நவநீத சேவை
நவநீத சேவை என்பது தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் கருட சேவைக்கு அடுத்த நாளன்று நடைபெறுகின்ற, 15 கோயில்களின் பெருமாள்கள் உற்சவ மூர்த்தியாக ஒரே நாளில் ஒருவர் பின் ஒருவராகக் காட்சி தருகின்ற விழாவாகும்.
வெண்ணெய்த்தாழி உற்சவம்
[தொகு]நவநீத சேவையை வெண்ணெய்த்தாழி உற்சவம் என்றும் அழைப்பர். மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் வெண்ணெய்த்தாழி உற்சவம் ஒவ்வோராண்டும் (18 நாட்கள் நடைபெறுகின்ற பங்குனிப் பெருவிழாவின்போது) நடைபெறுகிறது. நவநீதி சேவை என்றழைக்கப்படுகின்ற இந்த உற்சவத்தின்போது காலையில் பெருமாள் எழுந்தருளி மன்னார்குடியிலுள்ள நான்கு வீதிகள், மேல ராஜ வீதி, பெரிய கடைத்தெரு, பந்தலடி வழியாக வெண்ணெய்த்தாழி மண்டபம் சென்றடைவார். அப்போது பக்தர்கள் சாலையின் இரு புறத்திலும் நின்றுகொண்டு கோபாலா, கோபாலா என்று கூறிக்கொண்டே, உற்சவர் மீது வெண்ணெயைச் சாற்றி வழிபடுவர். [1] இவ்வாறே பெரும்பாலான வைணவக் கோயில்களில் இந்த உற்சவம் நடைபெறுகிறது.
கருட சேவை
[தொகு]தஞ்சாவூரில் 1934 ஆம் ஆண்டு முதல் இக்கருட சேவை நடைபெற்று வருகிறது. மூன்று திவ்ய தேசப் பெருமாள் கோயில் உட்பட 24 கோயில்களைச் சேர்ந்த உற்சவ மூர்த்திகள் வெண்ணாற்றங்கரையிலிருந்து புறப்பட்டு தஞ்சாவூர் கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி ஆகிய வீதிகளில் எழுந்தருளுகின்றனர். [2]
15 பெருமாள்கள்
[தொகு]இவ்விழாவின்போது தஞ்சாவூரிலுள்ள
- நீலமேகப்பெருமாள்,
- நரசிம்மப்பெருமாள்,
- மணிக்குன்னப்பெருமாள்,
- கல்யாண வெங்கடேசப்பெருமாள்,
- மேலராஜவீதி நவநீதகிருஷ்ணன்,
- எல்லையம்மன் தெரு ஜனார்த்தன பெருமாள்,
- கரந்தை யாதவகண்ணன்,
- கீழராஜவீதி வரதராஜபெருமாள்,
- தெற்கு வீதி கலியுக வெங்கடேசப் பெருமாள்,
- பள்ளியக்ரகாரம் கோதண்டராமபெருமாள்,
- மானம்புச்சாவடி நவநீதகிருஷ்ணன்,
- பிரசன்ன வெங்கடேசபெருமாள்,
- மேலஅலங்கம் ரெங்கநாதபெருமாள்,
- படித்துறை வெங்கடேசபெருமாள்,
- கோட்டை பிரசன்ன வெங்கடேச பெருமாள்
ஆகிய 15 கோயில்களைச் சேர்ந்த பெருமாள்கள் கலந்துகொள்கின்றனர். [3]
நவநீத சேவை
[தொகு]தஞ்சாவூரில் ஒவ்வோராண்டும் கருட சேவைக்கு அடுத்த நாளன்று நவநீத சேவை கொண்டாடப்படுகிறது. வெண்ணெய்தாழி மகோற்சவம் என்று அழைக்கப்படுகின்ற நவநீத சேவையில், கோயில்களிலிருந்து புறப்பட்டு கொடிமரத்து மூலையை வந்து அடைகிறார்கள். 15 பெருமாள்களும் அந்தந்தக் கோயிலிலிருந்து புறப்பட்டுக் கொடிமரத்து மூலையினை வந்தடைந்து பின்னர் அங்கிருந்து கீழராஜவீதி, தெற்கு ராஜவீதி, மேலராஜவீதி, வடக்கு ராஜவீதி ஆகிய வீதிகள் வழியாக அனைவருக்கும் காட்சி தருவர். தொடர்ந்து அவரவர் கோயில்களுக்குத் திரும்புவர். [4] 2017இல் இவ்விழா (16 சூன் 2017) கொண்டாடப்பட்டது. [5] [6]
சிறப்பு
[தொகு]பொதுவாக பெருமாள் கோயில்களில் அந்தந்தக் கோயில்களில் நவநீத சேவை நடைபெறுவது வழக்கம். தஞ்சாவூரில் 15 பெருமாள் கோயில்களைச் சேர்ந்த உற்சவர்கள் வெண்ணைய்த்தாழியுடன் நான்கு வீதியையும் சுற்றிவருவது இவ்விழாவின் சிறப்பாகும். 15 கோயில்களைச் சேர்ந்த பெருமாள்களையும் ஒரே இடத்தில் தரிசிக்கின்ற வாய்ப்பு இங்கு அமைகின்றது. நான்கு வீதிகளில் ஏதாவது ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்றால் தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக பெருமாள்கள் வரிசையில் வருவதைக் காணமுடியும்.
ஆதாரங்கள்
[தொகு]- ↑ ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோயிலில் வெண்ணெய்த்தாழி உத்ஸவம், தினமணி, 2 ஏப்ரல் 2017
- ↑ 24 ஆலயங்களில் கருட மகோத்சவம், தினமணி, 9 சூன் 2017
- ↑ தஞ்சையில் 15 பெருமாள்கள் நவநீத சேவை, மாலை மலர், 30 மே 2016[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ 24 பெருமாள்கள் கருட சேவை: ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம், மாலை மலர், 16 சூன் 2017
- ↑ வெண்ணைத்தாழி உற்சவம், தினமலர், 16 சூன் 2017
- ↑ தஞ்சாவூரில் 15 பெருமாள் கோயில்களில் நவநீத சேவை, தினமணி, 17 சூன் 2017