நிலநடுக்க அளவீடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நில நடுக்க அதிர்வுகளின் வலுவை பலவகையான அளவீடுகளால் அறிகிறார்கள். அவற்றுள் ரிக்டர் அளவீடு (Richter Scale) என்ற மடிமை (லாகரிதமிக்) அளவீட்டால் அளக்கப்படுவது பரவலாக அறியப்படும் ஒரு அளவீடு. ஒவ்வொரு நாளும் உலகம் முழுதும் நூற்றுக்கணக்கில் நில அதிர்வுகள் பல்வேறு வலுவுடன் ஏற்படுவதாக நிலநடுக்க அளவிகள் மூலம் அறியப்படுகிறது. இவை பெரும்பாலும் மிகச் சிறிய அதிர்வுகளாக இருப்பதால் நம்மால் அறிய முடிவதில்லை. எனவே நில உருண்டையின் மேல் ஓடானது தொடர்ந்து சிலிர்த்துக் கொண்டும் அதிர்ந்து கொண்டும் இருக்கும் ஒன்று ஆகும்.

நில அதிர்வுகளை அறிந்து கொள்ள உலகம் முழுவதும் ஆயிரத்திற்கு மேற்பட்ட நிலநடுக்கவியல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு நிலநடுக்கம் அல்லது பூகம்பம் ஏற்படும் போது பல்வேறு நிலையங்களில் பதிவான அளவுகளைக் கொண்டு அந்த நிலநடுக்கத்தின் (பூகம்பத்தின்) அதிர் மையம் (epicenter) எங்கு உள்ளது என்பதையும், நிலநடுக்கத்தின் வலு அளவையும் கணிப்பார்கள். பூமிக்குள் எந்த இடத்தில் பாறைப் படிமங்களின் உரசல் ஏற்பட்டதால் பூகம்பம் உண்டானதோ அது குவியம் (Focus) எனப்படும். அந்த இடத்திற்கு நேராக மேலே உள்ள பூமியின் மேற்பரப்பு புவி அதிர்ச்சி வெளிமையம் என்று அழைக்கப்படும்.

ஒரு நிலநடுக்கத்தின் குவியம் தரையிலிருந்து 70 கி.மீ. ஆழத்திற்குள் இருந்தால் அதனை ஆழமற்ற குவியம் (Shallow focus) என்பார்கள். இதனால் பூமியின் பரப்பில் ஏற்படும் பாதிப்புகள் அதிகம். 70 கி.மீ.க்கு மேல் 700 கி.மீ ஆழத்திற்குள் பூகம்பம் உருவானால் ஆழமான குவியம் (Deep focus) என்று கருதப்படும்.

நிலநடுக்க அளவீடுகள் - வலுவை அளத்தல்[தொகு]

நிலநடுக்க அதிர்வுகளின் வலுவை வகைப்படுத்த 1780களில் டொமினிக்கோ பின்யாட்டாரோ (Domenico Pignataro) என்பார் ஏற்படுத்திய எளிய முறையை முதலில் பயன்படுத்தினர். பின்னர் நிலநடுக்க வலுவை, தற்கால புரிதலின் படி அளவிட 1828ல் பி.என்.ஜி ஈகன் (P.N.G. Egen) அவர்களால் உருவாக்கப்பட்ட அளவீடே முதன்முதல் பலராலும் அறியப்பட்ட அளவீடாகும். 19 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட ராஸ்ஸி-ஃவோரெல் (Rossi-Forel scale) அளவீட்டு முறையே முதன்முதல் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறையாகும்.. அதன் பின்னர் பல வகையான நிலநடுக்க வீச்சு, வலு அளவீடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஐக்கிய அமெரிக்காவில் MM என்று குறிப்பிடப்படும் மாற்றம் செய்யப்பட்ட மெர்க்காலி அளவீடு (Modified Mercalli scale (MM) பயன்படுத்தப்படுகின்றது. ஐரோப்பாவில் ஐரோப்பிய மாக்ரோசைஸ்மிக் அளவீடு (European Macroseismic Scale) என்னும் முறைவழி அலவிடுகிறார்கள். ஜப்பானில் ஷிண்ட்டோ அளவீடு என்னும் முறையைக் கையாளுகிறார்கள். இந்தியா, இசுரேல், ரஷ்யா ஆகிய நாடுகளில் MSK-64 என்னும் அளவுமுறையைப் பயன்படுத்துகிறார்கள். இவ்வளவீடுகளில் பெரும்பாலானவை நிலநடுக்க வலுவைக் குறிக்க சற்றேறக்குறைய 12-படி அளவுநிலைகளைக் கொண்டுள்ளது.

நிலநடுக்க அளவீடுகள் - வீச்சளவை அளத்தல்[தொகு]

நிலநடுக்க மையத்தை கண்டுபிடித்தல்[தொகு]

குறைந்தது மூன்று நிலநடுக்கவியல் நிலையங்களில் பதிவான தகவல்களைக் கொண்டு நிலநடுக்க மையம் கண்டுபிடிக்கப்படும். கணிப்பின் துல்லியம் அதிர் மையத்திற்கு 10கி.மீ. அளவிற்குள்ளும், பூமியின் அடியில் உள்ள குவியம் 10 - 20 கி.மீ அளவிற்குள்ளும் அறியப்படுகிறது.

நிலநடுக்கங்கள் ஏற்படும் என்று கணிக்கப்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள சிறப்பு நிலநடுக்கவியல் நிலையங்களால் நிலநடுக்க மையத்தை மேலும் துல்லியமாக கணிக்க இயலும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலநடுக்க_அளவீடு&oldid=1851235" இருந்து மீள்விக்கப்பட்டது