நம்பக மேடைப் பகுதி

நம்பக மேடைப் பகுதி ( Trusted Platform Module - TPM ) என்பது கணினிக்குள் இருக்கும் ஒரு சிறிய மின்னணு தொகுசுற்று (Chip) பாதுகாப்பு கருவி ஆகும்[1]. இது கணினியின் பாதுகாப்பைக் கட்டுப்படுத்தி, முக்கியமான இரகசிய தகவல்களை மிகச் சரியாகவும் பாதுகாப்பாகவும் சேமிக்க உதவி அரணாக செயல்படுகிறது. கணினியில் சேமித்து வைக்கும் கடவுச்சொற்கள், கடவுச்சீட்டுகள், மறையாக்க சாவிகள் (Encryption keys) போன்ற முக்கியமான தரவுகளை பாதுகாப்பாக வைத்திருக்க இந்த நம்பக மேடைப் பகுதி (TPM ) உதவுகிறது. அதாவது, கணினியில் உள்ள முக்கியமான தகவல்கள் வெளி நபர்களால் திருடப்படாமல், அல்லது முறையற்ற வகையில் பயன்படுத்தப்படாமல் இது தடுக்கிறது.
செயல்பாடு
[தொகு]கணினி இயங்கும் போது, 'நம்பக மேடைப் பகுதி' அதில் உள்ள குறியாக்க சாவிகளை சரிபார்க்கும். இந்த சாவிகள் சரியாக இருந்தால் மட்டுமே கணினி தொடர்ந்து இயங்க அனுமதிக்கும். இந்த சாவிகள் ஏதேனும் மாற்றப்பட்டிருந்தால் அல்லது தவறாக இருந்தால், கணினி இயங்காது. இது கணினியின் தொடக்க நிலையிலேயே பாதுகாப்பை உறுதி செய்கிறது.
அனைத்து நவீன கணினிகளிலும், குறிப்பாக விண்டோசு 11 (Windows 11) போன்ற புதிய இயங்குதளங்களை இயக்க நம்பக மேடைப் பகுதி பதிப்பு 2.0 (TPM 2.0) கட்டாயம் தேவை. இது கணினியின் பாதுகாப்பை பன்மடங்கு அதிகரிக்கிறது. இணைய தாக்குதல்கள் அதிகரித்து வரும் இந்தக் காலகட்டத்தில், 'நம்பக மேடைப் பகுதி' போன்ற ஒரு வன்பொருள் அடிப்படையிலான பாதுகாப்பு முறை மிகவும் அவசியம். இது கணினியை தீங்கிழைக்கும் மென்பொருட்கள் (Malicious software) மற்றும் பிற இணைய அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. மொத்தத்தில், 'நம்பக மேடைப் பகுதி' என்பது கணினியின் நம்பகத்தன்மையையும், தரவு பாதுகாப்பையும் உறுதிசெய்யும் ஒரு முக்கியமான வன்பொருள் அம்சமாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Warren, Tom (2021-06-25). "Why Windows 11 is forcing everyone to use TPM chips" (in ஆங்கிலம்). The Verge. Retrieved 2021-11-13.