நாளிதழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நாளேடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நாளிதழ் வாசிப்பு

நாளிதழ் என்பது ஒவ்வொரு நாளும் அச்சிட்டு வெளியிடப்படும் செய்தி இதழ் ஆகும். தற்காலத்தில் செய்தியல்லாத பிறவற்றையும் முதன்மை நோக்கமாகக் கொண்டு நாளிதழ்கள் வெளியிடப்படுகின்றன ஆயினும், மிகப் பெரும்பாலான நாளிதழ்கள் செய்தி இதழ்களாகவே உள்ளன. எனவே இதை செய்தித்தாள்கள் (News Papers) என்றும், நாள்தோறும் வெளியிடப்படுவதால் தினசரிகள் (Dailies) என்றும் அழைப்பதுண்டு.

வரையறை[தொகு]

பொதுவாக ஒரு பத்திரிகையானது நான்கு அடிப்படை அம்சங்களைக் கொண்டுள்ளது.[1][2] அவையாவன,

 • அதனுடைய உள்ளடக்கங்கள் மக்கள் ஏற்கும் வகையில் அமைந்திருத்தல்.
 • ஒரு குறித்த கால இடைவேளையில் வெளிவருதல்.
 • உள்ளடக்கப்பட்டிருக்கும் தகவல்கள் புதுப்பிக்கப்பட்ட நிலையில் இருக்க வேண்டும்.
 • பல்வேறு தலைப்புக்களை உள்ளடக்கியதாகச் செய்திகள் வெளிவருதல்.

காலமுறைப் பகுப்பு[தொகு]

அச்சில் வெளிவரும் நாளிதழ்கள் காலமுறையில் இரண்டாகப் பகுக்கப்படுகின்றன. காலையில் வெளியிடப்படும் நாளிதழ்கள் "காலை நாளிதழ்" என்றும் மாலையில் வெளியிடப்படும் நாளிதழ்கள் "மாலை நாளிதழ்" என்றும் அழைக்கப்படுகின்றன.

உள்ளடக்கம்[தொகு]

செய்தித்தாள் படிக்கும் ஒருவரின் சிலை
 • நாளிதழ்கள் பொதுவாக அரசியல், வணிகம், குற்றம், பொழுதுபோக்கு, விளையாட்டு முதலிய பல துறைகள் சார்ந்த செய்திகளைத் தாங்கி வருகின்றன. தவிர நாளிதழ்கள் செய்திகள் அல்லாத வேறு பல அம்சங்களையும் கொண்டிருப்பது உண்டு. முக்கியமாக, ஆசிரியத் தலையங்கம், வாசகர் கடிதம், கேலிச் சித்திரங்கள், கதைகள், சோதிடம் என்பவற்றைக் குறிப்பிடலாம்.
 • மேற்குறிப்பிட்டவை மக்களுக்குத் தகவல்களையும், பொழுதுபோக்கையும் வழங்கக்கூடிய அம்சங்களாகும். இவற்றுக்காகவே மக்கள் நாளேடுகளைப் பணம் கொடுத்து வாங்கி வாசிக்கிறார்கள். இதனால் இவ்வாறு மக்கள் விரும்பும் அம்சங்களை வழங்குவதற்காக நாளிதழ்களை வெளியிடும் நிறுவனங்கள் பெருமளவு பணத்தைச் செலவு செய்வதுண்டு. இவை தவிர நாளிதழ்களில் இடம்பெறும் சில அம்சங்களை வெளியிடுவதற்காக வெளியீட்டு நிறுவனங்கள் பணம் பெற்றுக் கொள்வதும் உண்டு. இவ்வாறான அம்சங்களில் முக்கியமானவை விளம்பரங்கள் ஆகும். இவற்றுள், உற்பத்திப் பொருட்களை மக்களுக்கு அறிமுகப்படுத்த விழையும் வணிக விளம்பரங்கள், வேலைக்கு ஆட்களைத் தேடும் விளம்பரங்கள், பொது நிகழ்ச்சிகள் தொடர்பான விளம்பரங்கள், திருமண அறிவித்தல்கள், இறப்பு அறிவித்தல்கள் என்பன அடங்கும். அதிக விற்பனையைக் கொண்ட நாளிதழ்கள் விளம்பரங்கள் மூலம் நல்ல வருமானம் பெறுகின்றன.
 • பொதுவான நாளேடுகள் பல்வேறு வகையான வாசகர்களைக் கவர்வதற்காகத் தனியான அம்சங்களையும் வெளியிடுகின்றன. எடுத்துக்காட்டாக, பெண்களுக்கான பகுதி, மாணவர்களுக்கான பகுதி, சினிமாப் பகுதி, வேளாண்மை, கலை, விளையாட்டுப் பகுதி போன்றவற்றைக் குறிப்பிடலாம். சில நாளிதழ்கள் குறிப்பிட்ட கிழமைகளில் மட்டும் இலவசமாக தனிஇதழ் ஒன்றையும் நாளிதழுடன் கூடுதலாக அளிக்கின்றன.
 • நாளிதழ்கள் வாசித்தபின் அன்றே எறிந்துவிடக் கூடியவை என்பதால், நாளிதழ்களைப் பதிப்பிக்கும் தாள்கள் உயர்ந்த தரமுள்ளைவையாக இருக்கவேண்டியதில்லை. இதனால் குறைந்த தரம் கொண்ட தாள்களிலேயே நாளிதழ்கள் அச்சடிக்கப்படுகின்றன. இத் தாள் பத்திரிகைத் தாள் எனப்படுகின்றது.

நிர்வாக அமைப்பு[தொகு]

Street Scene - Salta - Argentina.jpg

சிறு நாளிதழ்கள்[தொகு]

 • சிறிய நாளிதழ்களில் பொதுவாக இரண்டு பிரிவுகள் உள்ளன. அவை
 1. அலுவலகம்
 2. பணிப்பிரிவு

நடுத்தர நாளிதழ்கள்[தொகு]

 • நடுத்தரமான நாளிதழ்களில் மூன்று முக்கியத் துறைகள் செயல்படுகின்றன.அவை
 1. வணிகப் பகுதி
 2. எந்திரப் பகுதி
 3. ஆசிரியர் பகுதி

-இவைகளை முன் பணியறை, பின் பணியறை, செய்தி அறை என்றும் அழைப்பதுண்டு.

பெரிய நாளிதழ்கள்[தொகு]

 • நன்கு வளர்ச்சியடைந்த நாளிதழ்களில் ஆறு பிரிவுகள் உள்ளன. அவை
 1. ஆசிரியப் பிரிவு
 2. வணிகப் பிரிவு
 3. எந்திரப் பிரிவு
 4. வளர்ச்சிப் பிரிவு
 5. புள்ளி விபரப் பிரிவு
 6. நிர்வாகப் பிரிவு

ஆசிரியப் பிரிவு[தொகு]

ஆசிரியப் பிரிவு கீழ்காணும் ஐந்து பகுதிகளைக் கொண்டுள்ளது.

 1. செய்தி அறை
 2. படி எடுக்கும் பகுதி
 3. தலையங்கப் பகுதி
 4. படப் பகுதி
 5. நூலகம்

வணிகப் பிரிவு[தொகு]

வணிகப் பிரிவு கீழ்காணும் மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது.

 1. விளம்பரப் பகுதி
 2. விற்பனைப் பகுதி
 3. கணக்குப் பகுதி

எந்திரப் பிரிவு[தொகு]

எந்திரப் பிரிவு கீழ்காணும் ஆறு பகுதிகளைக் கொண்டுள்ளது.

 1. அச்சுக் கோர்க்கும் அறை
 2. அமைப்புப் பகுதி
 3. படங்களைச் செதுக்கும் பகுதி
 4. திருத்தும் பகுதி
 5. அச்சடிக்கும் பகுதி

(தற்போது கணினிமயமாகி விட்டதால் முதல் மூன்று பகுதிகளும் ஒரே பகுதியாக மாற்றம் பெற்று விட்டன. நான்காவது பகுதி அச்சிற்கு முன்பான அச்சுப்படி தயாரிப்பு பகுதியாக மாற்றமாகி விட்டது.)

வளர்ச்சிப் பிரிவு[தொகு]

நாளிதழ்களின் வளர்ச்சியைக் கவனிப்பதற்காக இந்தப் பகுதி செயல்படுகிறது. இவை விளம்பர முறையைப் பின்பற்றி நாளிதழின் வருவாயைப் பெருக்கிக் கொள்ளவும், நாளிதழ்களில் சிறப்புப் பகுதிகளை வெளியிட்டு வாசகர்களைக் கவரவும் பல திட்டங்களைச் செயல்படுத்துகிறது.

புள்ளி விபரப் பிரிவு[தொகு]

நாளிதழ் குறித்த அனைத்து விபரங்களையும் சேகரித்து வைத்து அதன் வளர்ச்சிக்கு துணை செய்கிறது. வெளிநாடுகளில் இப்படி புள்ளி விபரங்களைச் சேகரித்து வகைப்படுத்தி தொகுத்து வைப்பதற்காகத் தனிப்பகுதியை வைத்துள்ளனர். (தற்போது கணினி வழியாக புள்ளி விபரங்கள் சேகரித்துத் தொகுத்து வகைப்படுத்தி வைக்கின்றனர்.)

நிர்வாகப் பிரிவு[தொகு]

நாளிதழின் அனைத்து அமைப்புகளையும் ஒருங்கிணைத்து இப்பிரிவு செயல்படுகிறது. இப்பிரிவை நாளிதழின் உரிமையாளர் தலைமை ஏற்று நடத்துகிறார். இப்பிரிவில் பல நிர்வாக அதிகாரிகள் இருப்பார்கள். நாளிதழின் கொள்கையின்படி அனைத்துத் துறையினரும் செயல்படுகிறதா என இப்பிரிவில் கண்காணிக்கப்படுகிறது.

மின் நாளிதழ்கள்[தொகு]

1974ஆம் ஆண்டிலிருந்து மின் நாளிதழ்களுக்கான முன் மாதிரி நுட்பங்கள் வளர்ந்தது. இலினாய்சு பல்கலைக்கழகத்தில் பிளேட்டோ முறைமையை பயன்படுத்தி இணையத்தில் மட்டும் பயன்படுத்துவதற்கு ஏதுவாக நாளிதழ்கள் தயாரிக்கப்பட்டன. ஆனால் கி. பி. 1987ஆம் ஆண்டில் பிரேசில் நாட்டு நாளிதழே மக்கள் சார் மின் நாளிதழை இணையத்தில் வெளியிட்டது. மின் நாளிதழ்கள் நடத்தும் நிறுவனங்கள் சில தினசரி நாளிதழ்களையும் சேர்த்தே வெளியிடுகிறது. சில நிறுவனங்கள் மின் நாளிதழ்களை மட்டுமே வெளியிடுகின்றன.

ஊடகவியல்[தொகு]

நாளிதழ்கள் ஒரு ஊடகமாக ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து நாளிதள்களை உருவாக்குவதில் ஈடுபடும் தொழிலை ஊடகவியல் என அழைத்தனர். 19 ஆம் நூற்றாண்டில் மஞ்சள் பத்திரிகை யுகத்தில் அமெரிக்காவில் வெளியான பல நாளிதழ்கள் மக்களை கோபமூட்டும், கிளர்ச்சியூடும் செய்திகளைக் கொண்டு வெளிவந்தன.

நாளிதழ்கள் வெளிவரும் இடங்கள்[தொகு]

 • வீரகேசரி-இலங்கை
 • உதயன்-இலங்கை
 • தினக்குரல்-இலங்கை
 • தினமுரசு-இலங்கை
 • தினகரன்-இந்தியா
 • தமிழ் முரசு-சிங்கபூர்

மேற்கோள்கள்[தொகு]

 1. Werner Faulstich: "Grundwissen Medien", 4th ed.,ya UTB, 2000, ISBN 978-3-8252-8169-4, chapter 4
 2. Margarete Rehm. "Margarete Rehm: Information und Kommunikaegenwart. Das 17. Jh". Ib.hu-berlin.de. பார்த்த நாள் 2012-02-21.

வெளி இணைப்புக்கள்[தொகு]

நாளிதழ் காப்பகங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாளிதழ்&oldid=2137292" இருந்து மீள்விக்கப்பட்டது