நாசியா பர்வீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாசியா பர்வீன் (NaziaParveen) என்பவர் பாக்கித்தான் நாட்டைச் சேர்ந்த பாறை ஏறும் விளையாட்டு வீராங்கனையாவார்.முன்னாள் பழங்குடியினர்ப் பகுதியான கூட்டாட்சி நிர்வாகத்தால் நிர்வகிக்கப்படும் பழங்குடியினப் பகுதிகளிலிருந்துவந்த முதல் பாறை ஏறும் வீராங்கனையாக நாசியா நன்கு அறியப்படுகிறார்.[1]

வான்குடை மிதவை, இறகுப்பந்தாட்டம், குதிரை சவாரி, கூடைப்பந்து, வில்வித்தை மற்றும் எறிபந்து போன்ற விளையாட்டுகளை பர்வீன் விரும்புகிறார். கூட்டாட்சி நிர்வாகத்தால் நிர்வகிக்கப்படும் பழங்குடியினப் பெண்கள் மீதான பிம்பத்தை இவர் மாற்ற விரும்புகிறார்.[2][3] மேலும் இத்தகைய பழங்குடியினப் பகுதிகளில் வாய்ப்பின்றி தவிக்கின்ற சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கு வாய்ப்புகளை வழங்க விரும்புகிறார். பர்வீனுக்கு 5 சகோதரிகள் மற்றும் 1 சகோதரர் உள்ளனர். இவரது தந்தை பர்வீன் பாறை ஏறுவதற்கு தடையேதும் கூறாமல் மிகுந்த ஆதரவாக இருந்தார். இசுலாமாபாத்து நகரிலுள்ள தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் பர்வீன் சர்வதேச உறவுகள் பாடத்தில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றுள்ளார்.[1][4]

தொழில்[தொகு]

2010 ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் பாறை ஏறும் நிகழ்வில் பங்கேற்ற போதுதான் நாசியா இவ்விளையாட்டிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார். மார்கல்லா மலைகளில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு ஆண்-பெண் இருவருக்குமான ஒர் இணைந்த பாறை ஏறும் நிகழ்வாகும். நாசியா பல்கலைக்கழகப் பயணமாகவே இவர் அங்கு சென்றிருந்தார். அப்போது தான் வேடிக்கைக்காகப் அப்போட்டியில் பங்கேற்றதாகக் நாசியா கூறியதாகக் கூறப்படுகிறது. பாறை ஏறுவது வேடிக்கையாக இருந்தாலும் தான் அதைத் தொடர விரும்புவதாக நாசியா கூறினார்.[5] ஒரு வருடம் கழித்து பர்வீன் பாக்கித்தானில் உள்ள ஒரு வீரசாகச மன்றத்தில் சேர்ந்தார். 2014 ஆம் ஆண்டு பாக்கித்தானிலிருந்து சர்வதேச பாறை ஏறும் போட்டிகளில் பங்கேற்ற முதல் பெண்மணி என்ற சிறப்பைப் பெற்றார்.

தடைகள்[தொகு]

நாசியா பர்வீன் முதன்முதலில் பாறை மலையேற்றத்தை போட்டியாக ஆரம்பித்தபோது, ஆண் தோழர்கள் சிலர் பர்வீன் பங்கேற்கும் போட்டிகளை புறக்கணித்தனர்.

தொழில் சாதனைகள்[தொகு]

2014 ஆம் ஆண்டில் பர்வீன் தொடர்ச்சியாக 28 பாறை ஏறும் போட்டிகளில் பங்கேற்று முதல் இடத்தை வென்றார். 2016 ஆம் ஆண்டில் பர்வீன் தொடர்ந்து முப்பத்திரண்டு பாறை ஏறும் போட்டிகளில் வென்றார். கலந்து கொண்ட இருபத்தி எட்டு போட்டிகளில் நான்கு போட்டிகளில் ஆண்களை எதிர்த்து வென்றார். 2011 ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் தேசிய அளவில் நடைபெற்ற 5 ஆவது பாக்கித்தான் திறந்தநிலை பாறை ஏறும் போட்டியில் பங்கேற்றார். சிறப்பாக விளையாடி சாதனை படைத்ததற்காக இவருக்கு ஒரு சிறப்பு கோப்பை வழங்கப்பட்டது.[6] பர்வீன் ஒருமுறை செனாப் பாறை ஏறும் போட்டியில் பங்கேற்று தனது போட்டியை பன்னிரண்டு மடங்கு முன்னிலை பெற்று வெற்றி பெற்றார். தேசிய அளவிலான அப்போட்டியில் பர்வீன் வென்று பெண் பிரிவுகளில் சாதனை படைத்தார். இதனால் பாக்கித்தான் வீரசாகச மன்றத்தின் பயிற்றுவிப்பாளராகவும் நியமிக்கப்பட்டார். 2017 ஆம் ஆண்டில் தி நியூசு வுமன் பவர் பட்டியலின் 50 இடங்களில் ஒருவராக இடம்பெற்றார்.பாக்கித்தான் சாதனைப் புத்தகத்தில் பர்வீனின் பெயரும் இடம்பெற்றது.[7]

குடும்பம் மற்றும் உள்ளூர் ஆதரவு[தொகு]

பர்வீனின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் ஆரம்பத்தில் பர்வீன் பாறை ஏறுவதைத் தேர்ந்தெடுப்பதில் குழப்பமடைந்தனர்.[1][5] பாறை ஏறுவது பெண்கள் விளையாட்டு அல்ல என்று அவர்கள் அடிக்கடி பர்வீனிடம் சொல்வார்கள். இருப்பினும், பர்வீன் போட்டிகளில் வென்ற பிறகு, தனது குடும்பம் மற்றும் உள்ளூர் மக்களிடமிருந்து ஆதரவைப் பெறத் தொடங்கினார். தற்போது பர்வீனின் சாதனைகளைப் பற்றி அவர்கள் பெருமைப்படுகிறார்கள்.

அரசு உதவி[தொகு]

பர்வீன் கைபர்-பக்துன்க்வா ஆளுநருக்கு உதவி கேட்டு ஒரு கடிதம் எழுதினார். இத்ன் எதிரொலியாக பர்வீனின் அனைத்து செலவுகளையும் கவனித்துக் கொள்வதாக அவர் அறிவித்தார். எதிர்காலச் சாதனைகளுக்கு மேலும் அரசாங்க ஆதரவு தேவை என்று பர்வீன் நம்புகிறார். காரகோரம், இந்துகுசு மற்றும் இமயமலை போன்ற மலைத்தொடர்களின் வடிவத்தில் உலகின் சில சிறந்த மலை ஏறும் மற்றும் மலையேறும் வாய்ப்புகளை பாக்கித்தான் அரசாங்கம் ஏற்கனவே வழங்கியிருக்கிறது. பாகித்தான் விளையாட்டு வாரியத்தால் பட்டியலிடப்பட்ட விளையாட்டுகளில் பாறை ஏறுதலும் சேர்க்கப்பட வேண்டும், பயிற்சி முகாம்கள் மற்றும் பயிற்சித் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று பர்வீன் விரும்புகிறார்.

பர்வீன் இசுலாமாபாத்திற்கு அருகில் இரண்டு மன்றங்களை நடத்தி வருகிறார். இங்கு பெண்களுக்கான பயிற்சி அமர்வுகளை நடத்துகிறார். இவை தவிர பர்வீன் பல்கலைக்கழகங்களில் ஊக்கமளிக்கும் உரைகளையும் வழங்குகிறார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Says, 台灣大樂透. "Nazia Parveen, FATA's First Female Athlete « Across the Durand" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-05.
  2. Bensemra, Zohra. "The other Pakistan". The Wider Image (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-05.
  3. "Living on the edge: Extreme sports, extreme Nazia Parveen". The Express Tribune (in ஆங்கிலம்). 2014-01-10. பார்க்கப்பட்ட நாள் 2020-12-05.
  4. "DIFFERENCE MAKER: Nazia Parveen: determined to change the image of the bechari aurat". Pakistan Today. 22 May 2016. பார்க்கப்பட்ட நாள் 6 December 2020.{{cite web}}: CS1 maint: url-status (link)
  5. 5.0 5.1 5.2 kahaniastruggle.wixsite.com https://kahaniastruggle.wixsite.com/mysite/single-post/2017/12/13/Climbing-to-the-top. பார்க்கப்பட்ட நாள் 2020-12-05. {{cite web}}: Missing or empty |title= (help)
  6. APP (2011-03-16). "Passionate Pakistani takes climbing to new heights". DAWN.COM (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-05.
  7. "I voted for women power 50". WomenPower50. பார்க்கப்பட்ட நாள் 2020-12-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாசியா_பர்வீன்&oldid=3931264" இலிருந்து மீள்விக்கப்பட்டது