நயினாதீவுக் கல்வெட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நயினாதீவுக் கல்வெட்டு என்பது, யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு அப்பால் அமைந்துள்ள நயினாதீவில் உள்ள அம்மன் கோயிலில் உள்ள ஒரு கல்வெட்டு ஆகும். கல்லின் இரண்டு பக்கங்களிலும் பொறிப்புக்களைக் கொண்டிருந்த இக்கல்வெட்டு, இரண்டாக உடைந்த நிலையிலேயே கண்டெடுக்கப்பட்டது. கீழ்ப்பகுதி கோயில் சுவரின் ஒரு பகுதியாகக் கட்டப்பட்டுள்ளது. மற்றப் பகுதி கோயில் கட்டப்பட்ட காலத்தில் சிற்பிகள் தமது ஆயுதங்களைத் தீட்டுவதற்காகப் பயன்பட்டதனாற் போலும் ஒரு பக்கத்து எழுத்துக்கள் வாசிக்க முடியாதபடி அழிந்து போய்விட்டன. ஆனால், இத்துண்டின் பின்பக்கம் நிலத்துடன் இருந்ததால் எழுத்துக்கள் சேதமடையாமல் தப்பிவிட்டன.[1]

1920களில் வெளிவந்த பண்டைய யாழ்ப்பாணம் (Ancient Jaffna) என்னும் தனது ஆங்கில நூலில் இது பற்றிக் குறிப்பிட்ட செ. இராசநாயகம், அதன் உள்ளடக்க வாசிப்பையும் அடிக்குறிப்பாக வெளியிட்டார்.[1] 1949ல் இலங்கைத் தொல்பொருட் திணைக்களத்தினர் இக்கல்வெட்டின் மைப்பிரதி ஒன்றை எடுத்தனர். இதை அடிப்படையாகக் கொண்டு 1989ல் இக்கல்வெட்டை வாசித்த கா. இந்திரபாலா, யாழ்ப்பாணத்துச் சாசனங்கள் பற்றித் தான் எழுதிய கட்டுரையில் அதை வெளியிட்டார்.[2]

முதலாம் பரக்கிரமபாகு என்னும் சிங்கள அரசனால் வெளியிடப்பட்ட இக்கல்வெட்டுத் தமிழ் மொழியிலும், சில பகுதிகள் சமசுக்கிருத மொழியிலும் உள்ளன. இதன் எழுத்தமைதி கொண்டும், பராக்கிரமபாகுவின் ஆட்சிக் காலத்தை அடிப்படையாக வைத்தும் இக்கல்வெட்டு 12 ஆம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்டது எனக் கருதப்படுகிறது. பிறநாட்டு வணிகர்களுக்கான வசதிகள், வரிகள் என்பன குறித்து இக்கல்வெட்டு எடுத்துக் கூறுகிறது.[3] நெடுந்தீவு, நயினாதீவு போன்ற பகுதிகளில் வணிகக் கப்பல்கள் அடிக்கடி கரைதட்டிச் சேதம் அடைந்து வந்ததால், நயினாதீவில் இது பொறிக்கப்பட்டிருக்கலாம் என இராசநாயகம் கருதினார்.[1] ஆனால், இது ஊர்காவற்றுறையிலேயே முதலில் பொறிக்கப்பட்டது என்றும் பின்னர் பிற்காலத்தில் இது நயினாதீவுக்குக் கொண்டு போயிருக்கலாம் என்பதும் இந்திரபாலாவின் கருத்து.[2]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Ras<anayagam, C., 1993. p.208.
  2. 2.0 2.1 இந்திரபாலா, கா., 1989. பக்.44.
  3. இந்திரபாலா, கா., 1989. பக்.43.

உசாத்துணைகள்[தொகு]

  • இந்திரபாலா, கா., யாழ்ப்பாணத்துக் கல்வெட்டுக்கள், சிந்தனை, மலர் II(4), 1989.
  • பத்மநாதன், சி., இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள், இந்துசமயக் கலாச்சார அலுவல்கள் திணைக்களம், கொழும்பு, 2006.
  • Rasanayagam, C., Ancient Jaffna, Asian Educational Servises, New Delhi, 1993.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நயினாதீவுக்_கல்வெட்டு&oldid=3765972" இலிருந்து மீள்விக்கப்பட்டது