உள்ளடக்கத்துக்குச் செல்

நவாப் ராஜேந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நவாப் ராஜேந்திரன் ஒரு பிரபல கேரள பொதுப்பணியாளர். பொதுநல வழக்குகள் தொடுப்பதை தன் சமூகப்பங்களிப்பாகக் கொண்டிருந்தார். பல பிரபல ஊழல்களை வெளிக்கொண்டு வந்தார். பொதுமக்களுக்கான சட்டங்களை உருவாக்க வழியமைத்தார்.

வாழ்க்கை

[தொகு]

1950ல் பய்யன்னூர் என்ற ஊரில் பிறந்தார். குஞ்ஞிராம பொதுவாள் இவரது தந்தை. தார் பார்க்கவியம்மா. ஆரம்பத்தில் ஓர் இதழாளர். திரிச்சூரில் இருந்து வெளியிடப்பட்ட நவாப் என்ற இதழை நடத்தினார். பின்னர் பொதுநலவழக்குகள் தொடுப்பதை தன் பணியாகக் கொண்டார். காவல்துறையினர் லஞ்சம் பெற்றுக்கொண்டு குற்றவாளிகளை விடுவித்த தட்டில் எஸ்டேட் கொலை வழக்குக்கு எதிராக நீதிமன்றம் சென்ற ராஜேந்திரன் உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட காரணமாக அமைந்தார். இக்காலகட்டத்தில் குற்றவாளிகளால் எட்டுமுறை கடுமையாக தாக்கப்பட்டார். அதன்பின் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுநலவழக்குகள் தொடுத்துள்ளார்.

அவற்றுள் முக்கியமானவை அவசர நிலை காலகட்டத்தில் கொல்லப்பட்ட ராஜன் என்ற பொறியியல் மாணவனின் மரணத்துக்கு விளக்கம் கோரி அவர் நடத்திய சட்டப்போர். மொய் வசூலுக்காக எம் பி கங்காதரன் என்ற அமைச்சர் தன் மைனரான மகளுக்கு திருமணம் செய்து வைத்தமைக்கு எதிராக நடத்திய சட்டப்போரால் அமைச்சர் பதவி இழக்க நேர்ந்தது. குடிநீர் குழாய் ஊழல், இடமலையாறு மின்சார ஊழல் என பல ஊழல்களை ராஜேந்திரன் வெளிக்கொணர்ந்தார். இடமலையாறு ஊழலில் சம்பந்தப்பட்ட மாநில அமைச்சர் பாலகிருஷண பிள்ளைக்கு ராஜேந்திரனின் முயற்சியால் கிட்டத்தட்ட இருபதாண்டு சட்டப்போருக்குப் பின் 2011ல் உச்சநீதிமன்ற ஆணைப்படி சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ராஜேந்திரன் நீதிபதிகள், அமைச்சர்கள் என எல்லாருக்கும் எதிராக வழக்குகள் தொடுத்திருக்கிறார்

1994ல் நவாப் ராஜேந்திரனை ‘பொதுமக்களுக்கு தொந்தரவு அளிப்பவர்’ என அறிவிக்கக் கோரி காவல்துறை தொடர்ந்த வழக்கில் நீதிபதி எஸ் சுகுமாரன் “நவாப் ராஜேந்திரன் ஒரு தனிநபர் இயக்கம். அவரைப்பற்றி போலீஸ் தரப்பில் சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் வெறும் அவதூறுகள் மட்டுமே. அவர் எந்த தனிநபருக்கும் எதிராக போராடுவதில்லை. சமூக அநீதிகளை மட்டுமே சுட்டிக்காட்டுகிறார். அவர் நம் சமூகத்தின் மனசாட்சி” என்று அவரை வெகுவாகப் பாராட்டி சாதகமாக தீர்ப்பு வழங்கினார்.

நவாப் ராஜேந்திரனைப்பற்றி அவதூறுகள் நிறைய வந்துள்ளன. முதலாளிகளின் ஆதரவு ஊடகங்கள் அவர் பணம் கேட்டு மிரட்டுபவர் என்று சித்தரித்தன. அவரால் அதிகமும் பாதிக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் கெ. கருணாகரன் அப்படி பல வருடம் பிரச்சாரம் செய்தார். ஆனால் ராஜெந்திரன் கடைசிவரை எழையாகவே வாழ்ந்து மறைந்தார்

மரணம்

[தொகு]

புற்றுநோய் வந்து கடைசிநாட்களில் துன்பப்பட்ட நவாப் 2003 அக்டோபர் 10 ஆம் தேதி திருவனந்தபுரம் அருகே ஒரு மலிவான விடுதியறையில் எவராலும் கவனிக்கப்படாமல் சிலநாட்கள் கிடந்தார். கண்டெடுக்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் மறைந்தார்.

விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்

[தொகு]

நவாப் ராஜேந்திரனைப்பற்றி நிறைய கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. இதழாளர் கமல்ராம் சஜீவ் எழுதிய நவாப் என்ற நூல் மிகவும் புகழ்பெற்றது.

நவாப் ராஜேந்திரனுக்கு ரோட்டரி மானவசேவா விருது 2000 த்தில் வழங்கப்பட்டது. அதை அவர் எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் ஒரு பிண அறை கட்ட நன்கொடையாக அளித்தார்.

தன் சடலத்தை மருத்துவக்கல்லூரி சோதனைச்சாலைக்கு அளிக்க வேண்டும் என்ற ராஜேந்திரனின் கோரிக்கைக்கு ஏற்ப அவரது உடல் திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரிக்கு அளிக்கப்பட்டது. ஆனால் அவரது சடலம் ஏற்றுக்கொள்ளப்படாமல் வெளியே போடப்பட்டிருந்தது. அழுகிய உடலை ஊரார் மரியாதையாக அடக்கம் செய்தனர். திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி மீது இது தொடர்பாக ஒரு வழக்கு தொடரப்பட்டது.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நவாப்_ராஜேந்திரன்&oldid=3370177" இலிருந்து மீள்விக்கப்பட்டது