நவ்ரோதி தேவி
நவ்ரோதி தேவி (Nauroti Devi) என்பவர் இந்தியாவில் இராசத்தானைச் சேர்ந்த ஒரு தலித் பெண் சமூக ஆர்வலரும் அரசியல்வாதியும் ஆவார். இவர் 2010-ஆம் ஆண்டில் தனது கிராமமான ஹர்மதா சர்பஞ்சாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]தேவி இராசத்தானின் அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள கிஷன்கர் வட்டத்தில் உள்ள இந்தியக் கிராமமான ஹர்மதாவில் பிறந்தார். இவரது குடும்பம் பின்தங்கிய தலித் குடும்பமாக இருந்தது. இவரால் பள்ளிக்குச் செல்லவோ அல்லது முறையான கல்வியைப் பெறவோ முடியவில்லை. மேலும் ஓர் இளம் பெண்ணாகச் சாலை கட்டுமான தளத்தில் கல் வெட்டுபவராகப் பணியாற்றினார்.[1]
செயல்பாடு
[தொகு]கல் வெட்டும் தொழிலாளியாகப் பணிபுரியும் போது, கட்டுமான தளத்தில் ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு இடையிலான ஊதிய முரண்பாடு, ஒட்டுமொத்த நியாயமான ஊதியத்தை எதிர்த்து தேவி தனது சக ஊழியர்களுடன் போராடினார்.[1][2] ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன், நவ்ரோதி இதுதொடர்பான பிரச்சாரத்திற்குத் தலைமை தாங்கி, இந்தப் பிரச்சனையினை இந்திய உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றார்.[3]
கல்வி
[தொகு]உச்ச நீதிமன்ற வழக்கில் வெற்றி பெற்ற பிறகு, பங்கர் ராய் தொடங்கிய பேர்பூட் கல்லூரியில் கல்வி கற்கத் தேவி தூண்டப்பட்டார். இங்கு இவர் கல்வியறிவு பயிற்சித் திட்டத்தின் கீழ் கணினியைப் பயன்படுத்துவதற்கான அடிப்படைகளைக் கற்றுக்கொண்டார். இவர் தனது சமூகத்தைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகளுக்குக் கணினிகளில் தொடர்ந்து பயிற்சி அளித்து வருகிறார்.[1]
அரசியல்
[தொகு]தேவி 2010 இல் ஹர்மதாவின் சர்பஞ்சாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது ஐந்தாண்டுக் காலப்பகுதியில் பிராந்திய வளர்ச்சியிலும், கழிப்பறைகள், வீடுகள் போன்ற குடிமை வசதிகளைச் சமூகத்திற்குக் கொண்டு வருவதிலும் பணியாற்றினார். சர்பஞ்சாக, தேவி ஹர்மதாவில் மதுபான மாஃபியாவுக்கு எதிராகப் போராடினார். மேலும் அரசு சுகாதார மையத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை மீட்டமைத்தார். இங்கு ஒரு சுகாதார மையத்தைக் கட்டுவதற்காக வேலி அமைத்தார். தனது பதவிக்காலத்தின் முடிவில் இவர் பஞ்சாயத்துக் கணக்கில் பதின்மூன்று லட்சம் ரூபாயை உபரி வைத்திருந்தார்.[4] 1982 முதல் மஸ்தூர் கிசான் சக்தி சங்கதனில் தீவிரமாக உறுப்பினராக இருந்து வரும் இவர், இராசத்தானில் தகவல் அறியும் உரிமை பிரச்சாரத்திலும் பங்கேற்றார். இது 2005-ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்ட தகவல் அறியும் உரிமையின் சட்டத்திற்கு அடித்தளம் அமைத்தது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "From a Stone-Cutter to a Computer-Educated Sarpanch – The Fascinating Story of Nauroti Devi" (in en-US). The Better India. 2016-06-21. http://www.thebetterindia.com/58577/nauroti-devi-computer-literacy-rajasthan/.
- ↑ "The extraordinary life of a Dalit woman sarpanch" (in en). The Hindu. http://www.thehindu.com/news/cities/Visakhapatnam/extraordinary-life-of-a-dalit-woman-sarpanch/article8191686.ece.
- ↑ "Stone Cutter to Village Sarpanch: The Extraordinary Story of Nauroti Devi" (in En). VagaBomb. 2016-06-22. http://www.vagabomb.com/Stone-Cutter-to-Village-Sarpanch-and-Computer-Trainer-The-Extraordinary-Story-of-Nauroti-Devi/.
- ↑ "These 5 Women Panchayat Leaders Have Made Extraordinary Contributions To Their Villages". Women's Web: For Women Who Do. 2016-12-05. Retrieved 2017-06-25.