நிலவியலின் வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிலவியலின் வரலாறு என்பது நிலவியல் குறித்த இயற்கை அறிவியலின் வளர்ச்சியைப் பற்றியது ஆகும். நிலவியல் என்பது புவியின் தோற்றம், வரலாறு, வடிவம் ஆகியவற்றைப் பற்றி அறிவியல் பூர்வமாக தெரிந்துக்கொள்வது ஆகும். நிலவியலில் முதன்முதலாக ஆராயப்பட்டது பூமியின் தோற்றம் ஆகும். பண்டைய கிரேக்கர்கள் புவியின் தோற்றம் குறித்து சில கருத்துக்களை உருவாக்கி இருந்தனர். கிமு நான்காம் நூற்றாண்டில் அரிஸ்டாட்டில் புவியில் மெதுவாக ஏற்படும் மாற்றங்களைப் பற்றி கண்காணித்து வந்தார். இவர் புவியில் எந்த எந்த இடத்தில் மாற்றங்கள் ஏற்படும் என்பதனையும் கணித்துக் கூறி இருந்தார். இந்த மாற்றம் ஒரு மனிதனின் வாழ்நாளில் உணர முடியாதது ஆகும். அரிஸ்டாட்டில் முதன்முதலாக புவியில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆதாரங்களுடன் குறிப்புகள் வெளியிட்டிருந்தார். மெய்யியல் அறிஞர் தியோபைரடஸ் கற்களைப் பற்றி நிறைய ஆய்வுகள் மேற்கொண்டார். இவர் ஏதென்ஸில் உள்ள சுரங்கங்களை ஆராய்ந்து பல கனிமங்களையும் பல தாதுக்களையும் கண்டுபிடித்துள்ளார். இவர் பளிங்குகளின் பல வகைகளைப் பற்றியும், சுண்ணாம்புக் கற்களைப் பற்றியும், அதன் கடினத்தன்மை பற்றிய குறிப்புகளையும் எழுதியுள்ளார். பின்னர் ரோமர்களின் காலத்தில் மூத்த பிளினி பல கனிமங்களைப் பற்றியும், உலகங்களைப் பற்றியும் ஆழமான ஆய்வறிக்கைகளை உருவாக்கினார். இவரே அம்பர் மரத்திலிருந்து கிடைக்கும் பிசின்|பிசினின் தொல்லுயிர் எச்சம் என்று கூறியவர். சில நேரங்களில் மரத்தில் உள்ள இந்தப் பிசின் சிறிய வகை பூச்சிகளையும் ஒட்டிக் கொள்ள வைத்துவிடும். இவர் வைரத்தின் எண் முக தன்மையை வைத்து படிகவியலில் சில அடிப்படை தத்துவங்களையும் கூறியுள்ளார்.

மத்திய காலம்[தொகு]

அல்-பிருனி முதல் முஸ்லீம் நிலவியல் ஆய்வாளர் ஆவார். இவர் இந்தியாவின் நிலவியலை பற்றி எழுதியுள்ளார். இவரே அனுமானத்தின் வாயிலாக இந்தியத் துணைகண்டம் ஒரு காலத்தில் கடலாக இருந்தது என்று கூறினார். இப்னு சீனா இயற்கை அறிவியலிற்கும் நிலவியலிற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். இவர் உருவாக்கிய ஒரு கலைக்களஞ்சியத்தில் அரிஸ்டாட்டிலின் கனிமவியல் பற்றியும், அளவியல் பற்றியும், மலைகளின் தோற்றம் குறித்தும், மலைகளின் பயன்கள் குறித்தும், மேகங்களின் தோற்றம் குறித்தும், நீரின் மூலாதாரம் பற்றியும், நிலநடுக்கங்கள் எவ்வாறு தோன்றுகின்றன என்பது பற்றியும், தனிமங்களின் உருவாக்கம் பற்றியும் கூறியுள்ளார்.

17ஆம் நூற்றாண்டு[தொகு]

பதினேழாம் நூற்றாண்டு வரை நிலவியல் பற்றிய அறிவு மக்களிடையே பெரும் முன்னேற்றத்தை அடைந்தது இல்லை. இந்த காலகட்டத்தில் தான் இயற்கை அறிவியலில் ஒரு பாகமாக நிலவியல் கருத்தில் கொள்ளப்பட்டது. கிறிஸ்தவ மக்களால் ஒவ்வொரு விவிலிய மொழிபெயர்ப்பும் மாறுபட்ட விவிலிய உரையை கொண்டதாக கண்டுபிடிக்கப்பட்டது. இருப்பினும் அந்த அனைத்து உரைகளிலும் பிரளயமே உலகின் நிலவியலும் புவியியலும் உருவாக காரணம் என்னும் கருத்து ஒற்றுமை இருந்தது.[1] விவிலியத்தின் உண்மை தன்மையை நிரூபிப்பதற்காக பலதரப்பட்ட மக்கள் அறிவியல் சான்றுடன் அந்த பெருவெள்ளம் கண்டிப்பாக ஏற்பட்டது என்பதை செய்து காட்ட நினைத்தனர். இந்த அபரித ஆசையினால் மக்கள் பூமியின் பாகங்களை அதிக அளவில் கண்காணிக்க ஆரம்பித்தனர். அதனால் படிமங்கள் அதிக அளவில் கண்டுபிடிக்கப்பட்டன. பிரளயத்தின் கூற்றினை நிரூபிக்கவே மக்கள் அதிக ஆர்வம் காட்டிய போதிலும் அவர்கள் பூமியின் கலவைகளை நோட்டமிட்ட அதன்மூலம் அதைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளவே அவர்களின் உண்மையான ஆர்வம் இருந்தது. இக்காலகட்டத்தில் பூமி உண்டானதற்கு அறிவியல் வாயிலாகவும் மதம் வழியிலும் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன. இதனால் இத்துறையில் மக்களின் ஆர்வம் பெருகியது. வல்லுநர்கள் நிலத்தில் படிமங்கள் வளர்வதற்கும் பாறைகள் உருவாவதற்கான காரணங்களை அறிந்து கொள்ள முற்பட்டனர்.

அடுத்து பதினெட்டாம் நூற்றாண்டில் நிலம் பற்றிய அறிவு மட்டுமல்லாமல் கனிமங்கள் பற்றியும் மக்கள் அறிய ஆரம்பித்தனர். கனிமங்களின் பயன்பாட்டு தேவை அதிகமானதால் நிலவியல் பற்றிய நுட்பமான அறிவு தேவைப்பட்டது. கனிமங்களை உற்பத்தி செய்வதால் மக்களின் செல்வமும் பெருகியது. ஆகவே மேலும் பலர் நிலவியல் பற்றி படிக்க தொடங்கினர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Frank 1938, ப. 96
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலவியலின்_வரலாறு&oldid=2749697" இலிருந்து மீள்விக்கப்பட்டது