நாடாவால் எழிற்புள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாடாவால் எழிற்புள்
வால் இறகுகள் இன்னமும் சரியாக வளராத இளம் ஆண் பறவை எங்கா மாகாணம்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முண்ணாணிகள்
வகுப்பு: பறவை
வரிசை: பசெரீன்கள்
குடும்பம்: சந்திரவாசி
பேரினம்: எழிற்புள்
இனம்: A. mayeri
இருசொற் பெயரீடு
Astrapia mayeri
சுடோனர், 1939

நாடாவால் எழிற்புள் (Astrapia mayeri) என்பது (ஆண் பறவையில் ஒரு மீற்றருக்கும் மேலாக வளரக்கூடிய வாலைத் தவிர்த்து) 32 செமீ வரை வளரக்கூடிய நடுத்தர அளவான மிருதுவான பட்டுப் போன்ற கருநிற உடலைக் கொண்ட சந்திரவாசிப் பறவையினம் ஒன்றாகும். இதன் ஆண் பறவை ஒளிர்வான இளம் பச்சை மற்றும் வெண்கல நிற இறகமைப்பைக் கொண்டும், சொண்டுக்கு மேலே அலங்காரமான சுருட்டை இறகுகளைக் கொண்டும், மிகவும் நீளமான நாடாப் போன்ற வெண்ணிற வாலிறகுகள் இரண்டைக் கொண்டும் காணப்படும். இதன் பெண் பறவையானது ஒளிர்வான தலையைக் கொண்ட கபில நிறப் பறவையாகும். இவ்வினம் பரவி வாழும் குறுகிய எல்லைக்குட் காணப்படுகின்றதான, இவ்வினத்துக்கும் பேரெழிற்புள் இனத்துக்கும் கலந்து பிறந்த பறவைகள் பெருவால் எழிற்புள் என அழைக்கப்படும்.

நீண்ட வாலிறகுகளுடன் கூடிய ஆண் பறவை

சந்திரவாசி இனங்களில் மிகவும் அலங்காரமான பறவையினமொன்றான இந்த நாடாவால் எழிற்புள் இனம் தன் உடற் பருமனுடன் ஒப்பிடும்போது உலகிற் காணப்படும் எப்பறவையினத்தை விடவும் மிக நீளமான, அதாவது தன் உடலின் மொத்த நீளத்தின் மூன்று மடங்குக்கு மேற்பட்ட நீளமான வாலைக் கொண்டுள்ளது.

நாடாவால் எழிற்புள் இனமானது பப்புவா நியூ கினி நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள நடு மலைநாட்டின் மலைசார் காடுகளுக்கு மாத்திரம் தனிச்சிறப்பான இனமாகும். ஏனைய அலங்காரமான சந்திரவாசிப் பறவைகளைப் போலவே, இவ்வினத்தின் ஆண் பறவையும் பலபெண் கலவி புரிவதாகும். இதுவரை கண்டறியப்பட்டுள்ள சந்திரவாசிப் பறவையினங்களில் இறுதியாகக் கண்டறியப்பட்டது இந்த நாடாவால் எழிற்புள் இனம் ஆகும்.

இப்பறவையினத்துக்கான அறிவியற் பெயர் நியூகினித் தீவு பற்றிய அறிவியற் தேடலில் ஈடுபட்டரும் இயற்கையியலாளருமான பிரெட் சோ மேயர் என்பவரின் நினைவாகவே இடப்பட்டுள்ளது. அவரே இப்பறவையினத்தை 1938 ஆம் ஆண்டு கண்டறிந்ததாகக் கருதப்படுகிறது. எனினும், யக் ஐட்சு என்பவரே இதனைக் கண்டறிந்ததாகவும் பிற்காலத்தில் இது பற்றி பிரெட் சோ மேயர் ஆர்வங் கொண்டிருந்ததாகவும் இப்போது கருதப்படுகிறது[1].

வாழிடமிழத்தல் மற்றும் இதன் அழகிய இறகுகளுக்காக வேட்டையாடப்படுதல் என்பன காரணமாக இவ்வினம் தற்போது அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது. அதனாற்றான், இது அச்சுறு நிலையை அண்மித்த இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Chandler, David & Couzens, Dominic. 100 Birds to See Before You Die ISBN 9781592239580
  • BirdLife International (2004). Astrapia mayeri. 2006 ஐயுசிஎன் செம்பட்டியல். ஐயுசிஎன் 2006. தரவிறக்கப்பட்டது 11 May 2006. இவ்வினம் ஏன் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கான நியாயப்படுத்தல்களைத் தரவுத்தளம் கொண்டுள்ளது.

வெளித் தொடுப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாடாவால்_எழிற்புள்&oldid=3370217" இலிருந்து மீள்விக்கப்பட்டது