நாற்கரப் பாதுகாப்புப் பேச்சுவார்த்தை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாற்கரப் பாதுகாப்புப் பேச்சுவார்த்தை
நிறுவப்பட்டது2007-2008
2017 - தற்போது (நவம்பர் 2017 ஆம் ஆண்டு பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு மீண்டும் நிறுவப்பட்டது)
வகைஅரசாங்கங்களுக்கு இடையிலான பாதுகாப்பு மன்றம்
உறுப்பினர்
நாடுகள்:

நாற்கரப் பாதுகாப்புப் பேச்சுவார்த்தை (ஆங்கிலம்: Quadrilateral Security Dialogue அல்லது Quad) என்பது அமெரிக்க ஐக்கிய நாடுகள், யப்பான், ஆத்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய நான்கு நாடுகளுக்கு இடையிலான முறைசாரா மூலோபாய மன்றம் ஆகும். உறுப்பு நாடுகளுக்கு இடையில் பகுதியளவு வழக்கமான உச்சி மாநாடுகள், தகவல் பரிமாற்றங்கள் மற்றும் போர்ப்பயிற்சி ஆகியவற்றின் மூலம் இந்த மன்றம் பராமரிக்கப்படுகிறது.[1] இந்த மன்றமானது ஒரு பேச்சு வார்த்தையாக 2007ஆம் ஆண்டு யப்பான் பிரதமர் சின்சோ அபேயால் , அமெரிக்க ஐக்கிய நாடுகளின் துணை ஜனாதிபதி டிக் சேனி, ஆத்திரேலியாவின் பிரதமர் ஜோன் ஹவார்ட் மற்றும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரின் ஆதரவுடன் தொடங்கப்பட்டது. பேச்சுவார்த்தைகளுடன் இந்த மன்றத்தின் மூலம், இதற்கு முன் இல்லாத வகையில் மலபார் பயிற்சி என்று அழைக்கப்படும் கூட்டு இராணுவப் பயிற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தத் தூதரக மற்றும் இராணுவ ஏற்பாடானது, பொதுவாக அதிகரித்து வரும் சீனப் பொருளாதார மற்றும் இராணுவ சக்திக்குப் பதிலாகக் கருதப்படுகிறது. இதில் கலந்து கொண்ட நாடுகளுக்கு முறைப்படித் தூதரகங்கள் மூலம் சீன அரசாங்கம் எதிர்ப்பு தெரிவித்தது.

இம்மன்றத்தின் முதல் மறு செய்கையானது 2007ஆம் ஆண்டு பிரதமர் ஜோன் ஹவார்டின் ஆட்சியின்போது ஆத்திரேலியா பின்வாங்கியதால் முடிந்துபோனது. சீனாவுக்கு எதிரானது எனக் கருதப்படும் ஒரு கூட்டணியில் அதன் வரலாற்று ரீதியான 2 எதிரிகளான யப்பான் மற்றும் இந்தியாவுடன் இணைய ஆத்திரேலியா விரும்பவில்லை என்பதை இது காட்டியது[2]. ஹவார்டுக்குப் பின் வந்த கெவின் ரட்டின் ஆட்சியிலும் இந்த நிலையானது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது.[3]. ரட் மற்றும் அவருக்குப் பின் வந்த ஜூலியா கிலார்ட் ஆகியோரின் ஆட்சியின்போது ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஆத்திரேலியாவுக்கு இடையேயான இராணுவ ஒத்துழைப்பானது மீண்டும் தொடங்கப்பட்டது. இதன் காரணமாக ஐக்கிய அமெரிக்க ஈரூடகப் படைப் பிரிவானது ஆத்திரேலியாவின் டார்வின் நகருக்கு அருகில் திமோர் கடல் மற்றும் லோம்போக் நீரிணைக்கு அருகில் நிறுவப்பட்டது.[4][5]. எனினும் இந்தியா, யப்பான் மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகள் ஆகியவை தொடர்ந்து கூட்டுக் கடற்படைப் பயிற்சிகளை மலபார் பயிற்சி மூலம் தொடர்ந்து நடத்தின.

எனினும் 2017 ஆம் ஆண்டின் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் உச்சி மாநாட்டின்போது இம்மன்றத்தின் அனைத்து நான்கு உறுப்பு நாடுகளும் கூட்டணியை மீளுருவாக்கம் செய்ய பேச்சுவார்த்தையில் பங்கேற்றன. சீனா மற்றும் அதன் எல்லை விரிவாக்கம் செய்யும் இலட்சியங்கள் ஆகியவற்றால் தென்சீனக் கடல் பகுதியில் உருவாகிய பதட்டமான சூழ்நிலைக்கு நடுவே ஆத்திரேலியாவின் பிரதமர் மால்கம் டேர்ன்புல், யப்பானின் பிரதமர் சின்சோ அபே, இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோதி மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஜனாதிபதி டோனால்ட் டிரம்ப் ஆகியோர் மணிலாவில் பாதுகாப்பு ஒப்பந்தத்தைப் புதுப்பிக்க ஒப்புக்கொண்டனர்.

அமெரிக்க ஐக்கிய நாடுகள், யப்பான், இந்தியா, ஆத்திரேலியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் கடற்படைக் கப்பல்கள் 2007ஆம் ஆண்டு வங்காள விரிகுடாவில் மலபார் போர்ப் பயிற்சியின்போது.

உசாத்துணை[தொகு]

  1. Griffiths, James. "A border dispute with China may push India closer to some of Beijing's top rivals". CNN (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-06-18.
  2. "Nelson meets with China over military relationship". Australian Broadcasting Corporation (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-06-03.
  3. "The Convenient Rewriting of the History of the 'Quad'". Nikkei Asian Review (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-09.
  4. "Australia-United States Ministerial Consultations 2009 Joint Communiqué". Department of Foreign Affairs and Trade (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-09.
  5. Calmes, Jackie (2011-11-16). "Obama Says U.S. to Base 2,500 Marines in Australia" (in en-US). The New York Times. https://www.nytimes.com/2011/11/17/world/asia/obama-and-gillard-expand-us-australia-military-ties.html.