நாராயணன் என்ற சொற்பொருள்
நாராயணன் | |
---|---|
நாராயணன் | |
வேறு பெயர்கள் | மாயோன் |
தேவநாகரி | नारायण |
சமசுகிருதம் | Nārāyaṇa |
வகை | விஷ்ணு, ஹரி, மாதவன், பெருமாள், திருமால் |
இடம் | ஷிர சாகரம் (திருப்பாற்கடல்) |
மந்திரம் | ॐ नमो नारायणाय ஓம் நமோ நாராயணாய |
ஆயுதம் | பஞ்சஜன்யம், சுதர்சன சக்கரம், கெளமோதகி |
துணை | இலக்குமி (ஸ்ரீதேவி, பூதேவி, நிலதேவி) |
நூல்கள் | வேதங்கள், புராணங்கள் |
நாராயணன் என்ற பெயர் இந்து சமயத் தோத்திரமான விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் 245-வது பெயராக வருகின்ற பெயர். விஷ்ணுவின் முக்கியமான பன்னிரு பெயர்களில் இரண்டாவது பெயர். இந்து சமயத்திலேயே கடவுளின் பெயர்களுக்குள் ஆன்மிகச்சிறப்பு மிக்கதான பெயர். பிறப்பு இறப்பு என்ற கோரமான விஷத்தீண்டலைப் போக்கவல்ல பெயர் என்பன புராணங்கள்.
ஆழ்வார்களின் பாசுரங்களில் நாராயணனின் தமிழாக்கம்
[தொகு]ஆழ்வார்கள் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் நாராயணன் என்பதை நாரணன் அல்லது நாரண நம்பி என்று அழைத்துள்ளனர்.
வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
- நாரண நம்பி நடக்கின்றான் என்று எதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
- தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்
— ஆண்டாள், நாச்சியார் திருமொழி, வாரணம் ஆயிரம்
சொற்பொருள்
[தொகு]தமிழ் நெறி விளக்கம்
[தொகு]பதின்மர் ஆழ்வார்களின் இரண்டாவது ஆழ்வாரான பூதத்தாழ்வார் "நாரணன்" என்னும் சொல்லைக் கையாண்டு அதற்கு "அன்பின் அண்ணன்" என விளக்கமும் தருகிறார்.
- அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
- இன்புருகு சிந்தை இடுதிரியா நன்புருகி
- ஞானச் சுடர்விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
வடமொழி நெறி விளக்கம்
[தொகு]- உள்ளதற்கெல்லாம் உறைவிடமாகியவர். 'நர:' என்றால் ஆன்மா. அதனிலிருந்து உண்டானவையெல்லாம் 'நாரா:' எனப்படும். அவைகட்கு 'அயனம்', அதாவது இருப்பிடம். அவைகளில் எல்லாவற்றிலும் உள்ளிலும் வெளியும் நிறைந்திருப்பவர்[1] ஆதலால் 'நாராயணன்'.
- இன்னும் விளக்கமாகச் சொல்லப் போனால், ஆன்மாவிலிருந்து வெளி, வெளியிலிருந்து காற்று, காற்றிலிருந்து தீ, தீயிலிருந்து நீர், நீரிலிருந்து நிலம் -- இதுதான் படைப்பு வரிசை [2]. இப்படி விளக்கம் பெற்று வெளியானதே இவ்வுலகம். இது ஆன்மா எனப் பொருள்படும் 'நர'னிலிருந்து உண்டானதால் 'நாரம்'. நாரத்தை இருப்பிடமாகக் கொண்டவர் 'நாரயணன்'.
- வெளி முதலிய ஐந்து பெரும்பூதங்களும் ஒன்றோடொன்று நன்கு கலந்து வெளித் தோற்றம் பெறுமுன்னர், தனித்தனியாக இருந்தன. அவைகளுக்கு 'காரணோதகம்' அல்லது 'அப்பு' என்று பெயர். அம்மூல தத்துவங்களில் உட்புகுந்து அவற்றைத் தன்னிடமாகக் கொண்டு படைப்பைத் தொடங்கியவர் 'நாராயணன்'[3].
- [4] வடமொழி இலக்கணத்தில் 'தத்புருஷ-ஸமாஸம்' (வேற்றுமைப்புணர்ச்சி), 'பஹுவ்ரீஹி ஸமாஸம்' (அன்மொழித்தொகை) என்று இருவித சொற்புணர்ச்சிகள் உண்டு. 'நாராயண' என்ற சொல், 'நர' , 'அயன' ஆகிய இரண்டு சொற்களைக் கொண்டு சேர்க்கும்போது, இரண்டுவிதமாகவும் சேரும்.
- நாராணாம் அயனம் அதாவது, நாரங்களுக்கு அயனம், என்பது முதல் வகை.
- நாரா: அயனம் யஸ்ய ஸ:, அதாவது 'நாரங்களை அயனமாக (நுழையப்படும் பொருளாக) உடையவர்' என்பது இரண்டாவது வகை.
- உயிருள்ளவை, உயிரில்லாதவை இரண்டும் இல்லாத இடத்திலும் அவன் உளன் --இது முதல் வகைப் புணர்ச்சியினால் ஏற்படும் பொருள். இதை 'புறப்பரவல்' ('பஹிர்-வ்யாப்தி) என்று வேதாந்தத்தில் கூறுவர்.
- உயிருள்ளவையோ, உயிரில்லாதவையோ, உள்ள இடத்தில் தான் இல்லை என எண்ணவொண்ணாதபடி அவன் கலந்து நிற்கிறான். -- இது இரண்டாவது வகைப் புணர்ச்சியினால் ஏற்படும் பொருள். இதை 'உள்ளுறைதல்' ('அந்தர்-வ்யாப்தி) என்று வேதாந்தத்தில் கூறுவர்.
'நாராயண' என்ற சொல்லின் பெருமை
[தொகு]ஆதி சங்கரர் 'நாராயண' நாமத்தின் பெருமையை தன் விஷ்ணு சஹஸ்ரநாம உரையின் முன்னுரையில் பல மேற்கோள்களை எடுத்தாண்டு விளக்குகிறர். அவைகளில் சில:
- நீராடும்பொழுதும் மற்ற எல்லாச்செய்கைகளிலும் 'நாராயணனை' நினத்தமாத்திரத்தில் கூடாத செய்கைகளனைவற்றிற்கும் பிராயச்சித்தமாகின்றது.
- அத்தனை சாத்திரங்களையும் திரும்பத்திரும்ப அலசிப்பார்த்தாலும் 'நாராயணனை' எப்பொழுதும் தியானிப்பதொன்றே சிறந்ததாக ஏற்படுகிறது.
ஸ்ரீமத்பாகவதத்தைத் தொடங்கும்போதே சுக மஹரிஷி அரசன் பரீக்ஷித்துக்குச் சொல்கிறர்[5]: கருமங்களை சரிவரச்செய்வதாலோ அல்லது யோகாப்பியாசத்தினாலோ அல்லது ஆன்மிகத்தொடர்பினாலோ எப்படி ஏற்பட்டாலும், ஒரு பிறப்பின் மேலோங்கிய பெருமை கடைசி மூச்சின்போது 'நாராயணனை' நினைவு கூறுவதுதான்.
- இப் பாடலில் நாராயணன் அன்பு (அருள்) வெள்ளம் நம்மீது பாய்வதை உணரமுடிகிறது.
ஒரு சுவையான செய்தி
[தொகு]பகவானின் தத்துவங்களை ஆதி முதல் அந்தம் வரை எடுத்து அலசியிருக்கும் பகவத் கீதையின் 18 அத்தியாயங்களிலும் 'நாராயண' என்ற சொல் வரவேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ யச்ச கிஞ்சித் ஜகத் ஸர்வம் த்ருச்யதே ச்ரூயதேபி வா; அந்தர் பஹிஶ்ச தத் ஸர்வம் வ்யாப்ய நாராயண: ஸ்தித: (தைத்திரீயோபநிடதம் 3-1.
- ↑ யஜுர் வேதம், தைத்திரீயோபநிடதம், 2-வது அத்தியாயம், முதல் அனுவாகம்
- ↑ ஆபோ நாரா: என்று கூறும் மனுஸ்மிருதி 1-10
- ↑ வேதாந்த தேசிகர்: 'தேசிகபிரபந்தம்' பாட்டு #300
- ↑ ஸ்ரீமத்பாகவதம், 2-1-6