நியமசபா மந்திரம்

ஆள்கூறுகள்: 8°30′24″N 76°56′55″E / 8.5067°N 76.9487°E / 8.5067; 76.9487
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நியமசபா மந்திரம்
നിയമസഭാ മന്ദിരം
கேரள சட்டப்பேரவையின் இடமான நியமசபா மந்திரம்
நியமசபா மந்திரம் is located in கேரளம்
நியமசபா மந்திரம்
நியமசபா மந்திரம் is located in இந்தியா
நியமசபா மந்திரம்
பொதுவான தகவல்கள்
வகைகேரள சட்டமன்ற கட்டடம்
கட்டிடக்கலை பாணிகேரளக் கட்டிடக்கலை
இடம்கேரளம், திருவனந்தபுரம், பாளையம்
நாடுஇந்தியா
ஆள்கூற்று8°30′24″N 76°56′55″E / 8.5067°N 76.9487°E / 8.5067; 76.9487
கட்டுமான ஆரம்பம்1979
நிறைவுற்றது1998
செலவு9 பில்லியன் (US$110 மில்லியன்)
உரிமையாளர்கேரள அரசு
உயரம்200 அடிகள் (61 m)
தொழில்நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை5 + 1 basement
தளப்பரப்பு802,453 சதுர அடிகள் (74,550.3 m2)
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)கேரள பொதுப்பணித் துறை
குடிசார் பொறியாளர்கேரள பொதுப்பணித் துறை
முதன்மை ஒப்பந்தகாரர்கேரள மாநில கட்டுமானக் கழகம்

நியமசபா மந்திரம் (Niyamasabha Mandiram) என்பது திருவனந்தபுரத்தின் பாளையத்தில் அமைந்துள்ள ஒரு அரசு கடடம் ஆகும். இது கேரள சட்டமன்றம் அல்லது நியமசபா அமைந்துள்ள இடமாகும். இந்த வளாகமானது பல சமகால கட்டடக்கலை பாணிகளின் வலுவான தாக்கங்களுடன், பாரம்பரிய கேரளக் கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது. இது பிரமாண்டமான படிக்கட்டுகள், பூங்காக்கள், நீர்நிலைகள் போன்றவற்றுடன் பெரிய சட்டமன்ற மண்டபத்தைக் கொண்ட ஒரு கட்டமைப்பாகும். உயர் பாதுகாப்பு மண்டலத்தில் அமைந்துள்ள இந்த வளாகத்தில் நியமசபா அவைத்தலைவர், அனைத்து சட்ட மன்ற உறுப்பினர்களின் அலுவலகங்கள், மற்றும் சுயாதீன ஆணையங்கள் மற்றும் அமைப்புகளின் அலுவலகங்கள் உள்ளன. இந்த சட்டமன்ற வளாகமானது 22 மே 1998 அன்று இந்தியக் குடியரசுத் தலைவர், கே. ஆர். நாராயணனால் திறந்து வைக்கப்பட்டது. [1]

வரலாறு[தொகு]

கேரள மாநில சட்டமன்றம் அல்லது நியமசபாவின் இரவு தோற்றம்

கேரள மாநிலத்தின் நியமசபா எனப்படும் சட்டமன்றமானது துவக்கத்தில் அதாவது திருவிதாங்கூர் இராச்சியக் காலத்தில் சிறீ மூலம் பிரபல சட்டசபை மற்றும் ஸ்ரீ சித்ரா மாநில கவுன்சிலின் அவைக்கூடங்கள் 1933 டிசம்பர் 12 முதல் அரசு செயலக வளாகத்தில் அமைந்தது. இந்திய விடுதலைக்குப் பிறகு, சட்டமன்ற மண்டபம் புதிதாக உருவாக்கப்பட்ட திருவாங்கூர்-கொச்சி மாநில சட்டமன்றத்தின் இடமாகவும், பின்னர், 1956 ஆம் ஆண்டில் புதியதாக கேரள மாநிலம் உருவான பிறகு அமைந்த சட்டமன்றத்தின் இடமாகவும் அமைந்தது. புதிய கேரள சட்டப்பேரவையில் அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் இருந்ததால், இடப் பற்றாகுறை ஒரு பெரிய தடையாக மாறியது - குறிப்பாக 1970 களில், சட்டமன்ற நடவடிக்கைகளை பார்வையிட கூடுதலாக பொது மக்கள் அனுமதிக்கப்பட்டவுடன் காட்சி மாடத்தில் மேலும் நெருக்கடி ஏற்பட்டது. இதனால் சட்டசமன்றத்துக்காக ஒரு புதிய வளாகத்தை உருவாக்க முடிவு செய்யப்பட்டது. 1979 ஆம் ஆண்டில், அப்போதைய இந்திய குடியரசு தலைவராக இருந்த நீலம் சஞ்சீவ ரெட்டி புதிய வளாகத்திற்கு அடிக்கல் நாட்டினார். [2]

சட்டமன்ற வளாக கடடம் கட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட இடமானது திருவனந்தபுரம் நகரின் மையத்தில் உள்ள பாளையம் என்ற இடத்தில் உள்ள அரசு தோட்டமாகும், இது ஒரு காலத்தில் திருவிதாங்கூர் இராணுவத்தின் நாயர் படைப்பிரிவின் தலைமையகமாக இருந்தது. பழைய இராணுவ தலைமையகம் சட்டமன்ற அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது.

உட்புறம்[தொகு]

நியமசபா மந்திரல் தரை தளம் மற்றும் அலுவல்பூர்வ கார்களை நிறுத்துவதற்கான ஒரு அடித்தளம் உட்பட மொத்தம் 5 அடுக்குகள் உள்ளன. முதல் மாடியில் உள்ள வராந்தாவுக்கு செல்வதற்கு, 51 படிக்கட்டுகள் உள்ளன இவை 200 அடிகள் (61 m) அகலம் கொண்டவை.

முழு கட்டட அமைப்பும் பெரிய சதுரவடிவில் உள்ளது. இதில் நான்கு முகப்புகள் உள்ளன, ஒவ்வொறு முகப்பையும் 40 தூண்கள் தாங்கியுள்ளன. முதன்மை நுழைவாயில் மேற்கு நோக்கி உள்ளது. மேற்குப் பகுதியில் ஒரு பெரிய வட்ட செப்புத் தகட்டில் கேரள அரசு சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. தேக்கு மற்றும் நூக்கமரத்தால் இழைத்து அழகூட்டபட்ட வராந்தா வழியாக சட்டமன்ற மைய மண்டபத்திற்கு செல்லும் வழி உள்ளது. மைய மண்டபம் 95 அடி உயரத்துடன் 8 மாடங்களுடன் உள்ளன, இதில் மொத்தம் 800 பேர் அமரலாம். மைய மண்டபத்தில் 140 இருக்கைகள் அரைவட்டட பாணியில் அமைக்கப்பட்டுள்ளன. சபாநாயகருக்கு ஒரு பெரிய மேடை மற்றும் நிர்வாக ஊழியர்களுக்கான 3 நடுவர் மேசைகள் உள்ளன. பின்னணி சுவரில் மகாத்மா காந்தியின் பெரிய உருவப்படம் உள்ளது. 140 இருக்கைகள் ஒவ்வொன்றிற்கும் ஒலிபெருக்கி மற்றும் மின்னணு வாக்குப்பதிவு முறைகள் அமைக்கபட்டுள்ளன.

நியமசபா மந்திரத்தில் மைய சட்டமன்ற மண்டபத்தைத் தவிர பின்வரும் அலுவலகங்கள் உள்ளன:


  • சபாநாயகர் அறை
  • முதல்வரின் அலுவலகம்
  • எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம்
  • தலைமை கண்காணிப்பாளரின் அலுவலகம்
  • கண்காணிப்பு மற்றும் காபாளரின் தலைமை அலுவலகம்
  • ஊடக அறை
  • பத்திரிகை மற்றும் தகவல் மையம்
  • மாநாட்டு அறை

இது தவிர, ஒரு பெரிய உணவகம் மற்றும் சமையலறை வசதி, தரை தளத்தில் அமைந்துள்ளது. அடித்தளத்தில் ஒரு பெரிய வாகன தரிப்பிடம் உள்ளது, இதில் 400 மகிழுந்துகளை நிறுத்தலாம்.

வெளிப்புறம்[தொகு]

இரண்டு பெரிய பூங்காக்கள் உள்ளன; தென்பறப் பூங்காவில் பல பிரபல தலைவர்கள் மற்றும் கடந்த கால மூத்த சட்டமன்ற உறுப்பினர்களின் நினைவுச் சின்னங்கள் உள்ளன. வடக்கு பூங்காவில் பல நீர்சார் அம்சங்கள் உள்ளன.

சிலைகள்[தொகு]

நியமசபா வளாகத்தின் பக்கத் தோற்றம்

நிர்வாக அலுவலகம்[தொகு]

230,000 sq ft (21,000 m2) பரப்பளவு கொண்ட நிர்வாக அலுவலக வளாகத்தில் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் தனித்தனியாக அலுவலகங்கள் உள்ளன. சட்டமன்ற ஆணையங்கள் போன்ற சில அலுவலகளும் கேரள லோகாயுக்தாவின் அலுவலகமும் இந்த நிர்வாக அலுவலக வளாகத்தில் அமைந்துள்ளது.

சட்டமன்ற நூலகம்[தொகு]

இந்தப் பிரிவானது 120 ஆண்டு பழமையான கேரள சட்டமன்ற நூலகத்தின் தாயகமாகும், இப்போது 100,000 க்கும் மேற்பட்ட தலைப்புகள் மற்றும் அரசியல் குறிப்பு புத்தகங்கள், பல்வேறு சட்டங்கள் மற்றும் செயல்களின் அசல் பிரதிகள் மற்றும் பிற சட்ட குறிப்புகள், எம்.எல்.ஏக்கள் மற்றும் ஆராய்ச்சி அறிஞர்களின் குறிப்புக்காக உள்ளது. இங்கு சட்டமன்ற செயலகத்தின் முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் அனுமதி வழங்கப்படுகிறது. 1888 முதல் சபையின் முழு நடவடிக்கை குறிப்புகளையும் நூலகம் பாதுகாக்கிறது மேலும் இவற்றின் எண்ணிம பதிப்புகள் மற்றும் நியமசபா 1957 முதல் நிறைவேற்றிய அனைத்து மசோதா உரையையும் இது தன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. [3] மேலும், சபையில் இதுவரை தாக்கல் செய்யப்பட்ட அனைத்து சட்டமன்ற குழு அறிக்கைகள் மற்றும் விசாரணை ஆணைய அறிக்கைகளையும் எண்ணிம மயமாக்கி அவற்றை இயங்கலையில் கிடைக்கச் செய்யும் திட்டங்கள் உள்ளன.


சட்டமன்ற அருங்காட்சியகம்[தொகு]

சட்டமன்றம் குறித்து பொதுமக்கள் அறிவதை ஊக்குவிப்பதற்காக நியமசபா இரண்டு அருங்காட்சியகங்களை பராமரித்துவருகிது. நியமசபா வளாகத்திற்குள் அமைந்துள்ள பழைய திருவிதாங்கூர் இராணுவத் தலைமையக கட்டடத்தில், கேரள சட்டமன்றத்தின் வளர்ச்சியைக் காட்டும் பல்வேறு ஒளிப்படங்கள், கலைப்பொருட்கள் போன்ற பிற பொருள்களைக் காணக்கூடிய ஒரு முழுமையான சட்டமன்ற அருங்காட்சியகம் உருவாக்கபட்டுள்ளது. இந்த கட்டிடம் நியமசபா வளாகத்திற்குள் அமைந்துள்ளது, ஆனால் இது நியமசபா மந்திரத்திலிருந்து தனித்து உள்ளது. செயலகத்திற்குள் உள்ள பழைய சட்டசபை மண்டபம் சட்டமன்ற அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது, அங்கு ஒளிப்பட காட்சியகத்துடன் சட்டமன்ற செயல்முறை குறித்து மாணவர்களுக்கு பயிற்சியளிப்பதற்காக மாதிரி கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

குறிப்புகள்[தொகு]

  1. "Rediff On The NeT: Kerala House bids adieu to home of old". Rediff.com. 23 ஏப்பிரல் 1998. பார்க்கப்பட்ட நாள் 20 அக்டோபர் 2013.
  2. Welcome to Trivandrum District (22 அக்டோபர் 2010). "Welcome to Trivandrum District: Palayam". Trivandrumdistrict.blogspot.com. பார்க்கப்பட்ட நாள் 20 அக்டோபர் 2013.
  3. "Kerala Legislative Assembly". Klaproceedings.niyamasabha.org. பார்க்கப்பட்ட நாள் 20 அக்டோபர் 2013.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நியமசபா_மந்திரம்&oldid=3500412" இலிருந்து மீள்விக்கப்பட்டது