நியூட்ரினோ ஆய்வகத் திட்டம்
நியூட்ரினோக்கள், அண்டம் முழுவதும் பரவிக் கிடக்கின்றன. ஏறக்குறைய நூறாயிரம் கோடி நியூட்ரினோக்கள் ஒவ்வொரு விநாடியும் நமது உடலுக்குள் புகுந்து வெளியேறிய வண்ணம் உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன் வரை, நியூட்ரினோக்களும் ஒளித்துகள்களைப் போல (போட்டான்) எடை (மாஸ்) அற்றவை என கருதப்பட்டது. ஆனால் 1998ம் ஆண்டு, நியூட்ரினோக்களுக்கு எடை உண்டு என கண்டுபிடிக்கப்பட்டது. சமீப கால இயற்பியல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சியில் நியூட்ரினோவைப் பற்றிய உண்மைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றை கண்டுபிடித்த விஞ்ஞானிகளுக்கு 2002 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
நியூட்ரினோ என்பது சூரியன் மட்டுமல்லாது விண்மீன்களிலிருந்தும் வெளிப்படும் அணுத்துகள்களாகும். கனமற்ற இத்துகள்கள் விண்வெளியிலிருந்து கீழிறங்குகின்றன. பல கோடி நியூட்ரினோக்கள் பாய்ந்த வண்ணம் இருந்தாலும் அவற்றை ஈர்த்து, ஆய்வு செய்வது கடினம். இந்த அணுத்துகளைப் பிடித்து அதனை ஆய்வு செய்தால் சூரியன் குறித்த ரகசியங்களையும், விண்வெளியின் ஆற்றல் பற்றியும் பூமியின் பிறப்பு குறித்தும் தெரிந்து கொள்ளலாம் என்ற நோக்கத்துடன் நியூட்ரினோ ஆய்வு முயற்சி 1930களில் இருந்து தொடங்கியது. நியூட்ரினோ துகள்களை ஒரு கருவி மூலம் ஈர்த்து அவற்றை ஆய்வு செய்வதுதான் நியூட்ரினோ ஆய்வகத் திட்டம்.
ஆய்வுத்திட்டம்
[தொகு]இந்தியாவில் முதன் முதலாக காஸ்மிக் கதிர்களில் இருந்து உண்டாகும் நியூட்ரினோக்கள், கோலார் தங்க வயல் சுரங்கத்தில், 1965 ல் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் இச்சுரங்கங்கள், 15 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டு விட்டன. எனவே, மீண்டும் இந்த ஆராய்ச்சியை நடத்துவதற்காக இந்திய நியூட்ரினோ அறிவியற்கூடம் (en:Indian neutrino observatory) என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பல அறிவியல் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் இணைந்து இந்த பாதாள அறிவியல் கூடத்தை அமைக்க முன் வந்துள்ளன. சுமார் 100 விஞ்ஞானிகள், பொறியாளர்கள் இப்பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். [1]
நியுட்ரினோ ஆய்வு மையம்
[தொகு]தற்போது இந்த ஆய்வு மையம், தமிழ்நாட்டில் தேனி மாவட்டம் தேவாரம் அருகேயுள்ள பொட்டிபுரம் எனும் ஊரிலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் உள்ளே அமைக்கப்படுகிறது. மலையின் உச்சியில் இருந்து 1.3 கி.மீ., கீழே, மலையின் அடிவாரத்தில் 2.5 கி.மீ., தூரத்திற்கு சுரங்கப் பாதை தோண்டப்படும். அதையடுத்து பெரிய ஆய்வுக் கூடம் அமைக்கப்படும். அங்கு 50 கிலோ டன் இரும்பிலான நியூட்ரினோ காணும் கருவி (டிடெக்டர்) அமைக்கப்படும். இதைச் சுற்றி, நான்கு திசைகளிலும் மேலேயும் கீழேயும் குறைந்தபட்சம் ஒரு கி.மீ., பரிமாணமுள்ள பாறை இருந்தால் தான், ஆராய்ச்சி நடத்த முடியும். இவ்வளவு பெரிய பாறையால் தான், வானவெளியில் இருந்து வரும் காஸ்மிக் கதிர்களை தடுத்து, நிறுத்த முடியும். அதன் பிறகு தான், நியூட்ரினோவை காண முடியும். முதற்கட்டமாக ஐ.என்.ஓ., கூடத்தில், காஸ்மிக் கதிர்கள் உண்டாக்கும் நியூட்ரினோக்களைப் பற்றி ஆராய்ச்சிகள் நடத்தப்படும்.
மக்கள் எதிர்ப்பு
[தொகு]தேனி மாவட்டம் பொட்டிப்புரம் பகுதியில் இந்த அறிவியல் ஆய்வு மையம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தப் பகுதியைச் சேர்ந்த டி.புதுக் கோட்டை, ராமகிருஷ்ணாபுரம், பொட்டிபுரம், சின்ன பொட்டிபுரம், திம்மிநாயக்கன் பட்டி, குப்பனாசாரிபட்டி, தெற்குப்பட்டி கிராமங்களை சேர்ந்தவர்கள் தேனி மாவட்ட வருவாய் அதிகாரியிடம், "இந்த ஆய்வு மையம் அமைந்தால், எங்கள் ஊர்களை காலி செய்து விட்டு வெளியேறும் நிலை ஏற்படும். குடிநீர், விவசாயம் பாதிக்கப்படும். இந்த மையத்தை எங்கள் பகுதியில் அமைக்க கூடாது என மனு அளித்துள்ளனர்.[2][3]
ஆய்வு பாதிப்புகள்
[தொகு]நியூட்ரினோ ஆய்வுக் கூடத்தை, கடினமான மலைப் பாறைகளின் கீழே தான் அமைக்க முடியும். தமிழ்நாட்டில் உள்ள மலைகளைப் போல, இந்தியாவில் எங்கும் இல்லை. இதன் மூலம், அறிவியல் வளர்ச்சியில் தமிழ்நாடு, தனி புகழ் பெறும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நமது இளம் விஞ்ஞானிகளையும், ஆராய்ச்சி மாணவர்களையும், பொறியாளர்களையும் உலகத் தரம் வாய்ந்த ஆராய்ச்சியில் ஈடுபடுத்த முடியும். இந்த வாய்ப்பை தமிழகம், இழந்து விடக் கூடாது. இந்த ஆய்வுக் கூடத்தில், எவ்வித ஆபத்தான கதிர் வீச்சு பொருட்களும் பயன்படுத்தப்படாது. அணுகுண்டு ஆராய்ச்சிக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சுற்றுப்புறத்தையோ, நீர், நில வளத்தையோ இந்த ஆராய்ச்சி எவ்விதத்திலும் பாதிக்காது.[4].[5] மற்ற தொலைநோக்கு கருவிகளைப் போன்றது. தமிழகத்தில் இது அமைவதால், மாணவர்களும் ஆசிரியர்களும் அங்கு சென்று ஆராய்ச்சிகளை பார்க்க முடியும்.
அப்துல்கலாம் கருத்து
[தொகு]இந்த நியூட்ரினோ திட்டம் குறித்து முன்னாள் குடியரசுத்தலைவரும் விஞ்ஞானியுமான அப்துல்கலாம் "நியூட்ரினோ திட்டம் நியூட்ரினோவின் எடை வரிசையை அறிவியல் முறையில் ஆராய்ந்து கண்டு பிடிக்கும். தேனி பகுதியிலும், அதன் சுற்று வட்டாரங்களிலும் உள்ள, அறிவியல் நிலையங்களும், கல்லூரிகளும் இந்த நியூட்ரினோ திட்டத்தால், மேலும் வலுப்படுத்தப்படும். நான் அறிவியலாருடன் கலந்து ஆலோசித்த போது, தோண்டி எடுக்கப்படும் கற்கள், நியூட்ரினோ ஆராய்ச்சிக் கூடம் மற்றும் சாலைகள் உண்டாக்குவதற்கு பயன்படுத்தப்படும் என்று கூறினர். பொதுமக்களும் இதனால் பயனடைவர். ஐரோப்பாவில் உள்ள செர்ன் ஆராய்ச்சி நிலையம், அதன் பெரிய ஹாட்ரான் கொல்லைடர் திட்டத்தால் புகழடைந்தது போன்று, தேனியும் அதன் சுற்றுவட்டாரமும், நியூட்ரினோ அறிவியல் திட்டத்தால் புகழடையும். திட்டத்தில் உள்ளவர்கள், இந்த வட்டாரத்தின் சுற்றுப்புறச் சூழலின் முழுத்தேவைகளை கவனத்தில் கொண்டு செயல்படுத்துவர்" என்று குறிப்பிட்டுள்ளார்.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ரூ.1450 கோடியில் தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம்: பிரதமர் மன்மோகன் சிங் அறிவிப்பு
- ↑ தினமலரில் வெளியான செய்தி
- ↑ http://www.vinavu.com/2014/05/08/protest-against-farm-land-for-neutrino-project/
- ↑ http://www.dinamani.com/edition_madurai/madurai/2014/09/20/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/article2440487.ece[நியூட்ரினோ அணு அல்ல, அடிப்படை அறிவியலை அறிவதற்கான துகள் ஆய்வுதான்
- ↑ நியூட்ரினோ துகள்" -ஆய்வும் அபாயமும்?
- ↑ தினமலர் நாளிதழில் வெளியான செய்தி