உள்ளடக்கத்துக்குச் செல்

நாயும் அதன் பிம்பமும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு இடைக்கால விலங்கியல் கட்டுக்கதை

நாயும் பிம்பமும் அல்லது நாயும் அதன் எதிரொளிப்பும் (The Dog and Its Reflection ) ஈசாப்பின் கட்டுக்கதைகளில் ஒன்றாகும். இது பெர்ரி குறியீட்டில் 133 வது கதையாக உள்ளது. [1] கிரேக்க மொழியின் மூலக்கதையானது இலத்தீன் மொழியில் மீண்டும் சொல்லப்பட்டுப் அங்கிருந்து ஐரோப்பா முழுவதும் பரவியது, நிழலுக்காக ஆசைப்பட்டு இருக்கும் பொருளை விட்டுவிடாமல், இருப்பதில் திருப்தி அடைய வேண்டும் என்ற பாடத்தைக் இக்கதை கற்பிக்கிறது. கதையின் இந்திய வகைகளும் உள்ளன. கட்டுக்கதையின் முடிவில் உள்ள அறநெறிகள் ஆங்கிலம் மற்றும் பிரஞ்சு இரண்டையும் பழமொழிகளுடன் வழங்கியுள்ளன. இக் கதை பல்வேறு சமூக சூழ்நிலைகளுக்கும் பயன்படுத்தப்பட்டது.

திருடப்பட்ட இறைச்சித் துண்டை எடுத்துச் செல்லும் ஒரு நாய், ஒரு ஓடையைக் கடக்கும்போது கீழே தண்ணீரில் அதன் சொந்த பிரதிபலிப்பைக் காண்கிறது. நீரில் தெரியும் அதனது உருவத்தை வேறொரு நாய் தன்னிடமுள்ளதைவிடச் சிறந்த இறைச்சிய எடுத்து செல்வதாக எண்ணுகிறது. நீருக்குள் தெரியும் இறைச்சித் துண்டையும் பறித்துவிடலாமென்ற ஆசையில் தன் வாயைத் திறந்து கவ்வ முயற்சிக்க அதன் வாயிலிருந்த துண்டும் தண்ணீருக்குள் விழுந்து விடுகிறது. கிமு 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பெய்யியலாளர் டெமோக்ரிட்டசின் படைப்பில் காணப்படும் ஒரு குறிப்பின் மூலம் இந்த கதை எவ்வளவு பழமையானதும் நன்கு அறியப்பட்டதுமாகுமென அறியலாம். அக்குறிப்பில், தன்னிடம் இருப்பதைக் கொண்டு திருப்தியடைவதை விட இல்லாத வேறொன்றுக்கு ஆசைப்படும் முட்டாள்தனமான மனித விருப்பத்தைப் பற்றிக் கூறுகையில், "ஈசாப்பின் கட்டுக்கதையில் உள்ள நாயைப் போல" என்று விவரிக்கிறார். [2]

இக்கதையின் பல இலத்தீன் பதிப்புகள் உள்ளன. அங்கிருந்து இக்கதை இடைக்காலத்தில், விலங்கியல் கதைகளில் இணைக்கப்பட்டது. 1200 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் எழுதப்பட்டு ஒளியேற்றப்பட்ட "தி அபெர்டீன் பெஸ்டியரி"யில், "ஒரு நாய் ஒரு இறைச்சித் துண்டையோ அல்லது அந்த வகையான எதையேனும் தன் வாயில் சுமந்து கொண்டு ஆற்றின் குறுக்கே நீந்தும்போது, அதன் நிழலைக் கண்டால் அது வாயைத் திறந்து நீருக்குள் தெரியும் இறைச்சித் துண்டைக் கைப்பற்றும் வேகத்தில் அது சுமந்து வந்த இறைச்சியையும் இழக்கும்" என்ற செய்தி வலியுறுத்தப்பட்டுள்ளது. [3]

பதிப்புகள்

[தொகு]

கதையின் மேலோட்டமான தோற்றம் பரந்த அளவில் ஒரே மாதிரியாக இருந்தாலும், சில விவரங்கள் காலப்போக்கில் மாற்றியமைக்கப்பட்டன. இந்த கட்டுக்கதை கிரேக்க மூலங்களில் தொடக்க வார்த்தைகளுக்குப் பிறகு "இறைச்சியை சுமக்கும் நாய்" என்று குறிப்பிடப்பட்டு ஒருவர் தன்னிடம் உள்ளதைக் கொண்டு திருத்தியடையவேண்டுமென்ற செய்தியை அளிக்கிறது. [4] லத்தீன் ஆதாரங்கள் பெரும்பாலும் நாய் தண்ணீரில் அதன் சொந்த எதிரொளிப்பின் (சிமுலாக்ரம்) மூலம் ஏமாறியது என்ற உண்மையை வலியுறுத்துகின்றன.

பிரதிபலிப்பு என்று பொருள்பட பயன்படுத்தப்படும் மற்ற சொற்கள் "நாயும் அதன் நிழமும்" போன்ற மாற்றுத் தலைப்புகளுக்கு வழிவகுத்தன. இங்கிலாந்தின் வால்டரின் பிந்தைய இலத்தீன் பதிப்புகள், [5] செரிட்டனின் ஓடோ [6] மற்றும் ஹென்ரிச் ஸ்டெய்ன்ஹோவலின் ஈசோப் [7] ஆகியவற்றில் "நிழல்" எனப் பொருள்தரும் "umbra" பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்தக் காலகட்டத்தில் அச்சொல்லானது பிரதிபலிப்பு மற்றும் நிழல் ஆகிய இரண்டையும் குறித்தது. 1384 ஆம் ஆண்டு தனது கட்டுக்கதைகளின் தொகுப்பிற்கு ஸ்டீன்ஹோவலை அடிப்படையாகப் பயன்படுத்திய வில்லியம் காக்சுட்டன், "நிழல் என்ற சொல்லைப் பயன்படுத்தினார். [8] எழுத்தாளர் ஜான் லிட்கேட் "பிம்பம்" என்பதையே அவரது மறுபதிப்பிலும் பயன்படுத்தியுள்ளார். [9] கதையின் பிரெஞ்சு பதிப்பில், லா ஃபோன்டைன் Le chien qui lâche sa proie pour l'ombre (தனது நிழலுக்காக தனது இரையைத் துறந்த நாய் VI.17), [10] என்ற தலைப்பைக் கொடுத்து பிம்பம் அல்லது நிழல் என்ற இரட்டைப் பயன்பாடுள்ள "ombre" என்ற சொல்லைப் பயன்படுத்தினார்.

அதன்பிறகு, குறிப்பாக 19 ஆம் நூற்றாண்டில், கதையின் தலைப்பில் நிழல் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது ஆங்கிலேய எழுத்தாளர்களின் விருப்பமாயிற்று. இந்தக் காலகட்டத்தில், நாய் ஒரு பாலத்தை கடக்கும்போது தண்ணீரில் தனது பிம்பத்தைப் பிடிக்க முயற்சி செய்வதுபோலுள்ள படங்கள் வெளியாயின. டெல் பிராடோ அருங்காட்சியகத்தில் பால் டி வோஸ் வரைந்த ஓவியம் (காலம்:1638/40), [11] விக்டோரியா மற்றும் ஆல்பர்ட்டு அருங்காட்சியகத்திலுள்ள "தி டாக் அண்ட் த ஷேடோ" (1822) என்ற தலைப்பில் எட்வின் ஹென்றி லேண்ட்சீர் வரைந்த ஓவியம் ஆகியவை இதற்கு எடுத்துக்காட்டுகளாகும்.[12] [13] லா ஃபோன்டைனின் விமர்சகர்கள், முந்தைய ஆதாரங்களில் விவரிக்கப்பட்டுள்ளபடி, நாய் நீந்தி நீரோடையின் குறுக்கே சென்றிருந்தால் அதன் பிரதிபலிப்பைக் காண முடிந்திருக்காது; எனவே நாயானது பாலத்தைக் கடந்தததாகத்தான் கதையில் கூறப்பட்டிருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டினர். [14] எனினும் மேரி டி பிரான்சின் 12 ஆம் நூற்றாண்டின் நார்மன்-பிரெஞ்சுப் பதிப்பில் ஏற்கனவே பாலம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. [15] லிட்கேட்டும் நாயானது பாலத்தைக் கடந்ததாகவே தனது பதிப்பில் கூறுகிறார். இருவரும் அவரவரது பதிப்புகளில் இறைச்சித் துண்டுக்குப் பதில் பாலாடைக்கட்டியைப் பயன்படுத்தியுள்ளனர்.

ஈசாப்பின் கதைக்கு நெருக்கமான ஒரு கதை, கல்லாதனுக்காக ஜாதகம் என பௌத்த நூல்களில் செருகப்பட்டுள்ளது. அக்கதையின்படி, இறைச்சித் துண்டைத் தாங்கிய ஒரு குள்ளநரி ஆற்றங்கரையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது ஆற்றில் நீந்திக்கொண்டிருந்த மீனைக் பிடிப்பதற்காக ஆற்றில் பாய்கிறது. ஆனால் அதன் முயற்சி வெற்றியடையவில்லை. திரும்பி கரைக்கு வந்த குள்ளநரி, அதன் இறைச்சியையும் ஒரு கழுகு எடுத்துச் சென்றுவிட்டதைக் கண்டது. [16] இதிலிருந்து பெறப்பட்ட ஒரு மாறுபட்ட வடிவம், பிட்பாயின் "தி ஃபாக்ஸ் அண்ட் தி பீஸ் ஆஃப் மீட்" கதையாகும். [17] இதன்படி ஒரு நரி இறைச்சியுடன் வீட்டிற்குச் செல்லும் வழியில் சில கோழிகளைப் பார்த்து, அவற்றில் ஒன்றை வேட்டையாட முடிவு செய்கிறது; கோழியைப் பிடிக்க சென்ற நரி விட்டுச் சென்ற இறைச்சியை ஒரு பருந்து எடுத்துச் சென்றுவிடுகிறது.

குறிப்புகள்

[தொகு]
  1. See online
  2. Geert van Dijk, Ainoi, logoi, mythoi: fables in archaic, classical, and Hellenistic Greek, Brill NL 1997, p.320
  3. Aberdeen University Library MS 24, Folio 19v. The citation and accompanying illustration is available online
  4. Francisco Rodríguez Adrados, History of the Graeco-latin Fable III, pp.174-8
  5. Fable 5
  6. Fable 61
  7. Aesop p.50
  8. Fable 1.5
  9. Isopes Fabules (1310), stanza 135
  10. WikiSource
  11. Wiki Commons
  12. V&A site
  13. F.G. Stephens, Memoirs of Sir Edwin Landseer a Sketch of the Life of the Artist, London 1874, pp.76-7
  14. Rue des fables
  15. Mary Lou Martin, The Fables of Marie de France: An English Translation, "De cane et umbra", pp.44-5
  16. Joseph Jacobs, The fables of Æsop, selected, told anew and their history traced, London, 1894, p.199
  17. Maude Barrows Dutton, The Tortoise and the Geese and Other Fables of Bidpai, New York 1908, p.30

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாயும்_அதன்_பிம்பமும்&oldid=3837444" இலிருந்து மீள்விக்கப்பட்டது