நிக்கோ பிரொசுமானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிக்கோ பிரொசுமானி
Niko Pirosmani
பிறப்புமே 5, 1862
சியோர்சியா
தொழில்ஓவியர்
தேசியம்சியோர்சியா

நிக்கோ பிரொசுமானி (Niko Pirosmani, Georgian: ნიკო ფიროსმანი, இயற்பெயர்: Nikolos Pirosmanaschwili, மே 5, 1862 - ஏப்ரல் 9, 1918) ஒரு சியோர்சிய ஓவியக் கலைஞர் ஆவார். இவர் இறந்த பின்னரே இவரது கலைப்படைப்புகளுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்தது.

வாழ்க்கை[தொகு]

நிக்கோ பிரொசுமானி கிழக்கு சியோர்சியாவில், மிர்சானியில்(Mirzaani) ஒரு நடுத்தரவர்க்க, விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். இவர் அஸ்லான் பிரொசுமன்சுவிலி (Aslan Pirosmanashvili) ரெக்லே, ரோக்லிகிசுவிலி (Tekle Toklikishvili) தம்பதிகளின் மூன்று குழந்தைகளில் மூன்றாமவர். இவர்களுக்குச் சொந்தமாக ஒரு சிறிய திராட்சைத் தோட்டமும், சில பசுக்களும், எருதுகளும் இருந்தன. இவரது தந்தை1870 இல் இறந்து விட்டார்.[1] அதன் பின் இவர் இவரது சகோதரியுடன் ரிபிலிசி (Tbilisi) என்ற இடத்தில் வாழ்ந்தார். இரண்டு வருடங்களில் 1872 இல் இவரது சகோதரிகளான மரியமும், பெப்பேயும் இவரைக் கைவிட்ட நிலையில் இவர் அநாதை ஆனார்.

தொழில்[தொகு]

இவர் 1872 இல் ரிபிலிசி (Tbilisi) புகையிரதநிலையத்திற்கு அண்மையில் ஒரு சிறிய குடியிருப்பில் வாழ்ந்து கொண்டு, ஒரு பணக்காரக் குடும்பத்தில் பணியாளாக வேலை செய்தார். அப்போது சியோர்சிய மொழியையும், உரூசிய மொழியையும் கற்றதோடு தன்பாட்டில் தானே ஓவியமும் வரையக் கற்றுக் கொண்டார். 1876 இல் மீண்டும் தனது சொந்த ஊரான மிர்சானிக்குத் திரும்பி விட்டார். 1882 இல் சுயமாக ஒரு ஓவியப்பட்டறையைத் திறந்தார். 1890 இல் ஒரு புகையிரத நடத்துனராக ஆக வேலை செய்தார். மூன்று வருடங்கள் கழித்து 1893 இல் இன்னொருவருடன் இணைந்து ஒரு பால்பண்ணையை ஆரம்பித்தார்.

வீடற்றவர்[தொகு]

1901 இல் நிக்கோ பிரொசுமானி பால்பண்ணையில் இருந்தும் வெளியேறி விட்டார். அதன் பின்னர் இவர் மிகவும் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டு வீடற்றவர் ஆனார். தனது வாழ்க்கைத் தேவைகளுக்கு வீடுகளுக்குப் பெயின்ற் அடித்தும், கடைகளுக்கு பலகைகளில் வரைந்தும், வெவ்வேறு சிறிய சிறிய வேலைகள் செய்தும் சம்பாதித்தார். தனது ஓவியங்களை பண்டமாற்றாகக் கொடுத்தும் உணவு, குடிவகை, இரவுகளில் தங்குதற்கான சூடான இடங்கள் போன்றவற்றைப் பெற்றுக் கொண்டார்.

வரலாறு[தொகு]

இவரைப் பற்றி யாரும் பெரிதாக அறிந்திருக்கவில்லை. முதன் முதலாக 1913 இலேயே சியோர்சிய செய்திப் பத்திரிகையான தெமி (Temi) இல் இவரைப் பற்றிய ஒரு கட்டுரை வெளியானது. இவரை உலகுக்கு அறியச் செய்தவர் டிற்றோ சுவாட்நட்சே (Dito Schewardnadze). 1916 இல் இவர் சியோர்சியாவுக்குச் ரிபிலிசுக்குச் சென்ற போது புகையிரதநிலையங்களிலும், உணவகங்களிலும், கடைகளிலும் நிக்கோ பிரொசுமானியின் ஓவியங்களை கண்டார். அதிலிருந்து அவருக்கு அனைத்து சியோர்சியக் கலைஞர்களின் படைப்புகளையும் காட்சிப் படுத்தும் எண்ணமும், கலைஞர்களைப் பட்டியலிடும் எண்ணமும் வந்தது. அவரது பட்டியலில் நிக்கோ பிரொசுமானியும் `தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கலைஞர்´ என்ற பட்டத்துடன் இணைக்கப்பட்டார்.[2]

ஓவியங்கள்[தொகு]

'ஒரு விவசாயி எருதுடன், நிக்கோ பிரொசுமானியின் ஓவியம் (1916)

நிக்கோ பிரொசுமானியின் ஓவியங்கள் பெரும்பாலும் கிராமியச் சூழலை மையமாகக் கொண்டிருந்தன. பண்ணைகளிலும், உணவகங்களிலும் வேலை செய்பவர்கள், விலங்குகள் போன்றவற்றை வரைந்திருந்தார்.

காதல்[தொகு]

நடிகை மார்கரிட்டா, நிக்கோ பிரொசுமானியின் ஓவியம், 1909

நிக்கோ பிரொசுமானியின் பல ஓவியங்களில் மார்கரிட்டா என்ற பிரெஞ்சு நடிகை இடம் பிடித்திருக்கிறார். மார்கரிட்டா 1905 இல் சியோர்சியா வந்த போது நிக்கோவைச் சந்தித்திருக்கிறார். நிக்கோவுக்கு மார்கரிட்டா மீது தீராத காதல் இருந்ததாக அறியப்படுகிறது. இவரது காதலை ஒரு கதையாக சியோர்சிய எழுத்தாளர் சல்வா டடியானி (Schalva Dadiani) எழுதியுள்ளார்.

இறப்பு[தொகு]

இவர் சரியான ஊட்டச்சத்தின்றியும், கல்லீரல் செயலிழிப்பினாலும் இறந்தார். இறப்பதற்கு முன் மூன்று நாட்கள் மிகவும் சுகவீனமுற்ற நிலையில், உதவிக்கு யாருமின்றி நிலக்கீழ் அறையில் நினைவற்ற நிலையில் இருந்தார். இவரது அயலவர் இவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றும் பலனின்றி அங்கு இறந்து விட்டார்.[3] இவரது உடல் சென்ற் நீனோ(St.Nino) சுடலையில் அடக்கம் செய்யப்பட்டது. ஆனால் அச்சுடலையில் சரியாக எவ்விடத்தில் அடக்கம் செய்யப்பட்டார் என்பது எங்கும் பதியப் படவில்லை.

நூல்களில்[தொகு]

  • அல்பிரட் நுய்ற்ச்மன் (Alfred Nützmann) : நிக்கோ பிரொசுமானி. Henschelverlag, பேர்லின் 1975
  • எறாஸ்ற் குஸ்நெச்சோவ் (Erast Kusnezow) : நிக்கோ பிரொசுமானி: 1862-1918. Aurora-Kunstverlag, லெனின் கிராட்1983
  • பைஸ் குறிக்கர் (Bice Curiger) Zeichen und Wunder. நிக்கோ பிரொசுமானி (1862-1918) und die Kunst der Gegenwart. 1995, ISBN 3-89322-710-5
  • கிறிஸ்ரினே பவ்வ்வர்மைஸ்ரர் (Christiane Bauermeister) : நிக்கோ பிரொசுமானி: சியோர்சிய ஓவியர் 1862-1918. ஆர்கோன் (Argon), பேர்லின் 1988, ISBN 3-87024-140-3
  • 'பிரொசுமானி 1862 –1818. Musée des Beaux-Arts de Nantes, Edition MeMo, Nantes 1999, ISBN 2-910391-19-1

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிக்கோ_பிரொசுமானி&oldid=3218436" இலிருந்து மீள்விக்கப்பட்டது