் காட்டுகின்றன. திருக்கோணமலை, கோணமாமலை ஆகிய பெயர்கள் இந்தக் கல்வெட்டில் உள்ளன. இதுவரை அறியப்பட்டுள்ள ஆவணங்களில், திருக்கோணமலை என்ற பெயர் குறிக்கப்பட்டுள்ள மிகப்பழைய ஆவணம் இதுவே. எனினும், திருக்கோணமலையைக் குறிக்கும் கோணமாமலை என்ற பெயர் ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த தேவாரங்களில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. பத்மநாதன், செ., 2006. பக். 103, 104.
  2. பத்மநாதன், செ., 2006. பக். 105.
  3. பத்மநாதன், செ., 2006. பக். 106.

உசாத்துணைகள்[தொகு]

  • பத்மநாதன், சி., இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள், கலாச்சார அலுவல்கள் திணைக்களம், கொழும்பு, 2006.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலாவெளிக்_கல்வெட்டு&oldid=3319598" இலிருந்து மீள்விக்கப்பட்டது