நிரம்ப அழகிய தேசிகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிரம்ப அழகிய தேசிகர் [1] 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவப் பெருமகன். இவர் வேதாரணியத்தில் தேசிகர் [2] குலத்தில் பிறந்தவர். வடமொழியிலும் [3] தென்மொழியிலும் [4] வல்லவர். கமலை ஞானப்பிரகாசரின் மாணாக்கர்.

சில காலம் மதுரையில் வாழ்ந்தார். இவரது உடலில் நுணாக்காய்க் கிராந்தி என்னும் நோய் இருந்தது. அதனால் இவர் ஒதுக்குப்புறமாகவே வாழ்ந்துவந்தார். அவ்வழியே வந்த சிற்றரன் ஒருவன் இவரைக் கண்டு வினவியபோது காவலர் இவரது நோயைப் பற்றியும், புலமை பற்றியும் எடுத்துரைத்தனர். மன்ன்ன் புலமையைப் போற்றி ‘நிரம்ப அழகியரோ’ என்றான். அதுமுதல் இவருக்கு நிரம்ப அழகியார் என்னும் பெயர் வழங்கலாயிற்று எனவும் கூறுவர்.

குரு காலமான பின்னர் இவர் திருப்பரங்குன்றத்தில் சில காலம் வாழ்ந்துவந்தார். அப்போது திருப்பரங்குன்ற புராடம் பாடினார்.

பின்னர் தமது மூதாதையரின் வேண்டுகோளுக்கு இணங்க குன்றக்குடிக்கு அருகிலுள்ள துழாவூர் என்னுமிடத்தில் மடம் அமைத்துத் தங்கினார். அப்போது இவருக்கு மாணாக்கர் பலர் இருந்தனர். அவர்களில் குறிப்பிடத் தக்கவர் மூவர். ஒருவர் திருவாரூர்ப் புராணம் பாடிய அளகை சம்பந்த முனிவர். மற்றொருவர் செப்பேச புராணம் பாடிய ஞானக்கூத்தர். இன்னொருவர் சங்கரவிலாசம் பாடிய சிதம்பரநாத பூபதி.

இராமேசிவரம் கோயிலை நிருவாகித்து வந்த சிலர் இவருக்கு மாணாக்கர் ஆயினர். அதனால் இவர் சேது புராணம் பாடினார்.

துழாவூர் மடத் தலைவர்கள் இல்லறத்தார். தந்தையிடமிருந்து மகன் தலைமைப் பொறுப்பினை ஏற்ற பின்னர் தந்தை துறவு பூண்பது வழக்கம். இந்தப் பரம்பரை அறுநூறு ஆண்டுகளாகத் தொடர்கிறது என்கின்றனர்.

நிரம்ப அழகிய தேசிகரை 16 ஆம் நூற்றாண்டு அதிவீரராம பாண்டியர், திருவிளையாடல் புராணம் பாடிய பரஞ்சோதி முனிவர் ஆகியவர்களோடு தொடர்பு படுத்துவது வரலாற்றுக்குப் பொருந்த்தாது. நுணாக்காய்க் கிராந்தி நோய்க் கதையும் போலியே.

இவர் இயற்றிய நூல்கள்

  • குருஞான சம்பந்தர் மாலை என்னும் நூல் இவரால் இயற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கருவிநூல்[தொகு]

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, முதல் பாகம், பதிப்பு 2005

அடிக்குறிப்பு[தொகு]

  1. இளமைப் பெயர் நிரம்ப அழகியார்
  2. அபிடேகத்தர்
  3. சமற்கிருதம்
  4. தமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிரம்ப_அழகிய_தேசிகர்&oldid=1454330" இருந்து மீள்விக்கப்பட்டது