உள்ளடக்கத்துக்குச் செல்

நியூட்டனின் இயக்க விதிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மரபார்ந்த விசையியல்

நியூட்டனின் இரண்டாவது விதி
வரலாறு · காலக்கோடு

.

நியூட்டனின் இயக்க விதிகள்(Newton's laws of motion), ஒரு பொருளின் மீது ஒரு விசை தாக்கும் போது, அப்பொருளின் இயக்கத்தில் (motion) ஏற்படும் விளைவைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. முதல் விதி விசைக்கும் பொருளின் நிலையான இயக்கத்திற்கோ அல்லது ஓய்வு நிலைக்கோ உள்ள தொடர்பையும், இரண்டாவது விதி விசையின் அளவும், செயல்படும் திசையும் பற்றிய வரையறையையும், மூன்றாவது விதி விசை மற்றும் எதிர்விசை இவற்றின் தன்மையையும் விளக்குகின்றன.

நியூட்டனின் முதல் இயக்க விதி

[தொகு]

இவ்விதியின்படி "ஒரு பொருளின் மீது புறவிசையொன்று செயல்படாதவரை எந்த ஒரு பொருளும் தனது ஓய்வு நிலையையோ அல்லது நேர்க்கோட்டில் அமைந்த சீரான இயக்க நிலையையோ மாற்றிக் கொள்ளாது." இவ்விதி நிலைமக் குறிப்பாயங்களுக்கு (inertial reference frames) மட்டுமே பொருந்தும்.[1][2]

ஒரு பொருளின் மீது புறவிசைகள் செயல்படாதவரை, அப்பொருளானது தன்னிச்சையாகத் தனது இயக்க நிலையை அல்லது ஓய்வு நிலையை மாற்றிக் கொள்ளாத பண்பு அதன் நிலைமம் (Inertia) எனப்படும்.[3] இதனால் முதல் விதியை நிலைம விதி எனலாம்.

நியூட்டனின் இரண்டாம் இயக்க விதி

[தொகு]

ஒரு பொருளின் மீது செயல்படும் விசைகள் சமன் செய்யப்படாத பொழுது பொருளின் மீது ஏற்படும் விளைவை நியூட்டனின் இரண்டாவது இயக்க விதி விளக்குகிறது. இவ்விதியின்படி, பொருளின் உந்தம் மாறுபடும் வீதம் அதன்மீது செயல்படும் விசைக்கு நேர்த்தகவில் (proportional) இருக்கும். உந்தம் மாறுபடும் திசை, விசையின் திசையை ஒத்ததாக இருக்கும்.[4] இதனால் இரண்டாவது விதியை விசை விதி எனலாம். நியூட்டன் விசையைக் கீழ்க் கண்ட சமன்பாட்டால் குறிப்பிட்டார்:

இதில் F என்பது விசை (அலகு நியூட்டன்), m என்பது நிறை (அலகு கிலோ கிராம்), மற்றும் a என்பது முடுக்கம் (அலகு மீட்டர் / விநாடி2).

நியூட்டனின் மூன்றாம் இயக்க விதி

[தொகு]

ஒரு பொருளின் மீது செயல்படும் ஒவ்வொரு புறவிசைக்கும் அவ்விசைக்குச் சமமானதும், எதிர்த்திசையிலும் அமைந்த ஒரு எதிர்விசை உருவாகும். புறவிசை ஒரு பொருளின் மீதும் எதிர்விசை புறவிசை எங்கிருந்து புறப்பட்டு வந்ததோ அந்தப் பொருளுக்கு எதிர் திசையிலும் செயல்படுவதால் ஒன்றையொன்று இழக்கச் செய்வதில்லை.[5] அதாவது புறவிசையும்,எதிர்விசையும் ஒரே பொருளில் உருவாவதில்லை.

ஒவ்வொரு விசைக்கும் அதற்கு இணையான ஆனால் எதிர்திசையில் அமைவதுமான ஓர் எதிர்வினை உண்டு

  1. Browne, Michael E. (July 1999). Schaum's outline of theory and problems of physics for engineering and science (Series: Schaum's Outline Series). McGraw-Hill Companies. p. 58. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-07-008498-8.
  2. Holzner, Steven (December 2005). Physics for Dummies. Wiley, John & Sons, Incorporated. p. 64. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7645-5433-9.
  3. NMJ Woodhouse (2003). Special relativity. London/Berlin: Springer. p. 6. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85233-426-6.
  4. மேல்நிலை -முதலாம் ஆண்டு-தொகுதி 1. தமிழ்நாட்டுப் பாடநுால் கழகம். 2007. p. 68.
  5. Resnick; Halliday; Krane (1992). Physics, Volume 1 (4th ed.). p. 83.