நானா ராவ் பூங்கா
| நானா ராவ் பூங்கா Nana Rao Park, Kanpur | |
|---|---|
![]() | |
| வகை | நகரப் பூங்கா |
| அமைவிடம் | பேரங்காடித் தெரு, கான்பூர், உத்திரப் பிரதேசம், இந்தியா |
| இயக்குபவர் | கான்பூர் நகராட்சி ஆணையம் |
| நிலை | ஆண்டு முழுவதும் திறந்திருக்கும் |
நானா ராவ் பூங்கா (Nana Rao Park) இந்தியாவிலுள்ள உத்தரப் பிரதேச மாநிலத்தின் தொழில்துறை மையமான கான்பூரில் அமைந்திருக்கிறது. நகரப் பொதுப் பூங்காவான இது இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு நானா சாகிப்பின் நினைவாக உருவாக்கப்பட்டது. இந்திய சுதந்திரத்திற்கு முன்பு இந்த இடம் நினைவுக் கிணறு என்று அழைக்கப்பட்டது. மேலும் 1857 ஆம் ஆண்டு இந்தியக் கலகத்தின் போது பிரிட்டிசு பெண்கள் மற்றும் குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டதை நினைவுகூரும் இடமாகவும் இது இருந்தது.
வரலாறு
[தொகு]பிபிகார் படுகொலை
[தொகு]
1857 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய விடுதலைப் போரின் போது கிழக்கிந்திய கம்பெனியின் பிரிட்டிசு வீரர்களின் தண்டனை நடவடிக்கைகளைத் தொடர்ந்து, நானா சாகிப்பின் நீதிமன்றத்தில் ஒரு வேசியின் தூண்டுதலின் பேரில் சுமார் 200 பிரிட்டிசு பெண்கள் மற்றும் குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் இடமாக இந்தப் பூங்கா மகத்தான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.[1]
நினைவுக் கிணறு
[தொகு]
இறந்தவர்களை நினைவுகூரும் வகையில் நினைவுச்சின்னம் எழுப்பப்பட்ட பிறகு, இந்த இடம் முதலில் நினைவுக் கிணறு என்று அழைக்கப்பட்டது. நினைவுச்சின்னம் ஒரு பெரிய வேலி, நேர்த்தியான அழகுடன் கூடிய கொண்ட பளிங்காலான வளைவான சாளரங்கள் மற்றும் கூர்மையான கூரைகள் மற்றும் கிணறு இருந்த இடத்தில் ஒரு சிலுவை ஆகியவற்றைக் கொண்டிருந்தது. நினைவுச்சின்னத்தை உருவாக்குவதற்காக கான்பூரில் வசிப்பவர்கள் £30,000 செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உதவாததற்கு அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையாக ஓரளவு இருந்தது.[2]
சுதந்திரத்திற்குப் பின்
[தொகு]1947 ஆம் ஆண்டு இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, நினைவுச்சின்னம் இடிக்கப்பட்டது. அதன் இடத்தில் இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவர்களின் சிலைகளுடன் ஒரு பூங்கா கட்டப்பட்டது. மேலும் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் நானா சாகிப்பின் பங்களிப்பிற்காக அவரது நினைவாக பெயரிடப்பட்டது. பளிங்காலான வளைவான சாளரங்கள் மற்றும் கூர்மையான கூரைகள் கான்பூர் நினைவு தேவாலயத்தின் தேவாலய முற்றத்திற்கு மாற்றப்பட்டன. கிணற்றின் வட்ட வடிவ முகட்டின் எச்சங்கள் இன்றும் பூங்காவில் காணப்படுகின்றன.
தற்போதைய நிலை
[தொகு]

பூங்கா கான்பூர் மாவட்டத்தின் மையப் பகுதியில் பூல் பாக், எல்.ஐ.சி கட்டடத்திற்கு அருகில் அமைந்துள்ளது. பூங்கா நன்கு பராமரிக்கப்பட்டு பல உடற்பயிற்சி குழுக்களால் பிரபலமாகியுள்ளது. அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் பார்வையாளர்கள் அதிகமாக வரும் கான்பூர் பூங்காக்களில் ஒன்றாகத் திகழ்கிறது. கான்பூரில் உள்ள பலருக்கு, இந்த பூங்கா வெளிப்புற சுற்றுலா இடமாக செயல்படுகிறது. இங்கு விறுவிறுப்பான நடைபயிற்சி, மெல்லோட்டம், நீச்சல், பூப்பந்து மற்றும் யோகா ஆகியவை நடக்கின்றன. பூங்கா தற்போது கான்பூர் நகராட்சியின் பொறுப்பில் உள்ளது மற்றும் நன்கு பராமரிக்கப்படுகிறது. இங்கு ஒரு பொது நீச்சல் குளம் உள்ளது.
பூங்காவிற்குள் ஒரு தாவர நாற்றங்கால் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான அழகான தாவரங்கள் உள்ளன. ஏராளமான பசுமையும் உள்ளது. நானா ராவ் பூங்கா பல வகையான உள்ளூர் பறவைகள் மற்றும் வௌவால்களுக்கு விருப்பமான ஓய்வு இடமாகும்.
பூங்காவில் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற புகழ்பெற்றவர்களின் சிலைகள் நிறைந்துள்ளன. இந்தப் படுகொலையில் பங்கேற்றதாகக் கருதப்படும் இராணி இலட்சுமிபாய், லாலா லச்பத் ராய், அச்சிசான் பாய் மற்றும் தாத்யா டோப் ஆகியோரின் சிலைகளும் இதில் அடங்கும்.
இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு மிகவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பழைய ஆலமரமான பூதா பர்காட்டு பூங்கா மைதானத்தில் அமைந்துள்ளது. பூங்காவிற்குள் ஒரு பாரம்பரிய உடற்பயிற்சி கூடம் உள்ளது.
2022 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டதிலிருந்து, பூங்காவில் அழகான தோட்டம் மற்றும் அனைத்து வயது குழந்தைகளுக்கான ஊஞ்சல்களால் நிரப்பப்பட்ட விளையாட்டு மைதானங்கள் உள்ளன. இந்த சேர்த்தல்களுடன், பூங்கா இப்போது ஒரு நபருக்கு 10 ரூபாய் நுழைவு கட்டணத்தையும் வசூலிக்கிறது. இக்கட்டணம் மக்கள் பூங்காவை முழுவதும் சுற்றித் திரிந்து அதன் அனைத்து வசதிகளையும் அனுபவிக்க அனுமதிக்கிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Anand Swarup Misra, 'Nana Sahab Peshwa and the Fight For Freedom', Information Department, Uttar Pradesh, 1961.
- ↑ "Angel of Cawnpore". Retrieved 2007-07-11.
