நிறைவேற்றுப் பிரிவு (அரசு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அரசறிவியலில், நிறைவேற்றுப் பிரிவு என்பது, அரசொன்றின் அன்றாட நிர்வாகத்தைக் கவனித்துக்கொள்ளும் அதிகாரமும் பொறுப்பும் கொண்ட அவ்வரசின் ஒரு பிரிவாகும். அதிகாரத்தை அரசின் வெவ்வேறு பிரிவுகளுக்குப் பகிர்ந்து கொடுப்பது என்பது "அதிகாரப் பிரிப்பு" என்னும் மக்களாட்சியின் மைய எண்ணக்கரு ஆகும்.

பல நாடுகளில் அரசு என்பது நிறைவேற்றுப் பிரிவையே குறிக்கிறது. அரசின் பல்வேறு அதிகாரக்கள் ஒருவரிடமே குவிந்திருக்கும் வல்லாண்மை முறை, முழுமையான முடியாட்சி போன்ற சர்வாதிகார ஆட்சி முறைகளில், நிறைவேற்றுப் பிரிவு என்று தனியாக ஒன்று இருப்பதில்லை. ஏனெனில் சம அளவான அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளும் வெவேறு அரசின் பிரிவுகளுக்கான தேவை எதுவும் இருப்பதில்லை.

அதிகாரப் பிரிப்பு என்பது அரசின் அதிகாரத்தை நிறைவேற்றுப் பிரிவுக்கு வெளியே பகிர்வதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு முறையாகும். வரலாற்றில் பல முறை நிகழ்ந்ததுபோல் அரசுத்தலைவர்கள் கொடுங்கோன்மை ஆட்சி நடத்துவதைத் தவிர்த்து மக்களின் தனிமனித சுதந்திரத்தைப் பாதுகாப்பது இப் பகிர்வின் ஒரு நோக்கமாகும். நிறைவேற்று அதிகாரிக்குச் சட்டங்களை ஆக்கும் அல்லது அவற்றை விளக்கும் அதிகாரமோ பொறுப்போ கிடையாது. சட்டங்களை ஆக்கும் அதிகாரமும் பொறுப்பும், சட்டவாக்க சபைக்கும், அதனை விளக்கும் அதிகாரமும் பொறுப்பும் நீதித் துறைக்கும் உரியது. சட்டவாக்கசபையினால் ஆக்கப்படுவனவும், நீதித்துறையால் விரித்து விளக்கப்படுவனவுமான சட்டங்களை நிறைவேற்றுவதே நிறைவேற்றுப் பிரிவின் பங்களிப்பு ஆகும்.