உள்ளடக்கத்துக்குச் செல்

நால்வர் நான்மணி மாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நால்வர் நான்மணி மாலை என்பது சிவப்பிரகாசரால் இயற்றறப்பட்டது.[1] இவர் 'சிவ அநுபூதி செல்வர்', 'கற்பனை களஞ்சியம்' 'துறைமங்கலம் சிவப்பிரகாசர்' என்றும் அழைக்கப்படுகிறார்.

கருத்துரை

[தொகு]

இப்பாடல்கள் வெண்பா, விருத்தப்பா, கலித்துறை, அகவல் பாக்களால் இயற்றப்பட்டுள்ளது.[2]

ஆசிாியர்

[தொகு]

சிவப்பிரகாசர் 17 ஆம் நுாற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர், துறவி.[3][4] இவர் குமாரசுவாமி தேசிகாின் மகன். வெள்ளையார், கருணை பிரகாசர் மற்றும் ஞானாம்பிகை அம்மாளுக்குச் சகோதரர்.

பாடல் வரிகள்

[தொகு]

நால்வர் நான்மணி மாலை (துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்):

காப்பு:-

எப்போ தகத்து நினைவார்க் கிடரில்லை

கைப்போ தகத்தின் கழல்.

1. சம்பந்தர் (வெண்பா):

பூவால் மலிமணிநீர்ப் பொய்கைக் கரையினியற்

பாவால் மொழிஞானப் பாலுண்டு - நாவால்

மறித்தெஞ் செவிஅமுதாய் வார்த்தபிரான் தண்டை

வெறித்தண் கமலமே வீடு.

2. அப்பர் (கலித்துறை):

வீட்டிற்குவாயில் எனுந்தொடை சாத்துசொல் வேந்தபோது

ஆட்டிற்கு வல்லன் ஒருவற்கு ஞான அமுதுதவி

நாட்டிற் கிலாத குடற்நோய் நினைக்குமுன் நல்கினுமென்

பாட்டிற்கு நீயும் அவனுமொப் பீரப் படியினுமே .

3. சுந்தரர் (விருத்தம்):

படியிலா நின்பாட்டில் ஆரூரா

நனிவிருப்பன் பரமன் என்பது

அடியனேன் அறிந்தனன்வான் தொழும்ஈசன்

நினைத்தடுத்தாட் கொண்டு மன்றித்

தொடியுலா மென்கைமட மாந்தர்பால்

நினக்காகத் தூது சென்றும்

மிடியிலா மனைகள்தொறும் இரந்திட்டும்

உழன்றமையால் விளங்கு மாறே.

4. மாணிக்க வாசகர் (அகவல்):

விளங்கிழை பகிர்ந்த மெய்யுடை முக்கட்

காரணன் உரையெனும் ஆரண மொழியோ

ஆதிசீர் பரவும் வாதவூர் அண்ணல்

மலர்வாய்ப் பிறந்த வாசகத் தேனோ

யாதோ சிறந்த தென்குவீ ராயின்

வேதம் ஓதின் விழிநீர்ப் பெருக்கி

நெஞ்சநெக் குருகி நிற்பவர்க் காண்கிலேம்

திருவா சகமிங் கொருகால் ஓதிற்

கருங்கல் மனமுங் கரைந்துகக் கண்கள்

தொடுமணற் கேணியிற் சுரந்துநீர்ப் பாய

மெய்மயிர் பொடிப்ப விதிர்வதிர்ப் பெய்தி

அன்பர் ஆகுநர் அன்றி

மன்பதை உலகில் மற்றையர் இலரே.

5. சம்பந்தர் (வெண்பா):

இலைபடர்ந்த பொய்கை இடத்தழுதல் கண்டு

முலைசுரந்த அன்னையோ முன்நின் - நிலைவிளம்பக்

கொங்கை சுரந்தஅருட் கோமகளோ சம்பந்தா

இங்குயர்ந்தா ளார்சொல் லெனக்கு.

6. அப்பர் (கலித்துறை):

எனக்கன்பு நின்பொருட் டெய்தாத தென்கொல்வெள் ளேறுடையான்

தனக்கன்பு செய்திருத் தாண்டக வேந்தஇத் தாரணியில்

நினக்கன்பு செய்கின்ற அப்பூதி யைச்சிவ நேசமுறும்

இனர்க்கன்பு செய்நம்பி ஆரூரன் ஏத்தும் இயில்பறிந்தே

7. சுந்தரர் (விருத்தம்):

அறிந்து செல்வம் உடையானாம்

அளகைப் பதியாற் தோழமைகொண்டு

உறழ்ந்த கல்வி உடையானும்

ஓருவன் வேண்டுமென இருந்து

துறந்த முனிவர் தொழும்பரவை

துணைவா நினைத்தோ ழமைகெண்டான்

சிறந்த அறிவு வடிவமாய்த்

திகழும் நுதற்கட் பெருமானே.

8. மாணிக்க வாசகர் (அகவல்):

பெருந்துறை புகுந்து பேரின்ப வெள்ளம்

மூழ்கிய புனிதன் மொழிந்தவா சகமே

வாசகம் அதற்கு வாச்சியம்

தூசகல் அல்குல் வேய்த் தோளிடத் தவனே.

9. சம்பந்தர் (வெண்பா):

இடுகாட்டுள் மாதர் எலும்பிற் புரள்மால்

சுடுகாட்டுள் ஆடுவார் சுட்டின் - ஒடுகாட்டுஞ்

சம்பந்தா என்புநின்பால் தந்தாக்கிக் கொண்டிலன்என்

கும்பந்தாம் என்னுமுலைக் கொம்பு.

10. அப்பர் (கலித்துறை):

கொள்ளைக் கதிர்முத்தின் பந்தருஞ் சின்னமுங் கொள்ளுமொரு

பிள்ளைக் கதுதகும் நாவர சாய பெருந்தகையோய்

கள்ளைக் குவளை உமிழ்வீ ழியிற்படிக் காசொன்றுநீ

வள்ளைக் குழைஉமை பங்காளர் கையிலென் வாங்கினையே.

11. சுந்தரர் (விருத்தம்):

வாங்குசிலை புரையும்உடல் எனுங்குளத்தில் மூல

மலமெனுமோர் வெங்கரவின் பகுவாயில்நின்றுந்

தீங்கிலுயிர் எனும்பவனக் குலமகனை ஆதி

திரோதாயி என்னுமொரு வெந்திறற் கூற்றுவனால்

ஓங்குநா தாந்தமெனப் பெயரியஅக் கரையில்

உமிழ்வித்துச் சிவமெனுமோர் தந்தையொடுங் கூட்டாய்

கோங்கமுகை கவற்றும்இள முலைப்பரவை மகிழக்

புண்டையூர் நென்மலைமுற் கொண்டஅருட் கடலே.

12. மாணிக்க வாசகர் (அகவல்):

கடல்நிற வண்ணன் கண்ணொன் றிடந்து

மலைச்சிலம் பரற்றும் மலரடிக் கணியப்

பரிதி கொடுத்த சுருதிநா யகற்கு

முடிவிளக் கெரித்தும் கடிமலர்க் கோதைச்

சுரிகுழற் கருங்கண் துணைவியை அளித்தும்

அருமகள் நறும்பூங் கருமயிர் உதவியும்

நென்முளை வாரி இன்னமு தருத்தியும்

கோவண நேர்தனை நிறுத்துக் கொடுத்தும்

அகப்படு மணிமீன் அரற்கென விடுத்தும்

பூட்டி அரிவாள் ஊட்டி அரிந்தும்

தலையுடை ஒலிக்குஞ் சிலையிடை மோதியும்

மொய்ம்மலர்க் கோதை கைம்மலர் துணித்தும்

தந்தையை தடிந்தும் மைந்தனைக் கொன்றும்

குற்றஞ் செய்த சுற்றங் களைந்தும்

பூக்கொளு மாதர் மூக்கினை அரிந்தும்

இளமுலை மாதர் வளமை துறந்தும்

பண்டைநாள் ஒருசிலர் தொண்டராயினர்

செங்கண்மால் தடக்கையில் சங்கம் நாண

முட்டாள் தாமரை முறுக்கவிழ் மலர்மேல்

வலம்புரி கிடக்கும் வாதவூர் அன்ப

பாடும் பணிநீ கூடும் பொருட்டு

மதுரைமா நகரிற் குதிரை மாறியும்

விண்புகழ் முடிமிசை மண்பொறை சுமந்தும்

நீற்றெழில் மேனியில் மாற்றடி பட்டும்

நின்னைத் தொண்டன் என்னக் கொண்டனன்

இருக்கும் அடுக்கல் அரக்கன் எடுப்ப

முலைபொர வரைபெரு மொய்ம்பின்

மலைமகள் தழுவ மனமகிழ் வோனே.

13. சம்பந்தர் (வெண்பா):

மகிழ்ச்சி மிகஉண்டு போலுமெதிர் வந்து

புகழ்ச்சியொடு நீபாடும் போது - நெகிழ்ச்சிமலர்ச்

சந்தையினும் வண்டிரையுந் தண்புகலிச் சம்பந்தா

தந்தையினும் பால் கொடுத்த தாய்க்கு.

14. அப்பர் (கலித்துறை):

தாயிலி யாகுஞ் சிவபெரு மான்தனைத் தானெனுமோர்

கோயிலி னாரறி வாகிய நாமமுன் கொண்டிருந்த

வாயிலின் ஆணவ மாகுங் கபாடமு மன்திறந்து

நோயிலி ஆகிய சொல்லிறை காட்டுவன் நோக்குதற்கே.

15. சுந்தரர் (விருத்தம்):

நோக்குறு நுதலோன் நின்னிடை விருப்பால்

நூற்பக அன்னநுண் மருங்குல்

வார்குவி முலைமென் மகளிர்தம் புலவி

மாற்றுவான் சென்றனன் என்றால்

கோக்கலிக்காமன் வயிற்றிடைக் குத்திக்

கொண்டதே துக்குநீ புகலாய்

காக்கரு மதலை விழுங்கிய முதலை

கான்றிடத் தோன்றுநா வலனே.

16 மாணிக்க வாசகர் (அகவல்):

வலமழு உயரிய நலமலி கங்கை

நதிதலை சேர்ந்த நற்கரு ணைக்கடல்

முகந்துல குவப்ப உகந்தமா ணிக்க

வாசகன் எனுமொருமாமழை பொழிந்த

திருவா சகமெனும் பெருநீர் ஒழுகி

ஓதுவார் மனமெனும் ஒண்குளம் புகுந்து

நாவெனு மதகில் நடந்து கேட்போர்

செவியெனு மடையின் செவ்விதின் செல்லா

உளமெனு நிலம்புக ஊன்றிய அன்பாம்

வித்திற் சிவமெனு மென்முளை தோன்றி

வளர்ந்து கருணை மலர்ந்து

விளங்குறு முத்தி மெய்ப்பயன் தருமே.

17. சம்பந்தர் (வெண்பா):

பயனாகு நல்லாண் பனைக்கு விடத்திற்கும்

மயிலாகு நோய்க்கு மருந்தாம் - உயிராகுஞ்

சிந்துமெலும் பிற்குச் சிரபுரத்து நாவலன்சம்

பந்தன் இயம்புதிருப் பாட்டு.

18 அப்பர் (கலித்துறை):

பாட்டால் மறைபுக ழும்பிறை சூடியைப் பாடிமகிழ்

ஊட்டா மகிழ்சொல் லிறைவனைப் பாடி உவப்புறுக்க

வேட்டால் மலிபெருங் கல்லவன்போல மிதப்பனெனப்

பூட்டா மறிதிரை வார்கடற் கேவிழப் போதுவனே.

19. சுந்தரர் (விருத்தம்):

போதம்உண்ட பிள்ளை என்பு பொருகண்மாது செய்ததோ

காதல் கொண்டு சொல்லின் மன்னர் கல்மி தப்ப உய்த்ததோ

வாய்தி றந்து முதலை கக்க மகனை நீய ழைத்ததோ

யாது நம்பி அரிது நன்றெ னக்கி யம்ப வேண்டுமே.

20. மாணிக்க வாசகர் (அகவல்):

வேண்டுநின் அடியார் மெய்யன் பெனக்கும்

அருள்செய் சிவனே அலந்தேன் அந்தோ

முறையோ முறையோ இறையோ னேயென்று

அழுது செம்பொன் அம்பலக் கூத்தன்

அருளாற் பெற்ற அன்பினில் ஒருசிறிது

அடிய னேற்கும் அருளல் வேண்டும்

நீயே கோடல் நின்னருட் பெருக்கிற்கு

ஏற்ற தன்றிள ஏறுகந் தேறியைப்

பரிமா மிசைவரப் பண்ணிய வித்தக

திருந்திய வேத சிரப்பொருள் முழுவதும்

பெருந்துறை இடத்துப் பெருஞ் சீர்க்

குருந்துறு நிழலிற் கொள்ளை கொள்வாயே.

21. சம்பந்தர் (வெண்பா):

கொள்ளை கொள்ள வீடுதவிக் கூற்றைப் பிடர்பிடித்துத்

தள்ளுந் திருஞான சம்பந்தா - வெள்ளமிடும்

ஏடேறப் பால்குறைந்த தென்றழுவ ரேகழுவின்

காடேறப் புக்கஅரு கர்.

22. அப்பர் (கலித்துறை):

அருகக் கடல்கடந் தேறிய தோசிலை அம்பிடுயனப்

பெருகக் கடல்கடந் தேறிய தோசொல் பெருமிடறு

கருகக் கடல்விட முண்டோன் அடியிற் கசிந்து மனம்

உருகக் கடலன்பு பெற்றசொல் வேந்த உனக்கரிதே.

23. சுந்தரர் (விருத்தம்):

உனற்க ரும்புகழ் மேவிய சுந்தரன் உம்பன்மீ திவரா

நினைப்ப ருங்கயி லாயம் அடைந்தமை நின்றுகாண் குறவே

எனக்கு வந்துறு மோமகவென்றழு கின்றநாள் அலைபால்

தனித்த ருந்துபு மாலை உமிழ்ந்திடு தம்பிரான் நலனே.

24. மாணிக்க வாசகர் (அகவல்):

நலமலி வாதவுர் நல்லிசைப் புலவ

மனநின் றுருக்கு மதுர வாசக

கலங்குறு புலநெறி விலங்குறு வீர

திங்கள் வார்சடை தெய்வ நாயகன்

ஒருகலை ஏனும் உணரான் அஃதான்று

கைகளோ முறிபடு கைகள் காணிற்

கண்களோ ஒன்று காலையிற் காணும்

மாலையில் ஒன்று வயங்தித் தோன்றும்

பழிப்பின் ஒன்று விழிப்பின் எரியும்

ஆயினுந் தன்னை நீபுகழ்ந் துரைத்த

பழுதில் செய்யுள் எழுதினன் அதனாற்

புகழ்ச்சி விருப்பன் போலும்

இகழ்ச்சி அறியா என்பணி வானே.

25. சம்பந்தர் (வெண்பா):

வானும் புகழ்புகலி மன்னன் தொடர்பொன்று

தேனுந் திதழியோன் சீரேடு - தானுங்

கரியாய் மொழியுங் கரியாய் விடாமல்

எரியார் அழல்வீழ்ந் தெழுந்து.

26. அப்பர் (கலித்துறை)

துடைவாழை மேல்மட வாரல்குற் பாம்பு தொடமயங்கி

நடைவாய்ப் பிணமெனப் பட்டார் பெறுகிலர் நச்சுகுலை

உடைவாழை மேல்உர கந்தீண்ட மாய்ந்த ஒருவனுயிர்

அடைவான் அருள்புரி யுந்திரு நாவுக் கரசினையே.

27 சுந்தரர் (விருத்தம்):

அரசன் பரிமேல் வரநெடுநல் யானை எருத்தத் தமர்ந்துபோய்

வரதன் கைலை மலை அடைந்த மணியே மணிநீர் இடுபசும்பொன்

திரைசங் கெறியுங் குளத்துவரச் செங்கற் செம்பொ னாப்பாடும்

பரிசின் றெனக்குன் செம்பவளத் திருவாய் மலர்ந்து பகர்வாயே.

28. மாணிக்க வாசகர் (அகவல்):

பகிர்மதி தவழும் பவளவார் சடையோன்

பேரருள் பெற்றும் பெறாரின் அழுங்கி

நெஞ்சநெக் குருகி நிற்பை நீயே

பேயேன் பெறாது பெற்றார் போலக்

களிகூர்ந் துள்ளக் கவலை தீர்ந்தேனே

அன்னம் ஆடும் அகன்துறைப் பொய்கை

வாதவூர் அன்ப ஆத லாலே

தெய்வப் புலமைத் திருவள் ளுவனார்

நன்றறி வாரிற் கயவர் திருவுடையார்

நெஞ்சத் தவலம் இலர் எனுஞ்

செஞ்சொற் பொருளின் தேற்றறிந் தேனே.

29. சம்பந்தர் (வெண்பா):

தேனே றலர்சூடிச் சில்பலிக்கென் றுர்திரியும்

ஆனேறி யாண்டுப்பெற் றான்கொல்நீ - தானேறும்

வெள்ளைமணி என்று நினாவுவோம் வாங்கியஅப்

பிள்ளையையாங் காணப் பெறின்.

30. அப்பர் (கலித்துறை):

பெற்றால் நினைப்பெற் றவர்போற் பெறலும் பிறப்பதுண்டேல்

நற்றா ரணியில் நினைப்போற் பிறப்பது நல்லகண்டாய்

செற்றார் புரம்எரி செய்தவில் வீரன் திருப்பெயரே

பற்றா மறிவெண் திரைக்கடல் நீந்திய பாவலனே.

31. சுந்தரர் (விருத்தம்):

பாவாய்ப் பொழிந்த வானமுதப் பவளத் திருவாய் நம்பிநீ

சேவாய்ப் பொருதுந் தருமமுடைத் தேவன் மலைக்குப் போம்பொழுது

காவாய்ப் பயந்த தடக்கைமலர்க் கழறிற்றறிவார் கடாவிவரு

மாவாய்ப் பிறக்கக் கிடையாதே மாவாய்ப் பிறக்குந் திருமாற்கே.

32. மாணிக்க வாசகர் (அகவல்):

திருவார் பெருந்துறைச் செழுமலர்க் குருந்தின்

நீழல்வாய் உண்ட நிகரில்லா னந்தத்

தேன்தேக் கெறியுஞ் செய்யமா ணிக்க

வாசகன் புகன்ற மதுர வாசகம்

யாவரும் ஓதும் இயற்கைக் காதலிற்

பொற்கலம் நிகர்க்கும் பூசுரர் நான்மறை

மட்கல நிகர்க்கும் மதுர வாசகம்

ஓதின் முத்தி உறுபயன்

வேதம் ஓதின் மெய்பயன் அறமே.

33. சம்பந்தர் (வெண்பா):

அறத்தா றிதுஎன வேண்டாசிவிகை

பொறுத்தானோ டூர்ந்தான் இடையே - மறுத்தார்சம்

பந்தன் சிவிகை பரித்தார் திருகுவர்மற்

றுந்துஞ் சிவிகையினை ஊர்ந்து.

34. அப்பர் (கலித்துறை):

ஊர்ந்து வரும்இள ஏறுைடு யான்தன் உளத்தருளாற்

சார்ற்து சமண்வீட் டுறுமுனக்கேவருஞ் சைவநலங்

கூர்ந்து மிளிர்தரு நாவர சேநல் குரவுமுணஞ்

சேர்ந்து மருவினர்க் கேசிறந் தோங்குறுஞ் செல்வமுமே.

35. சுந்தரர் (விருத்தம்):

செல்வநல்லொற்றி ஊரன் செய்யசங் கிலியால் ஆர்த்து

மல்லலம் பரவை தன்கண் மாழ்குற அமிழ்த்து மேனும்

அல்லுநன் பகலும் நீங்கா தவன்மகிழ் அடியில் எய்தி

நல்லஇன் படைந் திருப்பன் நம்பிஆ ரூரன் தானே.

36. மாணிக்க வாசகர் (அகவல்):

தானே முத்தி தருகுவன் சிவனவன்

அடியன் வாதவூரனைக்

கடிவின் மனத்தாற் கட்டவல் லார்க்கே.

37. சம்பந்தர் (வெண்பா):

வல்லார் பிறப்பறுப்பர் வண்மை நலங்கல்வி

நல்லாதரவின்பஞானங்கள் - எல்லாம்

திருஞானசம்பந்தன் சேவடியே என்னும்

ஒருஞான சம்பந்தம் உற்று.

38. அப்பர் (கலித்துறை):

உற்றா னலன்தவந் தீயில்நின் றான்அலன் ஊண்புனலா

அற்றா னலன் நுகர் வுந்திரு நாவுக் கரசெனுமோர்

சொற்றான் எழுதியுங் கூறியு மேஎன்றுந் துன்பில்பதம்

பெற்றான் ஒருநம்பி அப்பூதி என்னும் பெருந்தகையே.

39. சுந்தரர் (விருத்தம்):

பெருமிழலைக் குறும்பரெனும் பரமயோகி

பெரிதுவந்துன் திருவடித்தா மரையைப் போற்றி

விரைமலர்தூய் வந்தனைசெய் கின்றான் என்றால்

விளங்கிழையார் இருவரொடும் முயங்கலாமோ

உரைமதிநின் தனைவெறுப்ப தென்கொல் நின்னை

உடையானுக் கடுத்தசெயல் உனக்கு மாயிற்

சுரர் முனிவர் பரவலுறும் பெருஞ்சீர்த் தொண்டத்

தொகைசெய்தோய் அறமுதனால் வகைசெய்தோயே.

40. மாணிக்க வாசகர் (அகவல்):

செய்ய வார்சடைத் தெய்வ சிகாமணி

பாதம் போற்றும் வாதவூர் அன்ப

பாவெனப் படுவதுன் பாட்டுப்

பூவெனப் படுவது பொறிவாழ் பூவே.

மொழி பெயர்ப்புகள்

[தொகு]

நால்வர் நான்மணி மாலை ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2019-03-15.
  2. Project Madurai: Nalvar Naanmani Maalai பரணிடப்பட்டது 2016-04-11 at the வந்தவழி இயந்திரம்
  3. http://ww2.lisindia.net/?subid1=bb7e78be-4720-11e9-91de-bd0d7965c168[தொடர்பிழந்த இணைப்பு]
  4. Project Madurai: Nalvar Naanmani Maalai
  5. ஆங்கில மொழிபெயா்ப்பு: நால்வா் நான்மணி மாலை பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நால்வர்_நான்மணி_மாலை&oldid=3560581" இலிருந்து மீள்விக்கப்பட்டது