நிலவேம்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிலவேம்பு

நிலவேம்பு (Andrographis paniculata) மூலிகை மருத்துவத்தில் பயன்படும் செடியாகும். கசப்புச் சுவையுடையதான இதன் இலையும் தண்டும் மருத்துவ குணமுடையவையாகும். இச்செடி இரண்டு முதல் மூன்று அடிகள் வரை நிமிர்ந்து வளர்கிறது. இதன் கக்கத்திலிருந்து உருவாகும் பூக்கள் இளஞ் சிவப்பு நிறமுடையவையாகும். கசப்புச் சுவையின் இராசா என இந்த நிலவேம்பு அழைக்கப்படுகிறது. இது இந்தியாவிலும் இலங்கையிலும் அதிகம் காணப்படுகிறது. தெற்கு மற்றும் தென்கிழக்காசியாவில் அதிகம் பயிரிடப்படுகிறது. பாரம்பரியமாக இத் தாவரம் சில நோய்களையும் தொற்றுகளையும் குணமாக்கப் பயன்படுகிறது. இதன் முழுச் செடியும் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. [1]

சொற்தோற்றம்[தொகு]

நிலவேம்பு

நிலவேம்பு (Andrographis paniculata) என்பது வருடத்தில் ஒருமுறை காய்த்துப்படுஞ்செடி வகையைச் சேர்ந்தது. இதன் அனைத்து பாகங்களும் கசப்பு சுவையைக் கொண்டவை. இந்தியாவின் வட மாநிலங்களில் மகா டிக்டா (Maha-tikta) என அழைக்கப்படுகிறது. இதன் அர்த்தம் கசப்பின் அரசன் என்பதாகும். இத் தாவரம் ஆயுர்வேதத்தில் காலா மேகா (Kalamegha) என்ற அழைக்கப்படுகிறது, இதன் அர்த்தம் கார்மேகம் என்பதாகும். மலேசியாவில் கெம்பெடு பூமி (Hempedu Bumi) என்று அழைக்கப்படுகிறது. இதன் அர்த்தம் பூமியின் பித்தநீர் என்பதாகும். தமிழில் நில வேம்பு என்பதன் அர்த்தம் தரையில் விளையும் வேம்பு என்பதாகும்.

தாவரத்தின் குணங்கள்[தொகு]

இத் தாவரம் ஈரப்பதமும், நிழலும் உள்ள இடங்களில் 30–110 செ.மீ உயரம் வரை வளரக் கூடியது. கரும் பச்சை நிறத்துடன் சதுர வடிவிலான தண்டுப் பகுதியுடன் காணப்படுகிறது. 8 செ.மீ நீளமுள்ள கரும் பச்சை நிறம் கொண்ட இலைகளைக் கொண்டுள்ளது. இதன் பூக்கள் இளஞ் சிவப்பு நிறமுடையவையாகும். பழுப்பு-மஞ்சள் நிறமுடைய விதைகளைக் கொண்டுள்ளது.

தாவரத்தை விளைவிக்கும் முறை[தொகு]

வெப்பம் அதிகமுள்ள இடங்களில் சிறப்பாக விளைகிறது. மே மற்றும் சூன் மாதங்களில் விதைகளைப் பரப்புகிறது. 60 செ.மீ இடைவெளியில் நில வேம்பு விளைவிக்கப்படும் போது, நல்ல விளைச்சலைத் தருவதாக கண்டறியப்பட்டுள்ளது.[2]

மருத்துவக் குணங்கள்[தொகு]

நிலவேம்பு

நிலவேம்புக் குடிநீர் உட்கொள்ள சுரம், நீர்க்கோவை, வயிற்றுப் பொருமல், குளிர்காய்ச்சல் போன்ற நோய்கள் குணமாகும்.[1] [3] சமீபத்தில் தமிழ்நாட்டில் பல இடங்களில் டெங்கு காய்ச்சல் பரவியபோது தமிழக அரசால் நிலவேம்புக் குடிநீர் டெங்குவிற்கு எதிரான தடுப்பு மருந்தாக பரிந்துரைக்கப்பட்டு அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும் வழங்கப்பட்டது[4][5]. நிலவேம்பு புற்று நோயைக் கட்டுப்படுத்தவும், வராமல் தடுக்கவும் உதவுவதாக சமீபத்திய ஆராய்ச்சிகள் கூறுகின்றன.[6] நில வேம்பு சித்த மருத்துவத்திலும், ஆயுர் வேத மருத்துவத்திலும் மிக முக்கியமான மூலிகையாகும். அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் நிலவேம்புக் குடிநீரில், நில வேம்புடன் 12 வகையான முக்கிய மூலிகைகளும் கலந்து வழங்கப்படுகிறது.

தாவரத்தின் வேதியியல்[தொகு]

ஆன்ட்ரோகிராப்கிளைடு (Andrographolide) என்ற வேதிப்பொருளே, இத் தாவரத்தின் இலைகளைக் கசக்கி பிழியும் போது கிடைக்கிறது. 1911 ல் கார்ட்டர் (Gorter). இத் தாவரத்தின் கசப்புத் தன்மையை தனியாகப் பிரித்தெடுத்தார். இத் தாவரத்தின் வேதிப் பண்புகள் மிகத் தெளிவாகக் கண்டறியப்பட்டன.[7][8]

விளையுமிடங்கள்[தொகு]

ஆசியாவின் பெரும்பாலான பகுதிகளில் விளைவிக்கப்படுகிறது. எவ்வகை நிலத்திலும் விளையும் பண்பைப் பெற்றுள்ளது. இந்தியாவின் காட்டுப் பகுதியில் விளையும் முக்கிய மூலிகையாகும். இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் 2,000–5,000 டன்கள் நிலவேம்பு உற்பத்தி செய்யப்படுகிறது.[9]


மேற்கோள்கள்[தொகு]

  1. "Traded Medicinal Plants Database". Archived from the original on 2020-10-28.
  2. "List of 178 Medicinal Plant Species in high Volume Trade (>100 MT/Year)". Archived from the original on 2015-11-17.
  3. medicinal properties of bhunimb Nighatu adarsh[page needed]
  4. "டெங்குவிற்கு எதிரான தடுப்பு மருந்து". பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 22, 2015.
  5. "Andrographis". Memorial Sloan-Kettering Cancer Center. 13 February 2013.
  6. "Andrographis". Memorial Sloan-Kettering Cancer Center. 13 February 2013.
  7. Chao W-W., Lin B.-F. "Isolation and identification of bioactive compounds in Andrographis paniculata (Chuanxinlian) Chinese Medicine 2010 5 Article Number 17
  8. "Andrographis paniculata (Burm. f.) Wall. ex Nees: a review of ethnobotany, phytochemistry, and pharmacology". ScientificWorldJournal 2014: 274905. 2014. doi:10.1155/2014/274905. பப்மெட்:25950015. 
  9. "List of 178 Medicinal Plant Species in high Volume Trade (>100 MT/Year)". Archived from the original on 2015-11-17.

உசாத்துணை[தொகு]

  • மூலிகைகள் - ஓர் அறிமுகம்" - சித்தமருத்துவ கலாநிதி சே. சிவசண்முகராஜா, 2003

மேலும் படிக்க[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Andrographis paniculata
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலவேம்பு&oldid=3888448" இலிருந்து மீள்விக்கப்பட்டது