நவீன்சந்திர சென்
நவீன்சந்திர சென் | |
|---|---|
| பிறப்பு | 10 பெப்ரவரி 1847 சிட்டகொங், வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் |
| இறப்பு | 23 சனவரி 1909 (அகவை 61) கொல்கத்தா, Bengal Province, பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் |
| பணி | கவிஞர் |
நவீன்சந்திர சென் (Nabinchandra Sen) இந்தியாவைச் சேர்ந்த ஒரு வங்காளக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். இரவீந்திரநாத் தாகூரின் வருகைக்கு முந்தைய காலகட்டத்தில் வாழ்ந்த மிகச்சிறந்த கவிஞர்களில் ஒருவராக இவர் பெரும்பாலும் கருதப்படுகிறார்.[1][2] பிளாசிப் போரையும், இந்தியாவில் பிரித்தானிய ஆட்சியின் வருகையையும் இவர் "முடிவற்ற இருள் சூழ்ந்த ஓர் இரவு" என்று வருணித்தார்.[3]
வாழ்க்கை
[தொகு]
நவீன்சந்திரர், 1847 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி, சிட்டகொங்கில் உள்ள ரௌசான் துணைகோட்டம் நோவாபாராவில்[4] ஒரு வைத்திய குடும்பத்தில் பிறந்தார்.[5]
இவர் சிட்டகாங் கல்லூரி பள்ளியில் கல்வி பயின்றார். 1863-ஆம் ஆண்டில் பள்ளி இறுதித் தேர்வு நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றார். 1865-ஆம் ஆண்டில், கொல்கத்தாவில் உள்ள மாநிலக் கல்லூரியில் எப்.ஏ தேர்வில் தேர்ச்சி பெற்றார். 1868-ஆம் ஆண்டில், செனரல் அசெம்பிளிசு நிறுவனத்திலிருந்து கொல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு தற்போது இசுக்காட்டிசு தேவாலயக் கல்லூரி என அழைக்கப்படும் கல்லூரியில் தனது இளங்கலைப் பட்டத்தைப் பெற்றார். பின்னர் மேற்கு வங்க உயர்நிலைக் கல்வி மன்றம் நடத்தும் அரே பள்ளியில் குறுகிய காலம் ஆசிரியராகப் பணியாற்றிய பிறகு, காலனித்துவ நிர்வாகத்தில் ஒரு துணை நீதிபதியாகப் பணியில் இணைந்தார். சென் 1904-ஆம் ஆண்டில் பணி ஓய்வு பெற்றார். 1909-ஆம் ஆண்டு ஜனவரி 23 அன்று காலமானார்.
படைப்புகள்
[தொகு]சென்னின் தொடக்ககாலக் கவிதைகள், பியாரி சரண் சர்க்கர் என்பவரால் தொகுத்து வெளியிடப்பட்ட கல்வி அரசிதழ் இதழில் பிரசுரமாயின. முதல் கவிதைத் தொகுப்பான அபகாசு ரஞ்சனி 1871ஆம் ஆண்டில் வெளியானது. அபகாசு ரஞ்சனி தொகுப்பின் இரண்டாம் பாகம் 1877ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. 1875 ஆம் ஆண்டில் வெளிவந்த நீளமான காவியக் கவிதையான பிளாசிர் இயூத்தா (பிளாசி போர்) என்பது, சிராச் உத்-தௌலாவின் ஆதரவாளர்கள் இவருக்கு இழைத்த துரோகத்தையும், இவரை அவரது உடனிருந்தவர்களே துரோகம் செய்ததும், இவர் பிளாசிப் போரில் தோல்வியடைந்ததையும் எண்ணி வருந்தி எழுதப்பட்ட படைப்பாகும். இந்தக் கவிதை வங்காள மக்களிடையே தேசிய உணர்வை இலக்கியத்தில் வெளிப்படுத்திய முக்கியமான படைப்பாக கருதப்படுகிறது. இதன் மூலம் இவர் வலிமையான வங்காளக் கவிஞராகப் புகழ் பெற்றார். மைக்கேல் மதுசூதன் தத்தின் சமகாலத்தவரான நவீன்சந்திரர், வங்க மொழியில் காவியக் கதைமரபை பிரபலப்படுத்தியதற்காகவும் அறியப்படுகிறார். மகாபாரதத்தை மூன்று பாகங்கள் கொண்ட காவியமாகப் புதிய கோணத்தில் மறுவிளக்கம் அளித்துப் படைத்தார். அவை: ரைவதகம் (1887), குருசேத்திரம் (1893), மற்றும் பிரபாசு(1896) என்பனவாகும். இக்காவியங்களில், பேரரசுகளின் வீழ்ச்சிக் காலகட்டத்தில் கிருட்டிணரே முதன்மைப் பாத்திரமாகவும் சாகச வீரராகவும் சித்தரிக்கப்பட்டுள்ளார். இயேசு, புத்தர் மற்றும் கிளியோபாட்ரா ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகளை வங்க மொழியில் இவர் எழுதினார். மேலும் பகவத் கீதை மற்றும் மார்க்கண்டேய புராணத்தை செய்யுள் வடிவில் மொழிபெயர்த்தார். நவீன்சந்திரரின் செய்யுள் வடிவிலான ஒரு நாவலான பானுமதி மற்றும் இவரது வெளிநாட்டுப் பயண அனுபவ கடிதங்களின் தொகுப்பான பிரபேசர் பத்ரா ஆகிய படைப்புகளும் இவருக்குப் பெரும் புகழைத் தேடித்தந்தன. ஐந்து பாகங்கள் கொண்ட சுயசரிதையான அமர் சிபான் என்னும் எனது வாழ்க்கை, பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த வங்க இலக்கியவாதிகளின் அரசியல் மற்றும் சமூக இலட்சியங்களை ஆவணப்படுத்தும் ஒரு முக்கிய ஆவணமாகத் திகழ்கிறது.[1][2]
காவியங்கள்
[தொகு]காவிய முத்தொகுப்பு புதிய மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்டது.
- ரைவடக்கு
- குருச்சேத்ரா
- புரோவாசு [2]
கவிதை
[தொகு]- அபகாசு ரஞ்சனி (1871)
- பிளாசிர் இயூத்தா (1875)
வாழ்க்கை வரலாறுகள்
[தொகு]- அமிதாபா - (புத்தரின் வாழ்க்கை வரலாறு)
- கிறிசுச்டரா இயிபானி - (இயேசு கிறித்துவின் வாழ்க்கை வரலாறு)
- கிளியோபாட்ரா - (கிளியோபாட்ராவின் வாழ்க்கை வரலாறு)[2]
சுயசரிதை
[தொகு]- பிரபேசர் பத்ரா
- அமர் சிபான், 5 தொகுதிகளில் [2]
கவிதை மொழிபெயர்ப்புகள்
[தொகு]- கீதா
- சண்டி
கவிதை நாவல்
[தொகு]- பானுமதி [1]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 3 Guha, Bimal. "Sen, Nabinchandra". Banglapedia. Retrieved 26 July 2015.
- 1 2 3 4 5 "Distinguished alumni of the University of Calcutta". University of Calcutta. Archived from the original on 21 November 2011.
- ↑ "British Occupation of Bengal Indian History". 24 August 2016.
- ↑ "Sen, Nabinchandra". Banglapedia.
- ↑ Sen, Amiya P. (1993). Hindu Revivalism in Bengal, 1872–1905: Some Essays in Interpretation (in ஆங்கிலம்). Oxford University Press. p. 132. ISBN 978-0-19-563140-1.
வெளி இணைப்புகள்
[தொகு]- Works by Nabin Chandra Sen at திற நூலகம்
- Sen, Nabin Chandra at the West Bengal Public Library Network
